இமெயில் மூலம் உறவு வளர்ப்பது எப்படி?
இமெயிலை திறம்பட நிர்வகிப்பது தொடர்பாக வழிகாட்டும் கட்டுரைகள் அநேகம் எழுதப்பட்டுள்ளன. இன்னமும் எழுதப்பட்டு வருகின்றன. இவற்றில் நுண்ணக்கமான பல விஷயங்களை காணலாம் என்றாலும், இந்த கட்டுரைகளில் மைய சரடு, முகவரி பெட்டியில் இமெயில் குவிந்து கிடக்காமல் அவற்றை உரிய நேரத்தில் பைசல் செய்வதாக இருக்கும்.
அதே போல, வந்து குவியும் மெயில்களை தரம் பிரித்து வகைப்படுத்தி, உடனடியாக பதில் அளிக்க வழிகாட்டுவதும் இவற்றின் முக்கிய அம்சமாக இருக்கும்.
பதில் அளிக்க முடியாத அளவுக்கு மெயில்கள் சேர்வதால் உண்டாக கூடிய இமெயில் சுமையை இறக்கி வைக்க, படித்துப்பார்த்து பைசல் செய்ய முடியாத பழைய மெயில்களை அப்படியே டெலிட் செய்துவிடலாம் என்றும் யோசனை சொல்லப்படுவதுண்டு.
இந்த போக்கில் இருந்து மாறுபட்டு இமெயில் நிர்வாகத்தில் யாரும் கவனிக்காத ஒரு அம்சம் பற்றி காரா என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். காராவும் செயல்திறன் சார்ந்த விஷயங்களை எழுதுபவர் என்றாலும், இந்த கட்டுரையில் இமெயிலை பைசல் செய்வதற்கான வழிகள் பற்றி எல்லாம் விவரிக்காமல், இமெயில் தொடர்பாக நம்மை யோசிக்க வைக்கும் ஒரு கேள்வியை கேட்டு, அதற்கான பதிலை அளித்திருக்கிறார்.
பழைய இமெயில்களுக்கு பதில் அளிப்பது எப்படி? என்பது தான் அந்தக்கேள்வி.
எந்த ஒரு இமெயிலுக்கும் பதில் அளிக்க தாமதமாகிவிடவில்லை எனும் கருத்துடன் துவங்குபவர், பதில் அளிக்காமல் விடப்பட்ட பழைய மெயில்களுக்கு பதில் அளிப்பதன் அவசியத்தை விளக்குகிறார்.
ஒரு நாள், ஒரு வாரம், இரண்டு வாரம், இரண்டு மாதம் என இமெயில் வந்து எவ்வளவு காலம் ஆனாலும் சரி, அதற்கு பதில் அளியுங்கள் என்கிறார்.
பழைய மெயில்களுக்கு பதில் அளிப்பது உங்களுக்கு ரகசிய ஆற்றலை அளிக்கும் என்பவர், இதன் மூலம் காலத்தை காணாமல் போகச்செய்வதோடு, அவர்கள் உங்கள் மீது கொண்டிருக்கும் உளவியல் பிடியையும் தளரச்செய்யலாம் என்கிறார்.
பழைய மெயில்களுக்கு பதில் அளிக்காமலே இருப்பதைவிட தாமதமாக பதில் அளிப்பதே சிறந்தது என்று கூறுபவர், இதற்கு அதிக நேரமும் தேவைப்படாது என்கிறார். பழைய மெயில்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகபட்சம் இரண்டு மணி நேரம் வரை தேவைப்படலாம் என்பவர், இமெயில்களை வரிகளின் தொகுப்பாக அல்லது செய்து முடிக்க வேண்டிய செயல்களின் பட்டியலாக பார்க்காமல், உறவை நிர்ணயிப்பதற்கான வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்கிறார்.
