டிவிட்டர் பயனாளிகளுக்கு தேவையான துணை தளம்
நீங்கள் தீவிர டிவிட்டர் பயனாளியாக இருந்து, டிவிட்டர் பயன்பாட்டிற்கான துணை சேவை ஒன்று தேவை என நினைத்தால், புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் ’கெட்சிர்ப்ஆப்’ (https://getchirrapp.com/) சேவையை பரிசீலிக்கலாம். அதிலும் குறிப்பாக குறும்பதிவு சேவையான டிவிட்டரில் நீள் பதிவு அல்லது தொடர் பதிவுகளை விரும்புகிறவர்களுக்கு இது பொருத்தமாக இருக்கும்.
கெட்சிர்ப் சேவை, டிவிட்டர் பயனாளிகள் சார்பில் தொடர் பதிவுகளை உருவாக்கித்தருகிறது.
டிவிட்டரில் தனித்தனியே குறும்பதிவுகளை வெளியிடலாம். தேவை எனில், மூன்றாம் தரப்பு சேவை உதவியுடன் நீள் பதிவுகளை வெளியிடலாம். குறும்பதிவுக்கான 280 எழுத்துகள் எனும் வரம்பை கடந்து அதிக தகவல்களை பகிர நேரும் போது, நீள் பதிவுகளை நாடலாம்.
நீள் பதிவு என்பது கிட்டத்தட்ட வலைப்பதிவு போல அளவில் பெரிய பதிவை உருவாக்கி, அதன் சுருக்கமான வடிவை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டு மேலும் விவரங்களுக்கு மூன்றாம் தரப்பு சேவைக்கு அனுப்பி வைப்பதாகும்.
நீள் பதிவுகளில் சாதக, பாதகங்கள் உண்டு. நீள் பதிவை விட, வரிசையாக குறும்பதிவுகளை வெளியிடுவதை பலரும் விரும்பலாம். டிவிட்டர் அகராதியில் இது டிவிட்டர் நூல் அல்லது டிவிட்டர் சர்டு என குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலத்தில் டிவிட்டர் திரெட் (Twitter thread) என்கின்றனர். துவக்கத்தில் இதுவே டிவீட்ஸ்டிராம் (Tweetstorm ) என குறிப்பிடப்பட்டது. இந்த இரண்டையும் ஒன்றாகவும் கருதலாம் என்றாலும், இவற்றுக்கு இடையே வேறுபாடும் இருக்கிறது.
டிவீட்ஸ்டிராம் என்பது, ஒரே குறும்பதிவின் தொடர்ச்சியாக வரிசையாக பல குறும்பதிவுகளை வெளியிடுவதை குறிக்கிறது. டிவிட்டர் திரெட் என்பது பயனாளி ஒருவர் தனது குறும்பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் தானே அடுத்தடுத்து குறும்பதிவுகளை வெளியிடுவதாக கருதப்படுகிறது.
ஆனால், தொடர் குறும்பதிவுகளை வெளியிடுவதற்கான வசதி தற்போது டிவிட்டரிலேயே இருக்கிறது. ஒரு குறும்பதிவை வெளியிட்ட பிறகு அதில் உள்ள கூட்டல் குறியை (“+” ) கிளிக் செய்து அடுத்தடுத்த குறும்பதிவுகளை சேர்த்து, பின்னர் அவை அனைத்தையும் மொத்தமாக வெளியிடலாம்.
இந்த டிவிட்டர் தொடர் பதிவுகளை இன்னும் எளிதாக உருவாக்கித்தரும் சேவையை தான், ’கெட்சிர்ப்ஆப்’அளிக்கிறது.
டிவிட்டரில் தொடர் பதிவுகளை உருவாக்குவது எளிதானது என்றாலும், அதற்கென மெனக்கெடல் தேவை. ஒவ்வொரு பதிவாக சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால், ’கெட்சிர்ப்ஆப்’இந்த சிக்கல் எல்லாம் இல்லாமல், தொடர் பதிவை எழுதும் போதே அவற்றை, டிவிட்டருக்கு ஏற்ற குறும்பதிவுகளாக பிரித்து தொகுத்து தருகிறது. பின்னர் அதை அப்படியே பயனாளிகள் தங்கள் டிவிட்டர் கணக்கில் பகிரலாம்.
புதிய தொடர் பதிவை உருவாக்கும் வசதி தவிற, ஏற்கனவே உருவாக்கியவற்றின் வரலாற்றை பார்வையிடுவது, பதிவை எப்போது வெளியிடுவது என திட்டமிடுவது உள்ளிட்ட வசதிகளையும் அளிக்கிறது.