இயற்கை ஒலிகளை கேட்க இந்த இணையதளம்
இயற்கை ஒலிகளை கேட்டு மெய்மறக்கும் அனுபவத்தை பெற விரும்பினால், எர்த்.எப்எம் (https://earth.fm/ ) தளத்தை அணுகலாம். ஏனெனில் இந்த தளம் இயற்கை ஒளிகளுக்கான இணைய வானொலியாக விளங்குகிறது. இயற்கை ஒலிகளுக்கான ஸ்பாட்டியை என்றும் வர்ணிக்கலாம்.
மண் வாசனை என்று சொல்வது போல, ஒவ்வொரு நிலப்பரப்பிற்கும் உரிய ஒலி உண்டல்லவா? அத்தகைய ஒலிகளை இந்த தளம் கேட்க வழி செய்கிறது. உதாரணமாக வனப்பகுதிக்கு சென்றால் பட்சிகளின் இசையை கேட்கலாம், மலைப்பகுதிக்கு சென்றால் அருவிகளின் சங்கீதத்தை கேட்கலாம். வயல்வெளிகளுக்கும் ஒரு ஓசை நயம் இருக்கிறது.
இப்படி நிலப்பரப்பு சார்ந்த இயற்கை ஒலிகளின் துல்லியமான பதிவுகளை இந்த தளத்தில் கேட்கலாம். அழகான பூமி வரைபடத்தின் இடைமுகம் மீது இயற்கை ஒலிகள் பதிவேற்றப்பட்டுள்ளன. விரும்பிய இடத்தில் கிளிக் செய்து அங்கு பதிவான ஒலிகளை கேட்கலாம்.
மேலும், பயனாளிகள் தங்கள் மனநிலை, கால அளவு, ஒலியின் தன்மை, நிலப்பரப்பு ஆகிய அம்சங்கள் அடிப்படையிலும் தேர்வு செய்து கொள்ளலாம்.
இயற்கை ஒலிகளை கேட்டு ரசிப்பது மனதுக்கு நல்லது என்பதோடு, சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்முறை ஒலிப்பதிவாளர்களால் ஒலிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒலிகளின் நிலப்பரப்பு பகுதிகளில் சுற்றுச்சூழல் நலனுக்காக பாடுபடும் அமைப்புகள் பற்றிய விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.