செக்லிஸ்ட்களுக்கான இணையதளம்
செக்லிஸ்ட் எனப்படும் செய் பட்டியல் அல்லது சரி பார்ப்பு பட்டியல்களை உருவாக்கி கொள்ள வழிகாட்டும் வகையில் புதியதொரு இணையதளம் அறிமுகம் ஆகியுள்ளது. செக்லிஸ்ட்.டு (https://checklist.to/ ) எனும் அந்த தளத்தை இந்த பிரிவின் ஆகச்சிறந்த தளம் என சொல்ல முடியாவிட்டாலும், சுவாரஸ்யமான முயற்சியாகவே இந்த தளம் அமைகிறது.
செக்லிஸ்ட் முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்திருக்கலாம். வெளியூர் பயணங்களின் போது தவறாமல் செய்ய வேண்டியவை அல்லது நேர்காணலுக்கு தயாராகும் போது மறக்காமல் இருக்க வேண்டியவை என்பது போன்ற குறிப்புகளி செக்லிஸ்ட்டாக முன்வைக்கப்படுகின்றன.
அனுபவ குறிப்புகள் என்றும் வைத்துக்கொள்ளலாம். இந்த பட்டியல்களில் ஒருவித வழிகாட்டும் தன்மையும் இருக்கும். ஒருவித மீற முடியாத தன்மையும் இருக்கும்.
எனினும், செக்லிஸ்ட்டை தனிநபர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்பவும் உருவாக்கி கொள்ளலாம். அந்த வகையில் தான் செக்லிஸ்ட்.டு இணையதளம் அமைகிறது. மிக எளிமையான முகப்பு பக்கம் கொண்ட இந்த தளத்தில் வரிசையாக செக்லிஸ்ட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. வீட்டில் இருந்தே பணியாற்றுவதில் துவங்கி தேர்வுக்கு தயாராவது வரை பலவிதமான பட்டியல்கள் இந்த பட்டியலில் வருகின்றன. ஒவ்வொன்றையும் கிளிக் செய்தால் பட்டியல் குறிப்புகளை விரிவாக வாசிக்கலாம்.
பெரும்பாலான குறிப்புகள் எளிதாக, சரியாக இருக்கின்றன.
இந்த குறிப்புகள் பயனுள்ளதாக தோன்றினால், சேமித்து வைத்துக்கொள்ளலாம் அல்லது சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளலாம். பயனாளிகள் விரும்பினால் இதே போன்ற பட்டியல்களை உருவாக்கி பகிர்ந்து கொள்ளலாம்.
பயனாளிகள் செக்லிஸ்ட்களை பகிரும் வசதியை பயன்படுத்து உறுப்பினராக சேர வேண்டும். இந்த அம்சம் காரணமாகவோ என்னவோ இந்த தளம் தன்னை செக்லிஸ்ட்களுக்கான சமூக வலைப்பின்னல் என வர்ணித்துக்கொள்கிறது. சமூக வலைப்பின்னல் தளம் என்று சொல்லும் அளவுக்கான விரிவான பயனாளிகள் பங்கேற்பு அம்சம் இல்லாமல் இப்போதைக்கு தனிநபர் தளம் போலவே இருந்தாலும் இந்த தளம் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.