நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கன்னட இணையதளம்.
கேரள மாநிலம் இலக்கியத்திற்கும், திரைப்படத்திற்கும் அறியப்படுவது போலவே ஓபன் சோர்ஸ் எனப்படும் திறவுமூல மென்பொருள் இயக்கத்திற்காகவும் அறியப்படுகிறது. மற்றொரு அண்டை மாநிலமான கர்நாடகாவிலும், திறவுமூல மென்பொருளுக்கான தீவிர இயக்கம் இருப்பதை, கர்நாடக கட்டற்ற மென்பொருள் இயக்கம் (https://fsmk.org/ ) மூலம் அறிய முடிகிறது.
கட்டற்ற மென்பொருள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் இந்த இயக்கத்தின் அறிமுக பக்கத்தில், கட்டற்ற மென்பொருளுக்கான தெளிவான விளக்கமும் இடம்பெற்றுள்ளது.
கட்டற்ற மென்பொருள் என்றால், பயனாளிகளின் சுதந்திரத்தை மதிக்கும் மென்பொருள் என குறிப்பிடும் இந்த விளக்கம், இதன் பொருள் இலவசம் அல்ல என்கிறது. இலவச பிரியாணி அல்ல, மாறாக கருத்துச்சுதந்திரம் போன்றது!
கல்லூரி வளாகங்களில் துடிப்புடன் செயல்படும் இந்த இயக்கம், தொடர்ந்து கட்டற்ற மென்பொருள் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருவதை அறிய முடிகிறது. மக்களுக்கான செயற்கை நுண்ணறிவு எனும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றுள்ளது.
மேலும், கட்டற்ற மென்பொருளுக்கான சமூக விவாத பக்கத்தையும் கொண்டுள்ளது.
ஆங்கிலத்தில் பிரதானமாக தகவல்கள் இடம்பெற்றிருந்தாலும் உள்ளூர் மொழியான கன்னடத்திலும் தகவல்களை அணுகலாம்.
-சில ஆண்டுகளுக்கு முன் இணையத்தின் சுருக்கிய வடிவத்தை அளிக்கும் பிரிபேசிக்ஸ் திட்டத்தை பேஸ்புக் கொண்டுவந்த போது வெடித்த இணைய சமநிலைக்கான போராட்டத்தின் போது, இந்த இயக்கமும் தீவிரமாக பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.