ஃபாஸ் (foss) அல்லது லட்சிய வேலைவாய்ப்பு இணையதளம்
மென்பொருள் வேலைவாய்ப்பு என்றாலே டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்கள் தானா என்ன? அதே போல மென்பொருள் வேலைவாய்ப்பை தேடுபவர்கள் எல்லோருமே, ஊதியம் பற்றி தான் அக்கறை கொண்டுள்ளனரா என்ன? பணிக்கு செல்லும் நிறுவனங்கள் கொள்கை நோக்கிலானதாக இருக்க வேண்டும் எனும் லட்சியம் கொண்டவர்களும் இருக்கவே செய்கின்றனர். இத்தகைய கொள்கை பிடிப்பு கொண்டவர்களுக்கான லட்சிய நோக்கிலான வேலைவாய்ப்பு தளமாக விளங்குகிறது ஃபாஸ்ஜாப்ஸ். (https://www.fossjobs.net/ )
ஃபாஸ் என்பதற்கான பொருளை தெரிந்து கொண்டாலே இந்த தளத்தின் நோக்கத்தை புரிந்து கொள்ளலாம்.
ஃபாஸ் என்பது ஆங்கிலத்தில் ஃப்ரி அண்ட் ஓபன் சோர்ஸ் சாப்ட்வேரின் சுருக்கமாக அமைகிறது. தமிழில், சுதந்திர மற்றும் திறவுமூல மென்பொருள்களை குறிக்கிறது.
மென்பொருள் உருவாக்கத்தில் அதன் மூல நிரல் அல்லது மைய நிரல் ( சோர்ஸ் கோடு), மூடி வைக்கப்பட்டதாக இல்லாமல், யார் வேண்டுமானாலும் பார்க்கும் வகையில் திறந்த தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் எனும் கருத்தாக்கமே ஓபன் சோர்சின் அடிப்படையாக அமைகிறது. மென்பொருள் மூல நிரலை பார்வையிடுவதோடு, அதை திருத்தி, மேம்படுத்தி பகிர்ந்து கொள்வதற்கான சுதந்திரமாகவும் இது அமைய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இந்த அம்சங்களே ஃபாஸ் என பொதுவாக குறிப்பிடப்படுகின்றன.
ஃபாஸ் கருத்தாக்கத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்று இலவசம் அல்ல மாறாக சுதந்திரம் அல்லது கட்டற்ற தன்மை.
மென்பொருளின் பயன்பாடு மூடப்பட்டதாக இல்லாமல், அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்பதும் இந்த கோட்பாட்டின் முக்கிய அம்சமாக அமைகிறது.
ஃபாஸ் பற்றி இன்னும் கூட விரிவாக எழுதலாம். இப்போதைக்கு இதன் ஆதார தன்மை, மென்பொருள் வருவாயை அள்ளித்தரும் நோக்கம் கொண்டிருப்பதைவிட, அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்பதாக புரிந்து கொள்ளலாம். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் எனில், மென்பொருளின் நிரல் அணுக கூடியதாக இருக்க வேண்டும். இதுவே கூட்டு முயற்சிக்கு வழி வகுக்கும்.
ஆக, கூட்டு முயற்சிக்கான சாத்தியத்தையும் ஃபாஸ் தத்துவமாக கொள்ளலாம்.
மென்பொருளின் இத்தகைய சாத்தியங்களில் ஆர்வம் கொண்டவர்கள் , ஏதோ ஒரு மென்பொருள் வேலையை நாடமாட்டார்கள். மைக்ரோசாப்டா , கூகுளா என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். தாங்கள் பணிபுரியும் நிறுவனம் ஃபாஸ் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டுள்ளதா என்பதை முக்கியமாக கருதுவார்கள்.
இத்தகைய லட்சிய நோக்கம் கொண்டவர்களுக்கு ஃபாஸ் வேலைவாய்ப்புகளை பட்டியலிடும் வகையில் ஃபாஸ்ஜாப்ஸ்.நெட் தளம் அமைந்துள்ளது. அதாவது, ஃபாஸ் அடிப்படையிலான மென்பொருள் உருவாக்கம் மற்றும் செயலாக்கத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளை இந்த தளம் பட்டியலிடுகிறது.