உலக விஞ்ஞான வலைவாசல்
அறிவியல் ஆய்வுத்தகவல்களை அறிவதற்கான அருமையான தேடியந்திரமாக அமைந்திருக்கிறது வேர்ல்டுவைடுசயின்ஸ்.ஆர்க். (https://worldwidescience.org/ ).
இந்த தேடியந்திரத்தை மற்ற வழக்கமான தேடியந்திரங்களோடு ஒப்பிடுவது சரியாக இருக்காது. ஏனெனில், இந்த தேடியந்திரம் அறிவியல் நோக்கிலான ஆய்வுத்தகவல்களை தேடித்தரும் பிரத்யேகமானது என்பது மட்டும் அல்ல, தகவல்களை இது எங்கிருந்து தேடித்தருகிறது என்பதும் விஷேசமானது.
ஆய்வு தகவல்கள் என்றவுடன், பொதுவாக இணையத்தில் தேட முடியாது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். அறிவியல் தொடர்பான அதிகாரப்பூர்வ அமைப்புகளின் சஞ்சிகைகளிலும், ஆவணங்களிலும் தேட வேண்டும். அதிலும் முக்கியமான அறிவியல் தரவு தொகுப்புகளில் இருந்து தேட வேண்டும்.
வேர்ல்டுவைடுசயின்ஸ் தேடியந்திரம் இதை தான் செய்கிறது. அறிவுயல் ஆய்வு தகவல்களை, உலகம் முழுவதும் உள்ள அறிவியல் தரவு தொகுப்புகளில் இருந்து இது தேடித்தருகிறது. அந்த வகையில் இந்த தேடியந்திரத்தை ஒரு கூட்டு முயற்சி தேடியந்திரம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில், 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள அறிவியல் அமைப்புகள் வசம் உள்ள தரவுகள் தொகுப்புகளில் இருந்து ஒரே நேரத்தில் தேட வழி செய்கிறது. அதே போல பல உலக மொழிகளிலும் தேடலை சாத்தியமாக்குகிறது.
இந்த தேடியந்திரத்தில் தகவல்களை தேடும் போது, கூகுள் போல கோடிக்கணக்கான பக்கங்கள் எல்லாம் பட்டியலிடப்படுவதில்லை. அறிவியல் தரவு தொகுப்புகளில் மட்டுமே தேடுவதால், ஆய்வுகங்கள், அமைப்புகள் போன்வற்றின் சார்பில் வெளியாகும் ஆய்வுக்கட்டுரைகளில் இருந்து மட்டும் இது தகவல்களை பட்டியலிடுகிறது.
ஒவ்வொரு தேடலுக்கும், எத்தனை இடங்களில் இருந்து எத்தனை முடிவுகள் பட்டியலிடப்படுகின்றன என சுட்டிக்காட்டப்படுகிறது. இதன் எண்ணிக்கை சில நூறாகவும், ஆயிரங்களாகவும் இருந்தாலும் எல்லாமே அதிகார்ப்பூர்வ ஆய்வக தரவுகள் என்பது முக்கியமானது.
ஆய்வுக்கட்டுரைகளை பட்டியலிடுவதோடு, அவை அழகாக வகைப்படுத்தப்படுகின்றன. நாடுகள், ஆய்வாளர்கள், தலைப்புகள், சஞ்சிகைகள் என பலவிதமாக ஆய்வு முடிவுகளை அணுகலாம். கட்டுரைகள் மட்டும் அல்லாது, மல்டிமீடியா மற்றும் மென்பொருள் சார்ந்த தகவல்களையும் அணுகலாம்.
ஆய்வு தகவல்கள் வரிசைப்படுத்தப்பட்டிருப்பதோடு, விக்கிபீடியா மற்றும் யுரேகா அலெர்ட் அறிமுகங்களும் தனியே கொடுக்கப்பட்டுள்ளன. ஆய்வு அறிஞர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களுக்கு இந்த தேடியந்திரம் பேரூதவியாக இருக்கும். மாணவர்கள் இந்த தேடியந்திரத்தை அறிந்திருப்பது தேடலின் தன்மையை புரிந்து கொள்ள உதவும்.
தரவுகள் பட்டியலில் இருந்து தேடல் வசதி என வரும் போது, மிகுந்த கட்டுப்பாடுகள் உண்டு. எல்லோரும் இவற்றை எளிதாக அணுக முடியாது. அறிவியல் அமைப்புகளின் தகவல்களை தேட அதற்கான உறுப்பினர் அனுமதி தேவை. அதே போல தேசிய தரவு பட்டியலில் தேடவும் பிரத்யேக அனுமதி தேவை.
இந்த சிக்கல்களை நன்கு உணர்ந்தே, உலக நாடுகளின் அறிவியல் தரவு பட்டியலில் உள்ள ஆய்வு தகவல்களை எளிதாக தேடுவதற்காக இந்த தேடியந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் நூலகம் (British Library) மற்றும் அமெரிக்க எரிசக்தி துறை (United States Department of Energy ) இணைந்து, 70 க்கும் மேற்பட்ட நாடுகளை உறுப்பினராக கொண்டு இந்த தேடியந்திரத்தை 2007 ல் உருவாக்கியது. இந்தியாவில் இதில் உறுப்பினர் நாடாக இருக்கிறது.
பங்கேற்கும் நாடுகளின் ஒத்துழைப்போடு, ஒரே நேரத்தில் எண்ணற்ற அறிவியல் தரவுகள் பட்டியலில் தேட இந்த தேடியந்திரம் வழி செய்கிறது.
தேடியந்திரம் என்றால் கூகுள் மட்டுமே என நினைத்துக்கொண்டிருப்பவர்கள் இந்த தேடியந்திரத்தை அறிமுகம் செய்து கொள்வது நல்லது.
--