எலான் மஸ்க் இல்லாத இடத்தில் வேலை வாய்ப்பு தரும் இணையதளம்
இப்போது நாம் பார்க்க இருக்கும் புதுமையான வேலை வாய்ப்பு இணையதளத்தை அறிமுகம் செய்வதற்கு முன் சில தனிப்பட்ட குறிப்புகள்.
பேஸ்புக் மீது இருக்கும் கடுமையான விமர்சனங்கள் அளவிற்கு டிவிட்டர் மீது எனக்கு விமர்சனங்கள் கிடையாது. டிவிட்டர் எனக்கு பிடித்தமான சமூக ஊடக சேவை என்பதோடு, அதன் வரலாற்றிலும், வளர்ச்சியிலும் கொண்டாடடக்கூடிய அம்சங்கள் பல இருக்கின்றன. அதே போலவே, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் மீது இருக்கும் விமர்சனங்கள் அளவு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மீது எனக்கு விமர்சனங்கள் கிடையாது. மார்க் மீதும், அவர் வெற்றி மீதும் மரியாதை உண்டு. ஆனால், எலான் மஸ்க் பற்றி அந்த அளவு கூட அலட்டிக்கொண்டது இல்லை. எலான் மஸ்கை விட, ஸ்டீவ் ஜாப்சும் இன்னும் பிற தொழில்நுட்ப நிறுவனர்களே என் மனங்கவர்ந்தவர்கள்.
இந்த தனிப்பட்ட கருத்துகள் தேவையில்லை தான். ஆனால், எலான் மஸ்கிற்கு எதிரான ஒரு இணையதளத்தை அறிமுகம் செய்ய இருப்பதால் இந்த குறிப்புகள் அவசியமாகிறது. எலான் மஸ்க் மீதான எதிர்ப்பை இந்த தளம் பயன்படுத்திக்கொண்டிருப்பதால் மட்டும் அல்ல, அதில் உள்ள சுவாரஸ்யமான அம்சத்தை சுட்டிக்காட்ட இந்த முன்னோட்டம் அவசியமாகிறது.
இனி தளத்திற்கு வருவோம்.
ட்ருஅப்.இயோ (https://www.trueup.io/not-elon ) எனும் அந்த தளம் எலான் மஸ்க் இல்லாத நிறுவனங்களில் வேலைவாய்ப்பை தேடித்தருவதாக சொல்லி கவனத்தை ஈர்க்கிறது.
மஸ்க், டிவிட்டரை கையகப்படுத்திய பிறகு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் சர்ச்சைக்கும், எதிர்ப்புக்கும் உள்ளாகியிருக்கும் சூழலில், பலரும் மாஸ்டோடான், கூ போன்ற மாற்று டிவிட்டர் சேவைகளை நாடி வருகின்றன. இன்னும் பலர் மஸ்க் மீது கடுங்கோபம் கொண்டுள்ளனர். டிவிட்டரையும், அதன் சுதந்திர தன்மையையும் மஸ்க் பாழாக்கி, நிறுவனத்தை அழிவு பாதைக்கு கொண்டு செல்வார் என்றும் சூடான விமர்சனங்கள் இருக்கின்றன.
எலான் மஸ்கால் டிவிட்டர் எதிர்காலம் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், நீல நிற டிக்கிற்கு கட்டணம் வசூலிப்பது, வெளியேற்றப்பட்ட டொனால்டு டிரம்பை மீண்டும் கொண்டு வந்திருப்பது உள்ளிட்ட செயல்களுக்காக எலான் மஸ்கை ஒருவர் வெறுப்பு ஏற்படலாம். அந்த வெறுப்பு அல்லது விமர்சனத்தின் நீட்டிப்பாக எலான் மஸ்க் மற்றும் அவர் நிறுவனம் சார்ந்த சேவைகளை புறக்கணிக்கவும் ஒருவர் விரும்பலாம்.
இப்படி மஸ்க் எதிர்ப்பாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில், எலான் மஸ்க் தவிர வேறு யாருக்காக வேண்டுமானாலும் பணியாற்றுங்கள் என அழைப்பு விடுக்கும் வகையில் ஒரு இணைய பக்கத்தை அமைத்துள்ளது. எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங்க், போரிங், டிவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் தவிர மற்ற நிறுவனங்களின் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் இந்த பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஒரு வேலைவாய்ப்பு இணையதளத்தில் பார்க்க கூடிய வழக்கமான பக்கம் தான் என்றாலும், எலான் மஸ்க் தொடர்பான சர்ச்சையை அழகாக பயன்படுத்திக்கொண்டு கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த பக்கம் அமைந்துள்ளது. ( இந்த தளத்தில் பொது பகுதியில டெஸ்லா நிறுவன வேலைவாய்ப்புகளும் பட்டியலிடப்பட்டிருக்கிறது)
மஸ்க் எதிர்ப்பாளர்களை மட்டும் அல்ல, மஸ்க் இல்லாத இடத்தில் வேலைவாய்ப்பு எனும் கருத்தும் கூட கவனத்தை கவரும் அல்லவா?
இந்த உத்தி சரியானது தானா என்பது வேறு விஷயம். உண்மையில், இது இணையத்தில் மோசமான போக்காக உருவெடுத்திருக்கும் ரத்து கலாச்சாரத்தை ( கேன்சல் கல்ச்சர்) பிரதிபலிப்பது என்பதால் இதை ஆதரிப்பதற்கில்லை. ( மீண்டும் ஒரு பொறுப்பு துறப்பு)
மற்றபடி, இந்த வேலைவாய்ப்பு தளம் அதன் உள்ளடக்கத்திலும் செயல்பாட்டிலும் புதுமையானதாகவே இருக்கிறது. தொழில்நுட்ப நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளை மட்டும் அடையாளம் காட்டுவதாகவும், வேலைவாய்ப்புகளை நிகழ் நேரத்தில் பட்டியலிடுவதாகவும் இந்த தளம் குறிப்பிடுகிறது.
யூனிகார்ன் நிறுவனங்கள், தொலைதூர பணிகள், ஓபன் சோர்ஸ் நிறுவன பணிகள் என பல்வேறு தலைப்புகளில் வேலைவாய்ப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப நிறுவன வேலைவாய்ப்புகளை நாடுபவர்களுக்கு ஏற்றது.