கோவை செய்திகளுக்கு ஒரு இணையதளம் - https://simplicity.in/
இணையம் எனும் மாபெரும் வலைப்பின்னல் தனித்தன்மையானது. மார்ஷல் மெக்லுஹான் சொன்னது போல, அது உலகை ஒரு கிரமாமாக்கி இருக்கிறது. அதனால் தான் உலகமயமாதலுக்கான அடிப்படை அம்சங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில், உள்ளூர்மயத்தையும் அது ஊக்குவித்திருக்கிறது.
வேறு எந்த துறையையும் விட செய்தி துறையில் இந்த உள்ளூர்மயத்தின் தாக்கத்தை நன்கு உணரலாம். அதாவது, உள்ளூர் சார்ந்த செய்தி தளங்களை நடத்துவதற்கான வாய்ப்பை இணையம் உருவாக்கித்தந்துள்ளது. குறிப்பிட்ட நகரம் அல்லது பகுதிக்கான செய்திகளில் மட்டும் கவனம் செலுத்தும் செய்தி தளங்களை நடத்துவதை இணையம் சாத்தியமாக்கியிருக்கிறது.
இத்தகைய பேட்டை பத்திரிகைகள் ஏற்கனவே உள்ள விஷயம் தான் என்றாலும், உள்ளூர் செய்தி தளங்களை நடத்துவதை இணையம் இன்னும் எளிதாக்கி இருக்கிறது. அதன் வீச்சையும் அதிகமாக்கியிருக்கிறது.
இணைய மொழியில் இந்த போக்கு லோக்கல் என குறிப்பிடப்படுகிறது. இதன் நீட்சியாக,ஹைபர் லோக்கல் என்று சொல்லப்படும் உள்ளூரிலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே கவனம் செலுத்தும் ஹைபர்லோக்கல் தன்மையும் முன்வைக்கப்படுகிறது. தமிழில் இதை அதி உள்ளூர் என புரிந்து கொள்ளலாம்.
செய்திகளில் மட்டும் அல்ல, இ-காமர்ஸ் எனப்படும் மின்வணிகத்திலும் இந்த போக்கை பார்க்கலாம். அமேசான், பிளிப்கார்ட் போன்ற வையம் தழுவிய ஜாம்ப்வான்களை விட்டை விடுங்கள். உங்கள் நகரத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் உள்ளூர் மின்வணிக நிறுவனங்களுக்கு தனி தேவை இருக்கத்தான் செய்யும். இதையே பெட்டிக்கடை அளவுக்கு இறங்கி செய்தால் அதி உள்ளூர் சேவை எனலாம்.
நிற்க, உலகின் பல நாடுகளில், உள்ளூர் மக்களால் விரும்பி பின்பற்றப்படும் உள்ளூர் செய்தி தளங்கள் பல இருக்கின்றன. நம்மூரில் கூட, துவக்க காலத்தில் இத்தகைய உள்ளூர் செய்தி தளங்கள் அதிகம் தோன்றின. சென்னைஆன்லைன் தளத்தை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
சென்னைஆன்லைன் தளத்தை உள்ளூர் தளம் என வகைப்படுத்துவது சரியா எனத்தெரியவில்லை, ஆனால் பெயரில் சென்னைக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கவனிக்கத்தக்கது. ஆனால், நமக்கல் ஆன்லைன், சேலம் ஆன்லைன், கரூர் ஆன்லைன் என பல்வேறு உள்ளூர் இணையதளங்கள் இருந்தன. இவற்றில் எத்தனை இப்போது இயங்கி கொண்டிருக்கின்றன என்று தெரியவில்லை. ஆனால், நகரம் சார்ந்த இணையதளங்களின் தேவையை உணர்ந்து துவங்கப்பட்ட தளங்களாக இவற்றை கருதலாம்.
இணைய போக்கை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்தோடு துவக்கப்பட்டு பின்னர் காணாமல் போனவையாக இவற்றில் பெரும்பாலானவை இருக்கலாம்.
இந்த வகையில் இப்போது உதாரணமாக சொல்லக்கூடிய உள்ளூர் செய்தி தளமாக சிம்ப்ளிசிட்டி (https://simplicity.in/) செயல்பட்டு வருகிறது என்பதே விஷயம். கொங்கு மண்டலம் எனப்படும் கோவை சார்ந்த செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறது இந்த தளம்.
கோவையை மையமாக கொண்ட செய்திகளையும், நிகழ்வுகளையும் வளைத்து வளைத்து வெளியிடும் இந்த தளம், இன்ஸ்டாகிராம் பக்கம், யூடியூப் சேவை ஆகியவற்றையும் கொண்டுள்ளது. செய்திகள் தவிர, புகைப்பட கதை, கட்டுரைகள் உள்ளிட்ட வேறு பல பயனுள்ள பகுதிகளும் தளத்தில் உள்ளன.
ஆங்கிலத்தில் செயல்படும் இந்த தளத்தின் தமிழ் பதிப்பும் இருக்கிறது. செயலி வடிவிலும் இந்த தளத்தை அணுகலாம்.
உள்ளூர் செய்தி தளங்களுக்கான இலக்கணப்படி பார்த்தால், இன்னும் கொஞ்சம் மேம்பாடு தேவை என்று சொல்லத்தோன்றினாலும், கோவைக்கான இந்த உள்ளூர் செய்தி தளத்தை அறிமுகம் செய்து கொள்வது நல்லது.
இணையதள முகவரி: https://simplicity.in/
-