கட்டணச்சுவர்களை தகர்க்கும் இணைய சேவை
10 அடி கட்டணச்சுவரை காட்டுங்கள், நான் 12 அடி ஏணியை உங்களுக்கு காண்பிக்கிறேன்’ என அந்த இணையதளத்திற்கான அறிமுகம் ஒரு கவிதை போல இருக்கிறது.
’12ஃபீட்’ (https://12ft.io/) தான் அந்த தளம். அறிமுக வாசகம் உறுதி அளிப்பது போலவே இந்த தளம், இணைய கட்டணச்சுவர்களை ஏறி நுழைய வழி செய்கிறது. அதாவது, கட்டணச்சேவைகளாக இருக்கும் இணையதள கட்டுரைகளை, அந்த தடையை நீக்கி படிக்க வழி செய்கிறது.
இணையம் அதன் திறந்த தன்மையை பலவிதங்களில் இழந்து வருகிறது. கட்டணச்சேவையும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. பல ஊடகங்கள் தங்கள் கட்டுரைகளை உறுப்பினர்கள் மட்டுமே அணுக கூடிய வகையில் கட்டணச்சேவையாக மாற்றியிருக்கின்றன. இந்த தளங்களில் கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்தால் மட்டுமே கட்டுரைகளை வாசிக்கலாம்.
இணையத்தில் உலாவும் போது நல்ல கட்டுரைகளை கண்டறியும் போது, அந்த கட்டுரை கட்டணச்சேவை பூட்டு கொண்டிருந்தால் அலுப்பாகவும், சோர்வாகவும் இருக்கும். தரமான கட்டுரைகளை கட்டணம் செலுத்தி படிக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டியது என்றாலும், கட்டணச்சேவை உத்தி செயல்படுத்தப்படும் விதம் பல நேரங்களில் கூடுதல் சோர்வை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம்.
இன்னும் பல தளங்கள் கட்டணம் செலுத்த கோராவிட்டாலும், கட்டுரைகளை மறைத்து வைத்து, உறுப்பினராக சேர சொல்லி நிர்பந்திக்கின்றன.
கட்டணச்சேவை சரியா, தவறா எனும் விவாதத்தை விட்டுவிடுவோம். இணையத்தின் தன்மை என்னவெனில், இது போன்ற தடைகள் ஏற்படுத்தப்பட்டால், அதை தகர்த்தெறியும் சேவைகளும் உருவாக்கப்படும் என்பது தான். அந்த வகையில், தான் கட்டணச்சுவர்களுக்கு பின்னே இருக்கும் கட்டுரைகளை வாசிப்பதற்கான வழியாக ’12ஃபீட்’ (https://12ft.io/) தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கட்டணச்சேவை தளத்தை எதிர்கொள்ளும் போது, அதன் இணைய முகவரிக்கு முன்பாக இந்த தளத்தின் முகவரியை டைப் செய்து சமர்பித்தால் கட்டண பூட்டை விடுவித்து அந்த கட்டுரையை அணுக வழி செய்கிறது. பெரும்பாலான நேரங்களில் இது சரியாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி கட்டணச்சுவற்றை தகர்ப்பது தவறு அல்லவா? என கேட்கலாம். இது தகர்ப்பு அல்ல, நியாயமான குறுக்கு வழி என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கூகுள் முன்னிறுத்தும் ஆட்சென்ஸ் விளம்பர திட்டம் தான் இணையத்தை பாழடித்து விட்டது என துவங்கும் இந்த சேவைக்கான விளக்கம், பல தளங்கள் எஸ்.இ.ஒ உத்தியால் நிரம்பிய குப்பைகளை உருவாக்கி கூகுள் பட்டியலில் முன்னிலை பெற்றுவிடுகின்றன என்கிறது.
இவ்வாறு செய்ய முடியாத இணையதளங்கள் வருவாய்க்காக கட்டணச்சேவையை நாடுகின்றன. ஆனால், கூகுளில் பட்டியிலப்படுவதற்காக அதன் தேடல் சிலந்திகள் கண்ணில் பட வேண்டும் என்பதற்காக இந்த தளங்கள், கட்டணச்சுவர் இல்லாத பக்கத்தை கூகுள் தேடல் சிலந்திகள் கண்களுக்கு மட்டும் அளிக்கின்றன. இவ்வாறு, கூகுளால் சேமிக்கப்பட்ட இணைய பக்கத்தை தேடிப்பிடித்து கட்டணச்சுவர் தடையின்றி படிக்க வழி செய்யும் வகையில் இந்த தளம் செயல்படுகிறது.