நாள்தோறும் 10 நிமிடங்களில் ஆங்கிலம் கற்க உதவும் செயலி
ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆர்வம் இருந்தால் போதாது, கொஞ்சம் விடாமுயற்சியும் வேண்டும். இதை புரிந்து கொண்டது போல, உத்தர் (https://www.utter.in/ ) செயலி செயல்படுகிறது.
சரளமாக ஆங்கிலத்தில் பேச வேண்டும் எனும் ஆர்வம் உள்ளவர்கள் அதை நோக்கி முன்னேறும் வகையில், இந்த செயலி தனது ஆங்கில பயிற்சியை அமைத்துள்ளது.
இந்தியாவில், இந்தியர்களால், இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த செயலி, அடிப்படையில் மூன்று விதமான ஆங்கில பயிற்சியை அளிக்கிறது. இதன் மூலம் ஆங்கில இலக்கணம், ஆங்கில பேச்சு வழக்கு மற்றும் வர்த்தக நோக்கில் அங்கில பேச்சு ஆகியவற்றை கற்றுக்கொள்ளலாம்.
ஒவ்வொரு பிரிவுக்கான பாடங்கள் சுருக்கமாக இருப்பதோடு, அவரவர் தங்கள் தாய்மொழியிலேயே கற்றுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஆக தமிழி பேசுபவர், தமிழ் மொழி வாயிலாகவே ஆங்கிலம் கற்கலாம்.
செயலியில் பதிவு செய்து கொண்டு, விரும்பும் பிரிவை தேர்வு செய்தவுடன், ஒவ்வொரு பாடமாக துவங்கலாம். தினமும் பத்து நிமிடம் செலவிட்டால் போதும் என்பது மட்டும் அல்ல, பாடங்களை பயில்வது சுவாரஸ்யமானதாகவே இருக்கிறது.
புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் அகராதி வசதி, வாக்கியங்களை மொழிபெயர்த்து அறியும் வசதி ஆகியவற்றுடன், மொழி பயிற்சிக்கான அரட்டை மென்பொருளுடன் உரையாடும் வசதியும் இருக்கிறது.
பாடங்களில் படித்ததை, அரட்டை மென்பொருளுடன் பேசிப்பார்க்கலாம். இடையே ஏதேனும் தவறு செய்தால், அதை மென்பொருள் திருத்துகிறது. குரல் வழி பதிவு மூலமும் உரையாடலாம். அளிக்கும் பதிலுக்கு ஏற்ப மென்பொருள் வழிகாட்டுவதோடு, தொடர்புடைய இலக்கண அடிப்ப்டை அம்சங்களையும் சுட்டிக்காட்டுகிறது. நிச்சயம், இந்த அரட்டை மென்பொருள் வசதி, தயக்க சீகாமணிகளின் மனத்தடைகளை உடைக்க உதவும் என நம்பலாம்.
பயிற்சி பெறுபவர்கள் தாங்கள் கற்றுக்கொள்ளும் வேகத்திற்கு ஏற்பட பாடங்களை அணுகலாம்.
அடிப்படை சேவை இலவசமானது. கட்டணம் செலுத்தினால் வல்லுனருடன் உரையாடுவது போன்ற மேம்பட்ட வசதிகளை அணுகலாம். வர்த்தக நோக்கிலான பேச்சு பயிற்சியும் கட்டண சேவை தான்.
ஆங்கில மொழியில் பேசும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்த செயலியை தாராளமாக பரிந்துரைக்கலாம்.
பி.கு: 2015 ஸ்லிங் எனும் பெயரில் அறிமுகமான இந்த செயலி, பின்னர் உத்தர் என மாறியது. புனேவைச்சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கிய இந்த செயலிக்கு, ரிலையன்ஸ் ஸ்டார்ட் அப் திட்ட ஆதரவு மற்றும் கூகுல் பிளே செயலி திட்ட ஆதரவு கிடைத்துள்ளது.
-