இணையத்தில் ஒரு போட்டோ ஸ்டூடியோ
ஒரு காலத்தில் படம் எடுக்க வேண்டும் என்றால் ஸ்டூடியோவுக்குச் சென்று விரைப்பாக போஸ் கொடுக்க வேண்டும். இப்போது அப்படி இல்லை, கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் ஸ்டைலாக செல்பி எடுத்துக்கொள்ளலாம். இந்த படங்களை ஆன்லைனிலேயே எடிட் செய்து, இன்ஸ்டாகிராம், ஸ்னேப்சேட் என எதில் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம்.
இப்போது, போட்டோ ஸ்டுடியோவையும் இணையத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். மேக்பாஸ்போர்ட்போட்டோ (https://makepassportphoto.com/) தளத்தின் மூலமாக, அலுவல் சார்ந்த பணிகளுக்கான புகைப்படத்தை இணையம் மூலமே எடுத்துக்கொள்ளலாம்.
ஸ்மார்ட்போன் அல்லது டிஜிட்டல் காமிராவும் எடுத்த படத்தை இந்த தளத்தில் சமர்பித்தால், பாஸ்போர்ட் போன்ற ஆவணத்திற்கு ஏற்ற வகையில் அதை திருத்தி, மெருகேற்றி தந்துவிடுகிறது. ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டது போலவே தொழில்முறைத்தன்மையுடன் இருக்கும் இந்த படத்தை அப்படியே டவுண்லோடு செய்து கொள்ளலாம். தேவை எனில் கட்டணம் செலுத்தி, இந்த தளம் மூலம் அச்சிட்டு தருவித்துக்கொள்ளலாம்.
உலகம் முழுவதும் சேவை அளிக்கும் இந்த தளம், விசா, பாஸ்போர்ட் போன்றவற்றுக்கு விண்ணபிக்க தேவையான புகைப்பட அளவு பற்றிய தகவல்களையும் கொண்டிருக்கிறது.