உங்கள் டிஜிட்டல் சுவடுகளை நீக்கும் சேவை
இணையத்தில் அனாமதேயமாக இருப்பது என்றால், உங்கள் அடையாளத்தை மறைத்துக்கொள்ள வேண்டும் என்று பொருள் இல்லை. அதுவும் அவசியம் தான் என்றாலும், சராசரி இணையவாசிகளை பொருத்தவரை, அனாமதேயம் என்பது, தங்களை பின் தொடர்வதற்கான மற்றும் கண்காணிப்பதற்கான தரவுகளை அவர்களாகவே வாரி வழங்காமல் இருப்பது தான்.
தெரிந்தோ, தெரியாமலோ இணையவாசிகள் எல்லோரும் இதை தான் செய்து கொண்டிருக்கிறோம். தேடியந்திரங்கள் நம்மை பின் தொடர்கின்றன. சமூக ஊடகங்கள் நம்மை கண்காணிக்கின்றன. இ-காமர்ஸ் தளங்களும் நம்மைப்பற்றி அறிந்திருக்கின்றன. இவற்றுக்கான தரவுகளை நாம் தான் வழங்கி கொண்டிருக்கிறோம்.
இது பற்றி இன்னும் விரிவாக பார்க்கலாம். இப்போதைக்கு, இத்தகைய விழிப்புணர்வு தேவை என உணர்த்தும் புதிய இணைய சேவையை பார்க்கலாம். டாஸ்க்மேட்.டிஜிட்டல் (https://taskmate.digital/) எனும் அந்த சேவை, பயனாளிகளின் புகைப்படங்கள் மற்றும் கோப்புகள் தொடர்பான மேலதிக தரவுகளை நீக்க வழி செய்வதாக சொல்கிறது.
மேலதிக தரவு என்று சொல்லும் போது தொழில்நுட்ப நோக்கில் தரவுகளின் தகவல் என புரிந்து கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் இதை மெட்டாடேட்டா (Metadata) என்கின்றனர். மெட்டா டேட்டா பல வகைப்படும்.
பிக்டேட்டா ( ) என்கின்றனர் அல்லவா? அது வழக்கமான முறையில் கையாள முடியாத வகையிலான பெரிய அளவிலான தரவுகளை குறிக்கும். தமிழில் பெருந்தரவு!
பெருந்தரவுகள் போலவே மேலதிக தரவுகளும் முக்கியமானவை. எந்த ஒரு தரவு தொடர்பாக அறிந்து கொள்ளக்கூடிய தரவுகளை மெட்டாடேட்டா என்கின்றனர். உதாரணமாக, ஒரு புகைப்படம் என்பது தரவு என்றால், அந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது, எந்த இடத்தில் எடுக்கப்பட்டது, என்ன கோப்பு வடிவில் இருக்கின்றன என்பது மேலதிக தரவுகள்.
மேலதிக தரவுகள் பெரும்பாலும் கண்ணுக்கு புலனாவதில்லை என்றாலும், கம்ப்யூட்டர் இயந்திரங்களால் எளிதாக அணுக கூடியவை. இந்த நோக்கில் இவை தானாகவே உருவாக்கப்படுவதும் வழக்கமாக இருக்கிறது. உதாரணத்திற்கு புகைப்படம் எடுக்கும் போது, மேலதிக தரவுகள் தானாகவே உருவாக்கப்படுகின்றன.
மேலதிக தரவுகள், ஒரு கோப்பை வகைப்படுத்தி எளிதாக அடையாளம் காண உதவுகின்றன. ஆனால், இவை தனியுரிமை மீறலுக்கும் வழிவகுக்கலாம். ஏனெனில், ஒரு படம் அல்லது கோப்பின் மேலதிக தரவுகளை கொண்டு அதை உருவாக்கியவரை கண்டறியலாம், பின் தொடரவும் செய்யலாம், கண்காணிப்பையும் மேற்கொள்ளலாம்.
பெரும்பாலான நேரங்களில் மேலதிக தரவுகள் சிக்கல் இல்லாதவை. ஆனால் அவை பின் தொடர்பிற்கான வழியை கொண்டிருக்கின்றன என்பது கவனத்திற்கு உரியது. எனவே தான், கோப்புகள் அல்லது படங்களை இணையத்தில் பகிரும் முன், அவை தொடர்பான மேலதிக தரவுகளை நீக்கிவிடுவது நல்லது என டாஸ்க்மேட் தளம் பரிந்துரைத்து, அதற்கான வழியையும் முன்வைக்கிறது.
கோப்புகளை கழிவு சுத்தாமாக்குவது போல, இந்த தளம் அவற்றின் மேலதிக தரவுகளை அகற்றித்தருகிறது. இப்படி தரவு நீக்கம் செய்யப்பட்ட கோப்புகள் அல்லது படங்களை பகிர்ந்து கொள்ளும் போது, உங்கள் தனியுரிமை பாதுக்காப்பாக இருக்கும் என்கிறது.
உங்கள் தரவுகளை பாதுகாப்பாக பகிர விரும்பினால் இந்த சேவையை நாடலாம். ஆனால் இரண்டு எச்சரிக்கைகள் தேவை. முதல் எச்சரிக்கை, இப்படி தரவு நீக்கம் செய்யும் போது, கோப்பின் தன்மை பாதிக்கப்படலாம். எனவே, மூல கோப்பின் ஒரு பிரதியை உங்கள் வசம் வைத்துக்கொள்வது அவசியம்.
இரண்டாவது எச்சரிக்கை, தரவு நீக்கம் முக்கியம் என கருதும் போது, நம் தரவுகளை நீக்கும் பணியை மூன்றாம் தரப்பு சேவையிடம் ஒப்படைப்பது சரியா என யோசிக்க வேண்டும். இதை அறிந்தே, இந்த தளம் உங்கள் தரவுகளை பாதுகாப்பாக கையாள்கிறோம் என உறுதி அளிக்கிறது. இருப்பினும், இது ஒரு இடர் அம்சம் தான்.