பாதுகாப்பற்ற விமானங்களை தவிர்க்க சொன்ன இணையதளம்
எண்ணற்ற இணையதளங்களை கண்டறிந்து கொண்டே இருந்தாலும், எல்லா இணையதளங்களையும் அறிமுகம் செய்து விடுவதில்லை. ஒரு இணையதளத்தை தேர்வு செய்வதற்காக பல்வேறு இணையதளங்களை பரிசீலிப்பதோடு, எழுதப்படாமல் விடும் இணையதளங்களும் பல இருக்கின்றன.
குறிப்பிட்ட சில இணையதளங்கள் தேர்வே இல்லாமல் தங்களை சுய அறிமுகம் செய்து கொள்ளும். அதாவது, உடனே எழுதும் தன்மை கொண்டதாக இருக்கும். ஒரு சில இணையதளங்களை இன்னும் சிறப்பாக அறிமுகம் செய்ய மேலதிக தகவல்களுக்காக குறித்து வைத்துக்கொண்டு அறிமுகத்தை தள்ளி வைப்பதும் உண்டு.
பல தளங்கள் தகுதியற்றவை என விலக்கப்படுவதும் இயல்பானதே. ஒரு சில இணையதளங்களை எழுதலாமா? வேண்டாமா? என பரிசீலித்துக்கொண்டே இருப்பதும் உண்டு.
சில இணையதளங்களை பரிசீலித்து ஏதேனும் ஒரு காரணத்திற்காக எழுதாமல் விட்டதும் உண்டு. இப்படி தவிர்த்த இணையதளங்களில் ஒன்றான ’போயிங்பீகான்’ (BoeingBeGone.com ) எனும் இணையதளம் இப்போது நினைவுக்கு வருகிறது.
இந்த இணையதளத்தின் தன்மையை விவரித்தாலே, இந்த தளம் பற்றி குறிப்பிட அகமாதாபாத் விமான விபத்து தான் காரணம் என புரிந்து கொள்ளலாம்.
விமான டிக்கெட் முன்பதிவு தேடியந்திர வகையைச் சேர்ந்த இந்த தளம், வழக்கமான தேடியந்திரங்களில் இருந்து வேறுபட்டு, போயிங் அல்லாத விமாங்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய வழி செய்வதாக குறிப்பிட்டிருந்தது. போயிங் விமானங்கள் தொடர்பாக பாதுகாப்பு கவலை கொண்ட பயணிகளுக்கு போயிங் இல்லாத விமானங்களை பட்டியலிடுவதாக இந்த தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நேரடியாக இந்த தளத்தில் டிக்கெட் பதிவு செய்ய முடியாது. இதில் தேடி, போயிங் விமானங்களை வடிகட்டி குறிப்பிட்ட விமான சேவை நிறுவன தளங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒரு வர்த்தக நிறுவனம் தொடர்பான விமர்சன கருத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்திருந்த இந்த தளம் கவனத்தை ஈர்த்தாலும், குறிப்பிட்ட வர்த்தக நிறுவனத்தை விலக்கும் இந்த தளம் பற்றி எழுத தயக்கமாக இருந்தது. இந்த தளம், நையாண்டி நோக்கத்திலானதா அல்லது டிக்கெட் பதிவு சேவை அளிக்கும் தன்மை கொண்டதா என்பதையும் உறுதி செய்து கொள்ள முடியவில்லை.
இப்போது அகமதாபாத்தில் நடைபெற்ற கோர விமான விபத்து, விமானங்கள் பராமரிப்பு, விமானங்களின் பாதுகாப்பு பற்றி எல்லாம் பொதுவிவாதத்தை உண்டாக்கியிருக்கும் நிலையில், போயிங் விமானங்கள் மீதான விமர்சன நோக்கத்துடன் அமைக்கப்பட்ட இந்த தளம் மீண்டும் நினைவுக்கு வருகிறது.
இந்த தளத்தின் தன்மையும், அதன் நோக்கத்தையும் அறிமுகம் செய்து கொள்வதற்காக, அதன் முகவரியை அணுகினால் தளம் இப்போது பயன்பாட்டில் இல்லை. வெற்று விளம்பர டொமைன் தளமாக இருக்கிறது. இந்த தளத்தை தெரிந்து கொண்ட பிராடக்ட் ஹண்ட் தளத்தில் இதன் பழைய அறிமுகத்தை பார்க்க முடிகிறது.
இந்த தளத்தை உருவாக்கியவர் யார் என்பதையும் அறிந்து கொள்ள முடியவில்லை. இந்த தளம் காணாமல் போனதன் காரணமும் தெரியவில்லை. குழப்பமாக மட்டும் அல்ல வேதனையாகவும் தான் இருக்கிறது.
-
பி.கு: சாட்ஜிபிடி மற்றும் பிரெப்ளக்சிடி உள்ளிட்ட ஏஐ சேவைகளில் உள்ள பிரச்சனைகளையும் இந்த பின்னணியில் உணரலாம். போயிங்பிகான்.காம் தளத்திற்கு என்ன ஆனது என கூகுளில் தேடினால் அதன் ஏஐ சேவை மவுனம் சாதிக்கிறது. போயிங்பிகான் என்று மட்டும் குறிப்பிட்டு இதே கேள்வியை கேட்டால், போயிங் தொடர்பான விதவிதமான பதில்களை அளிக்கிறது. பிரெப்ளக்சிடியில் இதே கேள்வியை கேட்டால், பிராடக்ட் ஹண்ட் தளத்தின் அறிமுகத்தை சுட்டிக்காட்டி, இந்த தளம் பற்றி பதில் அளித்தாலும், இந்த தளம் இன்னமும் இருக்கிறதா என்பதை தேடல் முடிவுகளில் இருந்து அறிய முடியவில்லை எனும் பதிலை அளிக்கிறது. இந்த தளத்திற்கு என்ன ஆனது என்பதை நாம் தான் தேட வேண்டும். ஏஐ சேவைகள் இவற்றுக்கு எல்லாம் பயனளிக்காது.
-
இணைய ஆய்வுகளுக்கு இணைய காப்பகமான வேபேக்மெஷின் போல சிறந்தது வேறில்லை. போயிங்பீகான் தளத்தின் பழைய வடிவத்தை இதில் அணுகலாம்: https://web.archive.org/web/20240611034351/http://boeingbegone.com/