உங்களுக்கான புதிய கூகுளும், புத்தம் புதிய பேஸ்புக்கும்!
இரண்டு கேள்விகளுடன் இன்றைய அறிமுகத்தை துவக்கலாம்.
புதியதொரு தேடியந்திரத்தை துவக்கத்தில் இருந்து ஆதரிக்க நீங்கள் தயாரா?
ஆம் எனில், ’நீங்கள்’ தேடியந்திரத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள். ஆம் உங்கள் தேடியந்திரம் தான் இது. அதாவது, உங்களை குறிக்கும் வகையில் ஆங்கிலத்தில் யூ (https://you.com/) எனும் பெயரில் இந்த தேடியந்திரம் துவங்கப்பட்டுள்ளது. இன்னும் முழுவீச்சில் அறிமுகமாகவில்லை. இப்போதைக்கு வெள்ளோட்ட நிலையில் உள்ளது.
வெள்ளோட்டம் என்றால், முதல் கட்ட பயனாளிகளை அழைப்பு அடிப்படையில் வரவேற்றுக்கொண்டிருக்கின்றனர். எனவே நீங்களும் விரும்பினால், இந்த தேடியந்திரத்தில் இமெயில் முகவரியை சமர்பித்து, அதனிடம் இருந்து அழைப்பு வந்த பிறகு தேடல் சேவையை பயன்படுத்திப்பார்க்கலாம்.
இதன் மூலம், இந்த புதிய தேடியந்திரத்தை முதல் கட்டமாக பயன்படுத்திப்பார்க்கும் வாய்ப்பை பெறும் முன்னுரிமை பயனாளிகளில் ஒருவராக நீங்களும் இருக்கலாம்.
எல்லாம் சரி, இந்த தேடியந்திரத்தில் என்ன சிறப்பு என்று கேட்டால், நம்பிக்கையான தேடலை அளிப்பதாக இது உறுதி அளிக்கிறது. இதை தேடல் நம்பிக்கை என குறிப்பிடுகிறது. தற்போது இணையத்தில் பிரபல உத்தியாக பின்பற்றப்படும் கிளிக் பைடு எனப்படும், எதையாவது செய்து கவனத்தை மட்டும் ஈர்க்கும் தூண்டில் போடும் உத்தியுடன் இதை பொருத்திப்பார்க்க வேண்டும்.
நீங்கள் தேடலில் எதிர்பார்ப்பதை முன் எப்போதும் இல்லாத அளவு வேகமாக அளிப்பதாகவும் இந்த தேடியந்திரம் தெரிவிக்கிறது. விளம்பர முடிவுகள் மற்றும் கட்டண முடிவுகளுக்கு பதிலாக உண்மையான தேடல் முடிவுகளுக்கு முன்னுரிமை அளிப்பதன மூலம், நம்பிக்கையான தேடலை வழங்குவதாகவும் தெரிவிக்கிறது.
புதிய இடைமுகத்துடன், செயற்கை நுண்ணறிவு துணையுடன், சார்புகள், பொய்யான இணைய விமர்சனங்களை எல்லாம் கண்டு ஏமாறாமல் உங்களுக்கான சிறந்த முடிவுகளை அளிப்பதாகவும் இந்த தேடியந்திரம் தெரிவிக்கிறது.
உண்மையில், இப்படி ஒரு தேடியந்திரம் தேவை தான். நீங்களும் முயற்சித்து பாருங்கள்!.
*
முதல் கேள்வி கூகுளுக்கு மாற்றாக விளங்க கூடிய இன்னுமொரு புதிய தேடியந்திரத்தை அறிமுகம் செய்தது என்றால், இரண்டாவது கேள்வி புதுமையான சமூக வலைப்பின்னல் தளத்தை அறிமுகம் செய்வதற்கானது.
அதாவது பேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல் மேடைகளை முன்னிறுத்துவதற்கு பதிலாக, மனிதர்களை முன்னிறுத்தும் புதிய இணைய சேவையை முயற்சித்து பார்க்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? என்பது தான் இந்த கேள்வி.
இப்படி கேட்க வைத்திருப்பது, பியூபில்நாட்பிளாட்பார்ம்ஸ் (https://peoplenotplatforms.com/) இணையதளம்.
நீங்கள் பேஸ்புக் அபிமானியோ, டிவிட்டர் ரசிகரோ அதெல்லாம் பிரச்சனை இல்லை, இந்த மேடைகளை விட உங்களை முக்கியமாக கருத வைப்பது தான் எங்கள் நோக்கம் என்கிறது இந்த தளம்.
இணையத்தில் ஒருவரை பின்பற்ற வேண்டும் எனில், அவரது பேஸ்புக், டிவிட்டர், பிண்டிரெஸ்ட் கணக்குகளை பின் தொடர நேர்வதை இதற்கு ஆதரவாக சுட்டிக்காட்டுகிறது. இதற்கு பதிலாக, நாம் யாரை பற்றி அறிய விரும்புகிறோமோ, அவரது சமூக ஊடக பக்கங்களை எல்லாம் ஒரே கிளிக்கில் பின் தொடர முடிந்தால் எப்படி இருக்கும் என கேட்டு அதற்கான தீர்வை தனது சேவையாக வழங்குகிறது.
இந்த தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு, சமூக ஊடக கணக்குகளை எல்லாம் அதில் இணைத்து விடலாம். அதன் பிறகு, இந்த தளத்திற்கு வருகை தருபவர்கள், தங்களுக்கு ஆர்வம் உள்ள சக பயனாளிகளை தேடி பின் தொடரலாம். ஆர்வம் உள்ளவர்களை மட்டும் பின் தொடர்ந்தால் போதும், அதன் மூலமே அவர்கள் சமூக ஊடக கணக்குகளை எல்லாம் அறிந்து கொள்ளலாம்.
ஒரு கிளிக்கில் ஒருவரை இணையத்தில் பின் தொடர வழி செய்வதே எங்கள் இலக்கு என்றும் இந்த தளம் குறிப்பிடுகிறது.
சமூக ஊடக பக்கங்களை குறிப்பிடும், டிஜிட்டல் அட்டை போன்ற சேவை தான் இந்த தளம் என்றாலும், இந்த எண்ணத்தை மிக அழகாக முன் வைக்கிறது.
நீங்களும் முயன்று பாருங்கள். இது என்னுடைய பக்கம்: https://peoplenotplatforms.com/person/5fd6fd52be197e003d9e2b14/view