தேங்க்யூ சொல்ல ஒரு இணையதளம்

நம் எல்லோருக்கும் முறையீடுகள் இருக்கின்றன. ஆனால், அதைவிட முக்கியமாக நாம் எல்லோரிடமும் நன்றி தெரிவிக்க கூடிய விஷயங்களும் அதிகம் இருக்கின்றன. வரிசையில் நிற்கும் போது உதவி செய்த அறிமுகம் இல்லாத நபரில் துவங்கி, பெரும் நெருக்கடியில் உடன் நின்று கைகொடுத்த அலுவலக சகா வரை எண்ணற்றவர்களுக்கு நீங்களும், நானும் நன்றிக்கடன் பட்டிருக்கலாம்.

சின்ன உதவியோ, பெரிய உதவியோ அதை செய்தவர்களுக்கு மனதார நன்றி தெரிவிப்பது நல்ல விஷயம் தான். ஆனால், வாழ்க்கை சக்கரம் சுழலும் வேகத்தில் நன்றி தெரிவிப்பதற்கான நேரம் இல்லாமல் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

இதற்கு மாறாக கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு, நன்றி சொல்ல கடமைபட்டுள்ளவர்களுக்காக ஒரு இணைய பக்கம் அமைத்து மனமார்ந்த நன்றிகளை பதிவு செய்தால் என்ன? தேங்க்மீ.இன் ( https://thankme.in/) இணையதளம் இதற்காக என்றே அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு வாட்ஸ் அப் செய்தியை டைப் செய்யும் நேரத்தில், நீங்கள் நன்றி தெரிவிக்க விரும்பும் நபருக்காக இந்த தளத்தில் ஒரு இணைய பக்கம் அமைத்து, அந்த இணைப்பை நண்பர்களுடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளலாம். அப்படியே, நீங்கள் நன்றி உணர்வு கொள்வதற்கான காரணத்தையும் பகிரலாம். இவ்வாறு மற்றவர்களும் நன்றி உணர்வை பகிரும் போது, அந்த இணைய பக்கமே நெகழ்ச்சியின் மறுவடிவமாக அமையலாம்.

கொரோனா பெருந்தொற்று பாதிப்புக்கு மத்தியில், மனிதர்களின் முக்கியத்துவம் உணரப்பட்ட சூழலில், உதவி செய்த நல்லிதயங்களுக்கு இணையம் வழியே நன்றி தெரிவிக்க வழி செய்வதற்காக இந்த தளத்தை உருவாக்கியதாக அங்கித் மற்றும் அவரது சகாக்கள் தெரிவித்துள்ளனர். இதற்காகவே அங்கித் குழுவுக்கு நன்றி தெரிவிக்கலாம்.

  • கோவிட்-19 செய்தி சேகரிப்பிற்காக சிறந்த இதழியல் பங்களிப்பிற்கான புலிட்சர் விருது வென்ற பத்திரிகையாளர் எட் யாங்கிற்காக நான் உருவாக்கிய நன்றி நவிலல் பக்கம் இது:

  • டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்க உருவாக்கப்பட்டுள்ள தேங்யூ பக்கம்.

  • நீங்களும் உங்கள் நன்றி நவிலல் பக்கங்களை பகிரலாம்.