உங்களுக்காக ஒரு இணைய பக்கம்
நீங்கள் பேஸ்புக்கில் இருக்கலாம், டிவிட்டரில் இருக்கலாம், இன்னும் பல சமூக ஊடக தளங்களில் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு என சொந்தமாக ஒரு இணைய பக்கம் இருக்கிறதா? டிஜிட்டல் யுகத்தில் இந்த கேள்வி மிகவும் முக்கியமானது.
ஏனெனில், நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்த உங்களுக்கான இணைய பக்கம் மிகவும் அவசியம். இணையத்தில் இது உங்களுக்கான அடையாளமாக இருக்கும்.
சமூக ஊடகங்களில் பலரும் தங்களை வெளிப்படுத்திக்கொண்டாலும், அது ஒருவரைப்பற்றிய முழு சித்திரத்தையும் தந்து விடுவதில்லை. பல நேரங்களில் சமூக ஊடக நிலைத்தகவல்கள் ஒருவரைப்பற்றிய தவறான தோற்றத்தை ஏற்படுத்தி விடலாம்.
எனவே தான், ஒருவர் தன்னைப்பற்றிய சுய அறிமுகத்தை மேற்கொள்ள தனக்கென ஒரு இணைய பக்கத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். அதிகாரப்பூர்வம் இணையதளம் என்று சொல்வதைப்போல இது தனிநபர்களுக்கான அதிகாரப்பூர்வ பக்கம். இதில் என்ன தகவல்கள் இடம்பெறுகின்றன என்பது நம் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்பதால், நம்மைப்பற்றிய சரியான அறிமுகத்தை முன் வைக்கலாம்.
இந்த வகையான அறிமுக பக்கத்தை அமைத்துக்கொள்ள அபவுட்.மீ (ABOUT.ME ) இணையதளம் வழி செய்கிறது. இப்போது, இதே போலவே டீட்ஸ்.கோ (https://deets.co/ ) எனும் இணையதளம் அறிமுகமாகியிருக்கிறது. இந்த தளத்தின் மூலம் யாரும் தங்களுக்கான அறிமுக பக்கத்தை அமைத்துக்கொள்ளலாம். புகைப்படத்துடன், தங்களைபற்றிய அறிமுக குறிப்புகளை இடம்பெறச்செய்வதோடு, தங்களது இமெயில் மற்றும் சமூக ஊடக பக்கங்களுக்கும் இணைப்பு கொடுக்கலாம். வீடியோக்களையும் இணைத்துக்கொள்ளலாம்.
இந்த இணைய பக்கத்தின் முகவரியை, உங்களுக்கான டிஜிட்டல் அடையாளமாக பகிர்ந்து கொள்ளலாம்.
-
கோவை ஞானியின் இணையதளம்
தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க இயலாத ஆளுமையாக இருந்த மார்க்சிய அறிஞரும், தமிழறிஞருமான கோவை ஞானி மறைந்து விட்டார். தமிழ் இலக்கிய சூழலில், கோவை ஞானியின் எத்தனை அழுத்தமாக பதிந்திருக்கிறது என்பதை பலரும் அவருக்காக உருகி எழுதியிருக்கும் இறங்கல் குறிப்புகளில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
கோவை ஞானி விட்டுச்சென்ற பணியை தொடர விரும்புகிறவர்களும் சரி, அவரைப்பற்றி இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள விரும்புகிறவர்களும் சரி, கோவைஞானி.ஆர்க் (http://kovaignani.org/ ) இணையதளத்தை குறித்து வைத்துக்கொள்ளலாம்.
கோவை ஞானியின் படைப்புகளுக்காக அமைக்கப்பட்டுள்ள இணையதளம் இது. கடந்த சில ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்று தெரியாவிட்டாலும், இந்த தளம் அவரைப்பற்றிய சரியான அறிமுகத்தை அளிப்பதோடு, அவரது படைப்புகளையும், பங்களிப்பையும் தெரிந்து கொள்ள வழி செய்கிறது.
மிகவும் முக்கியமாக அவரது நூல்களை இந்த தளத்தில் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்.
நவீன இலக்கியத்திலும், மார்க்சிய மெய்யியலில் ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் இந்த தளத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
-