டிவிட்டரில் டியூரிங் சோதனை நடத்தும் இணையதளம்
டிவிட்டரில் பொய் கணக்குகளும், போலி கணக்குகளும் அநேகம் இருக்கின்றன. இவற்றில் பல ‘பாட்’களால் இயங்குகின்றன. அதாவது, குறிப்பிட்ட நோக்கிலான குறும்பதிவுகளை வெளியிடும் வகையில் உருவாக்கப்படும் புரோகிராம்களால் இயங்குகின்றன.
டிவிட்டர் பாட்களில் நல்ல நோக்கம் கொண்டவையும் உள்ளன. மற்றபடி உள்நோக்கத்துடனும், விளம்பர நோக்கத்துடனும் உருவாக்கப்படும் பாட்களும் உள்ளன.
எல்லாம் சரி, டிவிட்டரில் நாம் வாசிக்கும் பதிவுகள், உண்மையில் மனிதர்களால் பகிரப்பட்டவையா அல்லது ஏதேனும் பாட்களால் வெளியிடப்பட்டவைவா என அறிவது எப்படி? இதை கண்டறிவதற்கான வழி என்ன எனத்தெரியவில்லை, ஆனால், இந்த திறன் உங்களுக்கு இருக்கிறதா? என சோதித்துக்கொள்ள உதவும் இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
டிவிட்டர்டியூரிங்டெஸ்ட் (https://twitterturingtest.modelzoo.dev//) எனும் அந்த இணையதளம், டிவிட்டர் பயனாளிகளுக்கு சோதனை வைத்து, இந்த திறனை அறிந்து கொள்ள வழி செய்கிறது.
இந்த இடத்தில் டியூரிங் டெஸ்ட் பற்றி சில வார்த்தைகள்.
டியூரிங் டெஸ்ட் என்பது , இயந்திரங்களின் செயற்கை நுண்ணறிவை அறிவதற்கான சோதனை:
ஒரு கம்ப்யூட்டர் மென்பொருளுடன் நாம் உரையாடுகிறோம் போது, அது மென்பொருள் தான் என்பதை மறுமுனையில் உள்ள மனிதரால் கண்டு பிடித்துவிட முடியாத அளவுக்கு, அந்த மென்பொருளால் புத்திசாலித்தனமாக உரையாடலை மேற்கொள்ள முடிந்தால், அந்த மென்பொருள் உண்மையில் செயற்கை நுண்ணறிவு ஆற்றலை பெற்றுவிட்டதாக பொருள். – இது தான் டியூரிங்க் சோதனை.
கம்ப்யூட்டர் மேதையும், நவீன கம்ப்யூட்டர் அறிவியலின் தந்தை என போற்றப்படும் ஆலன் டியூரிங், 1950 ல் , இயந்திரங்களால் சிந்திக்க முடியுமா எனும் பொருளில் எழுதிய ஆய்வுக்கட்டுரையில் இந்த சோதனையை முன் வைத்திருந்தார்.
இன்று வரை செயற்கை நுண்ணறிவுகான அடிப்படையாக இந்த ஆய்வுக்கட்டுரை கருதப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு மென்பொருள் திறன் அறியும் சோதனையாகவும் கொள்ளப்படுகிறது.
இந்த டியூரிங் சோதனை கருத்தாக்கத்தின்படி தான் மேலே சொன்ன இணையதளம் செயல்படுகிறது.
இந்த தளத்தில், பயனர் பெயர் குறிப்பிடாமல் குறும்பதிவுகள் முன் வைக்கப்படுகின்றன. அந்த குறும்பதிவுகள், மனிதர்கள் பகிர்ந்தவையா அல்லது, பாட்கள் ( நியூரால் நெட்வொர்க்) பகிர்ந்தவையா என ஊகித்து சொல்ல வேண்டும்.
பயனர்கள் பதில் அளித்த பிறகு, அது சரியா, தவறா என குறிப்பிடப்பட்டு, அந்த குறும்பதிவை பகிர்ந்து கொண்ட டிவிட்டர் கணக்கின் முகவரி அடையாளம் காட்டப்படுகிறது.
குறும்பதிவுகளின் மொழியை மட்டும் அல்ல, மென்பொருளின் செயற்கை பகிர்வுகளையும் நாம் எந்த அளவு புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதை புரிய வைக்கும் சேவையாக இது இருக்கிறது.
இந்த சோதனை பின் உள்ள ஆய்வு முயற்சி தொடர்பாகவும் தளத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திப்பார்த்து, உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.