இந்த இணையதளம் கூகுள் கண்ணாடி!
வர்த்தக நோக்கில் கூகுள் நிறுவனத்திடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. கூகுள் தேடியந்திரத்தை அண்டி பிழைக்கும் இணையதளங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அதாவது, தங்களுக்கு என தனி நோக்கம் எதுவும் இல்லாமல், கூகுள் மூலம் வரக்கூடிய இணைய போக்குவரத்தை மட்டுமே நம்பி உருவாக்கப்படும் தளங்கள். கூகுளும் இத்தகைய தளங்களை வளர்த்து விடுகிறது. அல்லது அவை வளர்ந்துவிட்டு போகட்டும் என கண்டு கொள்ளாமல் இருந்துவிடுகிறது.
இவை எல்லாம் எஸ்.இ.ஓ விளையாட்டின் கீழ் வருபவை. கூகுள் நினைத்தால் இவற்றை எல்லாம் களையெடுக்க முற்படலாம். ஆனால் அது தேவையில்லாத அணியை பிடுங்குவதாக அமைந்துவிடும் என கூகுள் நினைக்கிறது போலும். இருப்பினும், இந்த வகை தளங்கள் புற்றீசலாக தனது தேடல் முடிவுகளின் தரத்தை பாதித்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதிலும் கூகுள் கவனமாக இருக்கிறது.
எனவே அடிக்கடி தனது தேடல் அல்கோரிதமை முடுக்கி விடுகிறது. இதன் பயனாக தானாக, விளம்பர நோக்கிலான தளங்கள் தெறித்து ஓட நேரலாம்.
தேடியந்திரத்திற்கு ஏற்ப உள்ளடக்கத்தை வடிவமைக்கும் எஸ்.இ.ஓ நுட்பம், தனது தேடல் சாம்ராஜ்யத்தை அசைத்து விடாமல் இருப்பதில் கூகுள் சாமர்த்தியமாகவே நடந்து கொள்கிறது.
இதே போல, கேலி, கிண்டல், நையாண்டி, விமர்சனம், பயன்பாடு, புதுமை, நகைச்சுவை என பல்வேறு நோக்கத்துடன் உருவாக்கப்படும் கூகுள் சார்ந்த இணையதளங்களையும் நிறுவனம் பெரிதாக கண்டு கொள்வதில்லை.
உதாரணமாக, கருப்பு கூகுள் (http://www.blackl.com/black-google.php ) என்று ஒரு இணையதளம் இருக்கிறது. இந்த தளம், கூகுள் தேடல் முடிவுகளை கருப்பு நிற பின்னணியில் வழங்குகிறது. பளிச் என வெளிச்சம் மின்னும் வழக்கமான திரையில் தேடல் முடிவுகளை அணுகும் போது மானிட்டர் குடிக்கும் மின்சாரம், சுற்றுச்சூழல் நோக்கில் கடும் பாதிப்பை ஏற்படுத்துவதால், திரையை கருப்பாக்கி மின்சாரத்தை மிச்சமாக்கி, சுற்றுச்சூழலுக்கு சேவையாற்றுங்கள் எனும் கோரிக்கையோடு, பிளாக் கூகுள் தளம் செயல்பட்டு வருகிறது.
நோக்கம் நல்ல நோக்கம் என்றாலும், இந்த தளம், கருப்பு பின்னணியில் கூகுள் முடிவுகளை அப்படியே வழங்குகிறது. பாதுகாப்பாக, கூகுளுக்கும் இந்த தளத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பொடி எழுத்துக்களில் தெரிவித்துள்ளது. ஆனால், காப்புரிமை மீறல் என்றெல்லாம் கூகுள் மல்லு கட்டவில்லை.
இதே போல, நீங்கள் ஏன் கூகுளில் தேடிப்பார்க்க கூடாது என்று சொல்வது போல ஒரு இணையதளம் (https://lmgtfy.com/) இருக்கிறது. அதாவது இணையத்தில் தேடிப்பார்த்தால் எளிதாக தெரிந்து கொள்ளக்கூடிய விஷயங்களை கூட, நண்பர்களும், தெரிந்தவர்களும் கேள்விகளாக கேட்கும் போது, ஒரு கூகுள் தேடலில் அதற்கான பதிலை அடைந்துவிடலாம் என்பதை சொல்லாமல் சொல்லும் வகையில், இந்த தளம் அமைந்துள்ளது.
இந்த வரிசையில் இன்னொரு அருமையான இணையதளத்தை இப்போது பார்க்கலாம்.
