இணைய வேலைவாய்ப்பு கையேடு!
ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி எனும் கேள்வி யாருக்கு தான் இல்லை? ஆனால் இந்த கேள்விக்கு வழிகாட்டி எழுதப்படும் கட்டுரைகளும், பதிவுகளும் எந்த அளவு நடைமுறையில் பயன் அளிக்ககூடியவை எனத் தெரியவில்லை.
இதே கேள்வி உங்களுக்கும் இருந்து அதற்கான பதிலை தேடிக்கொண்டிருந்தால், ’ஹஸில்டைரக்டரி’ (https://www.hustledirectory.com/ ) தளம் உங்களுக்கான வழிகாட்டியாக அமையலாம்.
அடிப்படையில் இந்த தளம், இணையம் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வழிகளின் கையேடாக அமைகிறது. அதாவது, ஆன்லைனில் பணம் சம்பாதிக்க உதவும் சேவைகளையும், மேடைகளையும் ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறது.
மூன்று முக்கிய பிரிவுகளாக இந்த கையேடு அமைகிறது. முதல் பிரிவு, ஆன்லைன் பணம் சம்பாதிக்கும் வழிகள் சார்ந்தது. இரண்டாவது பிரிவு, ஆன்லைனில் சம்பாதிக்க உதவும் இணைய மேடைகளை தொகுத்தளிக்கிறது. மூன்றாவது பிரிவு ஆன்லைன் மூலம் செய்யக்கூடிய வேலைவாய்ப்பு தளங்களின் தகவல்களை தொகுத்தளிக்கிறது.
ஒரு பாட்டில் செல்வந்தராகும் தமிழ் திரைப்பட நாயகன் போல, இந்த தளத்தின் மூலம் நீங்கள் உடனே ஆன்லைனில் சம்பாதிக்க முடியாது. ஆனால், அதற்கான வழிகளையும், வாய்ப்புகளையும் தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு, உங்கள் திறமை காட்டும் வழி!