ஆடியோ கேசட்களை மீட்டெடுப்போம்!
நாம் ஸ்பாட்டிபை காலத்தில் வசிக்கிறோம். நேப்ஸ்டர், எம்பி-3 காலத்தை எல்லாம் கடந்து வந்துவிட்டோம். சிடிக்களே பழங்கதையாகி விட்டன. அப்படியிருக்க, ஆடியோ கேசட்கள் பற்றி பேசுவதற்கு என்ன இருக்கிறது என நினைக்கலாம்.
1980 களிலும், 1990 களின் துவக்கத்திலும் இசைப்பிரியர்களின் இனிய நண்பனாக இருந்த ஆடியோ கேசட்கள் அதன் பிறகு வழக்கொழிந்து போயிருக்கலாம். ஆனால், விரும்பிய பாடல்களை பதிவு செய்து டேப்ரெக்கார்டரில் கேட்டு ரசிக்க வழி செய்த அனலாக் வடிவமான ஆடியோ கேசட் அளித்த ஆனந்தத்தை என்னவென்று சொல்ல.
இத்தகைய நினைவலைகள் உங்களுக்கும் இருந்தால், செண்ட் ஏ மிக்ஸ்டேப் (https://sendamixtape.com/ ) இணையதளம், உங்களையும், உங்களிடம் இருந்து டிஜிட்டல் வடிவிலான ஆடியோ கேசட்டை பெற இருக்கும் உள்ளத்தையும் உற்சாகத்தில் ஆழ்த்தும்.
பழைய நுட்பங்களை இப்படியும் மீட்டெடுக்கலாம் என உணர்த்துவது போல, இந்த தளம் ஆடியோ கேசட்டில் பாடல்களை பதிவு செய்து அன்பானவர்களுக்கு அனுப்பி வைக்க வழி செய்கிறது.
இந்த தளத்தில் நுழைந்தால் ஆடியோ கேசட்டின் காகித வடிவை எதிர்கொள்ளலாம். இந்த ஆடியோ கேசட்டில் உங்கள் பெயர் எழுதி, நீங்கள் விரும்பும் பாடல்களை பதிவு செய்து, அதை அப்படியே அச்சிட்டு, அழகாக மடக்கி, மடித்து பழைய ஆடியோ கேசட் வடிவில் உருவாக்கி கொள்ளலாம்.
இந்த ஆடியோ கேசட்டை நெருக்கமானவர்களுக்கு பரிசளிக்கவும் செய்யலாம்.
பரிசை பெறுபவர்கள், அதில் உள்ள கியூஆர் கோடை போனில் ஸ்கேன் செய்தால், அதில் பதிவாகியிருக்கும் பாடல்களை கேட்டு ரசிக்கலாம். காகித கேசட்டை உருவாக்கும் போதே, உங்களுக்கு பிடித்தமான பாடல் தொகுப்பை, ஸ்பாட்டிபை பிளேலிஸ்ட் வடிவில் அளித்தால், இந்த தளம் அதை கியூஆர் கோடாக மாற்றி கேசட் மீது அச்சிட்டுத்தருகிறது.
ஆக, காகிதத்தில் உருவான கேசட் தான். ஆனால் அதில் கிளிக் செய்தால், கையில் உள்ள போனில் பாடல்களை கேட்கலாம்.
எப்படி இருக்கிறது!
ஆடியோ கேசட்டில் விருப்பம் போல் பாடல்களை பதிவு செய்யும் பழக்கத்தை மிக்ஸ்டேப் என்கின்றனர். இதை ஒரு இசை கலாச்சாரமாகவே கருதலாம். நிறுவனமயமான ஆல்பங்களுக்கு எதிராக ரசிகர்களுக்கு சுதந்திரம் அளித்த கலாச்சாரம் இது. ஆனால் தொழில்நுட்ப மாற்றத்தால் மிக்ஸ்டேப் கலாச்சாரமும் வழக்கொழிந்து போய்விட்டது. அதற்காக அது தந்த சுதந்திரத்தை மறந்துவிடலாமா? அதனால் தான் மிக்ஸ்டேப் கலாச்சாரத்தை மீட்டெடுக்க உதவும் பல இணையதளங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றில் ஒன்றான ஓபன்டேப்.எப்.எம் தளத்தை , இணைய அற்புதம் என்று கூட வர்ணிக்கலாம். ஏனெனில் இந்த தளம், சொந்தமாக இணையதளம் வைத்திருந்தவர்கள், அந்த தளத்தில் தாங்கள் விரும்பிய பாடல்களை மிக்ஸ்டேப் போல பதிவேற்றிக்கொள்ள வழி செய்தது. இந்த பாடல்களை வேறு இணையதளங்களில் உள்ளீடு செய்து கேட்கச்செய்யலாம். கிட்டத்தட்ட உங்களுக்கான சொந்த இசை ஒலிபரப்பு சேவையை நடத்துவது போல தான் இதுவும். ஓபன்சோர்ஸ் அடிப்படையில் செயல்பட்டு வந்த இந்த தளம் இனியும் செயல்பாட்டில் இல்லை என்பது கொஞ்சம் வருத்தமானது தான்.