கூகுளின் கண்ணாடியாக செயல்படும் தளம் இது. - https://elgoog.im/
தளத்தின் முகவரியை பார்த்தால், கூகுள் எழுத்துகளை தலைகீழாக திரும்பி எழுதியது போல இருக்கிறதா? தளமும் அதை தான் செய்கிறது. அதாவது, இந்த தளம் மூலம் கூகுளில் தேடினால், அதில் வரும் தேடல் முடிவுகள் வழக்கமாக தோன்றுவதற்கு பதில், தலைகீழ் வடிவில், வலப்பக்கத்தில் இருந்து இடப்பக்கமாக எழுதப்பட்டது போல தோன்றும். எதுவும் புரியாது என்றாலும் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.
இந்த தளத்தில் குறிச்சொற்களை டைப் செய்யும் போது, அவை தலைகீழ் வரிசையிலேயே தோன்றும். கூகுள் வழங்கும் அயம் லக்கி தேடல் வசதியும் கூட இதே போல தலைகீழாக தோன்றும்.
கூகுள் முடிவுகளை கண்ணாடியில் பார்த்தால் எப்படி இருக்குமோ, அதே உணர்வை தேடல் முடிவுகளில் அளிக்கிறது இந்த தளம். சும்மா ஜாலிக்காக என்று சொல்லி அமைக்கப்பட்டுள்ள இந்த தளத்தையும் கூகுள் விட்டு வைத்திருக்கிறது.
கூகுள் வழங்க கூடிய சுவாரஸ்யமான சில விளையாட்டுகளும் இருக்கின்றன. அதாவது தண்ணிருக்கு அடியில் கூகுள் முடிவுகளை பார்க்கலாம். புவியீர்ப்பு விசையால் கூகுள் முடிவுகள் கீழே இழுக்கப்படுவதை பார்க்கலாம். இந்த விளையாட்டுகளையும் தலைகீழ் தன்மையுடன் வழங்கிறது இந்த தளம்.
2002 ம் ஆண்டு முதல் இந்த தளம் இயங்கி வருகிறது எனும் தகவல் ஆச்சர்யம் அளிக்கலாம். துவக்கத்தில், ஆல் டூ ஃபேட் எனும் நையாண்டி இணையதளம், இந்த சேவையை உருவாக்கியிருந்தது. 2005 க்கு பிறகு இந்த மூல தளம் புதுப்பிக்கவில்லை என்றாலும், கூகுள் கண்ணாடி தளம் இன்னமும் செயல்பட்டு வருகிறது.
அது மட்டும் அல்ல, கூடுதலாக மைக்ரோசாப்டின் ’பிங்’ தேடியந்திரத்தின் தலைகீழ் வடிவம் மற்றும் ’அமேசான்’ தளத்தின் தலைகீழ் வடிவத்தையும் வழங்கும் வகையில் வளர்ந்திருக்கிறது.
கேலி, நையாண்டியும் இணையத்தின் முக்கிய அம்சம் என்பதை இந்த தளம் உணர்த்துகிறது. கூகுளும் இதை புரிந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்!
-
நீங்கள் ரசித்த சிறந்த நையாண்டி தளங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே!.
-
வால்: கூகுள் கண்ணாடி இணையதளம் தொடர்பாக இரண்டு சுவாரஸ்யமான விஷயங்கள். ஒன்று, இந்த தளம் கூகுளுடன் தொடர்பில்லாதது என குறிப்பிடப்பட்டிருந்தாலும், இதன் இணைய முகவரியின் மூலத்தை தேடினால், உரிமையாளர் கூகுள் என வருவதாக லைப்வயர் தளம் தெரிவிக்கிறது. ஆனால், இணைய முகவரி மூலத்தை கண்டறிய உதவும் ஹூஇஸ் தளம், இந்த தளத்தின் முகவரி, மேன்ஆப் ஐஸ்ல் நாட்டில் பதிவாகியிருப்பதாக மட்டுமே தெரிவிக்கிறது.
இரண்டாவது தகவல், 2002 ல் கூகுள் சீனாவில் தடை செய்யப்பட்டது. அப்போது, இந்த கண்ணாடி கூகுள் தளம் தடையில்லாமல் செயல்பட்டது. சீனர்கள் பலர் கூகுள் சேவையை அணுக இந்த தளத்தை பயன்படுத்திக்கொண்டனர். நையாண்டி தளம் தானே என சீன அரசு கண்டு கொள்ளவில்லை போலும்.
-