பழைய மெயிலுக்கு பதில் அளிப்பதன் மூலம், உங்கள் உறவை மீண்டும் சீராக்கும் என்பதோடு, உறவை காப்பதில், நீங்கள் அதிக அக்கறை கொண்டிருப்பதையும் உணர்த்தும் என்கிறார்.
பழைய மெயில்களுக்கு பதில் அளிக்க ஆலோசனை சொல்லும் இமெயில் வல்லுனர்கள் குறைவு என்பதோடு, இமெயிலை உறவு வளர்க்கும் சாதனமாக பார்ப்பவர்களும் குறைவு தான். ஆனால், காரா மிக அழகாக உறவுக்கான பாலமாக இமெயிலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்.
பழைய மெயிலுக்கு பதில் அளிப்பதன் அவசியத்தை புரிய வைப்பவர், இதற்கான வழிமுறைகளையும் விளக்கியிருக்கிறார்.
அதாவது, தவறவிட்ட மெயில்களுக்கு எப்படி பதில் எழுதுவது எனும் கேள்விக்கான பதிலும் அளித்திருக்கிறார்.
குறிப்பிட்ட மெயிலுக்கு தாமதமாக நன்றி தெரிவிக்க நேர்ந்தால் அதை எப்படி செய்வது என முதலில் விளக்குகிறார். உதாரணத்திற்கு, கடந்த வாரம் ஒருவர் ஜூம் சந்திப்பிற்கு அழைத்திருக்கலாம். அந்த சந்திப்பே முடிந்துவிட்ட நிலையில் அந்த மெயிலுக்கு தாமதமாக பதில் அனுப்புவது எப்படி என குழம்பலாம். இது ஒன்றும் பிரச்சனையே இல்லை, ‘ மன்னிக்கவும், உங்கள் அழைப்பை தாமதமாக தான் பார்த்தேன். இதை தவறவிட்டதற்கு வருந்துகிறேன்” என்று பதில் அளிக்கலாம் என்கிறார்.
இன்னொரு வகை மெயிலில், பத்தி பத்தியாக வாசகங்கள் இடம்பெற்றிருந்தாலும் நீங்களும் பதிலுக்கு அத்தனை பெரிதாக எழுத வேண்டியதில்லை. அப்படி நினைத்து பதில் எழுதாமல் இருக்கவும் வேண்டியதில்லை. மெயிலின் சாரம்சத்திற்கு ஏற்ப சுருக்கமாக பதில் அளித்தால் போதுமானது.
இதே போல, மெயில் மூலம் உரையாடலை தொடர விரும்பினால் அதற்கேற்ப பதில் அளிக்கலாம் அல்லது, மேற்கொண்டு மெயில் அனுப்ப விரும்பவில்லை என்றாலும், அதை பணிவுடன் நயமாக சொல்லிவிடலாம் என்கிறார்.
எனக்குத்தெரிந்து இமெயில் பரிமாற்றத்தில் இந்த வகையான கோணத்தில் யாரும் பார்தத்து இல்லை என நினைக்கிறேன். தள்ளிப்போடுவதும், தாமதம் செய்வதும் பலருக்கு இயல்பானது எனும் போது, இந்த பழக்கங்கள் இமெயில் உறவை பாதிக்காமல் இருப்பதற்கான வழியை இந்த கட்டுரை மூலம் காரான சுட்டிக்காட்டியிருக்கிறார்.
பத்திரிகையாளரான காரா, செயல்திறன் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருப்பதாக அறிய முடிகிறது. அதோடு அவர், பிராஸ் ரிங் டெய்லி எனும் செய்தி மடலையும் நடத்தி வருகிறார்.
இந்த செய்திமடலின் பழைய பதிப்பு ஒன்றில், உங்களால் செய்ய முடியும் (“you can do it.”) என்று சொல்வதை விட, நீங்கள் செய்து முடிப்பீர்கள் (You will do it. ) என்று சொல்வது சிறப்பாக இருக்கும் என்கிறார்.
காராவின் இணையதளம்: https://www.karacutruzzula.com/