’அடா’வுக்காக ஒரு சாட்பாட்
நீங்கள் அறிந்திருக்கலாம், அடா லவ்லேஸ் தான் உலகின் முதல் புரோகிராமர் என்பதை. கவனிக்க முதல் பெண் புரோகிராமர் அல்ல, முதல் புரோகிராமரே ஒரு பெண் தான்!.
கம்ப்யூட்டர்களின் தந்தை என வர்ணிக்கப்படும் சார்லெஸ் பாபேஜ் உருவாக்கிய கணக்கிடும் இயந்திரத்திற்கான விளக்கத்தை எழுதிய அவரது சகாவான அடா லவ்லேஸ், அந்த இயந்திரத்தின் சாத்தியத்தை விவரிக்கும் நீள் குறிப்பையும் எழுதியிருந்தார். கணித சமன்பாடு ஒன்றுக்கு இயந்திரம் மூலம் தீர்வு காண்பதற்கான அந்த வழிகாட்டுதலே முதலில் எழுதப்பட்ட புரோகிராமாக கருதப்படுகிறது.
இந்த காரணத்திற்காகவே அடா லவ்லேஸ் கொண்டாடப்பட வேண்டிய முன்னோடியாக கருதப்படுகிறார். இணையத்தில் அடாவை விரிவாக அறிமுகம் செய்து கொள்ளவும், கொண்டாடவும் நிறைய இணையதளங்கள் இருக்கின்றன.
இந்த வரிசையில் ஒரு ஏஐ சாட்பாட்டும் இருக்கிறது. அடா லவ்லேசை கொண்டாடும் அடா தினத்தின்று 2019 ம் ஆண்டு இந்த சாட்பாட் உருவாக்கப்பட்டது.
அடாபாட் எனும் இந்த சாட்பாட்டுடன் நீங்கள் உரையாடலாம். அடா போன்ற முன்னோடிகளை கொண்டாடுவதற்கு சாட்பாட் ஏற்ற வழி.