100 மடங்கு வேகத்தில் செய்தி வாசிப்பு !
புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும், ஆர்பர்இட்.ஏஐ (https://arborit.ai/global) செய்தி சேவையை தரவிறக்கம் செய்து பயன்படுத்தாமலே இந்த அறிமுகத்தை எழுதுகிறேன். ஏனெனில் எனக்கு ஏஐ செய்தி சேவைகளில் நம்பிக்கையும் இல்லை, ஆர்வமும் இல்லை. அதோடு ஏஐ செய்தி சேவை என்பது அப்படி ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே பலவிதங்களில் இருப்பது தான்.
இப்போது எங்கும் ஏஐ அலை வீசுவதால், ஏஐ துணையோடு செய்தி வாசிப்பு என்பது கவனத்தை ஈர்க்கும் என்பதால், இந்த பிரிவில் புதிய சேவைகள் அறிமுகமாகின்றன.
ஆர்பர் இட் இந்த வரிசையில் வருவதாக கருதலாம். செய்திகளை தெரிந்து கொள்ள மணிக்கணக்கில் நேரத்தை செலவிடாமல், நூறு மடங்கு வேகத்தில் சில நிமிடங்களில் தெரிந்து கொள்ளலாம் என்கிறது இந்த சேவை. ஆயிரக்கணக்கான செய்தி தளங்களில் இருந்து பல்வேறு தலைப்புகளில் செய்திகளை திரட்டி, அவற்றின் சாரம்சத்தை ஏஐ கொண்டு சுருக்கித்தருவதாகவும் சொல்கிறது.
இது தவிர, 360 கோணத்தில் ஒரு செய்தியை தெரிந்து கொள்ளும் வகையில் அதன் முக்கிய அம்சங்களை அளிப்பதாக சொல்கிறது.
செய்திகளை திரட்டித்தருவது என்பது இணையத்தில் புதிதல்ல. யாஹூ காலத்து வசதி இது. அண்மை காலத்தில், நியூஸ் ஹண்ட் , டெய்லிஹண்ட் போன்ற திரட்டிகள் இதை தான் செய்கின்றன. ஒரு வகையில் பஸ்பீட் மற்றும் ஸ்கூப்வூப் தளங்களையும் இந்த வரிசையில் சேர்க்கலாம்.
இந்த தளங்கள் எல்லாமே, அல்கோரிதம் துணையுடன் தான் செய்திகளை தொகுத்தளிக்கின்றன. ஆனால், இப்போது ஏஐ சுருக்க வசதி மூலம் எந்த நீள் கட்டுரையையும் சுருக்கி புரிந்து கொள்ளலாம். அந்த வகையில் ஆர்பர் இட் சேவை, செய்திகளின் ஏஐ சுருக்கத்தை அளிக்கிறது.
செய்தி சுருக்கம் எல்லாம் சரி, ஆனால், முக்கிய செய்திகளை குறிப்பாக கட்டுரைகளை அவற்றின் உணர்வை புரிந்து கொள்ள முழுவதும் வாசிப்பதே சரியானது. சாரம்சத்தை சில வரி சுருக்கங்களாக படிப்பது எல்லா நேரங்களிலும் ஏற்றதாக இருக்காது.
நிற்க, ஏஐ செய்தி சுருக்கத்தைவிட, செய்திகளின் சில வரி அறிமுகத்தை சுருக்கமாக அளித்து, மேலும் தகவல்கள் தேவை எனில் மூல தளங்களை சுட்டிக்காட்டும் இன்ஷார்ட்ஸ் (https://inshorts.com/ ) சேவையே சிறந்ததாக தோன்றுகிறது.
உங்கள் கருத்து என்ன?
· ஏஐ தொடர்பான வாசிப்பிற்கு!- ஏஐ ஒரு எளிய அறிமுகம், புத்தகம்
-