திரைப்பட புதிர் இணையதளம்
தீவிர திரைப்பட ரசிகர்களுக்கு, நிச்சயம் ராட்டன் டமேட்டோஸ் ( https://www.rottentomatoes.com/) இணையதளத்தை தெரிந்திருக்கும். ராட்டன் டமேட்டோஸ் தளத்தை அறிந்தவர்களுக்கு இப்போது நாம் பார்க்கப்போகும் தளம் சுவாரஸ்யமாக இருக்கும். மற்றவர்கள் முதலில் ராட்டன் டமேடோஸ் தளத்தை பரிட்சியம் செய்து கொள்வது நல்லது.
ராட்டன் டமேட்டோஸ் தளத்தை அறியாதவர்களுக்காக ஒரு சுருக்கமான அறிமுகம்: திரைப்பட களஞ்சியமாக அறியப்படும் ஐஎம்டிபி போல இதுவும் மிகவும் பிரபலமான திரைப்பட இணையதளம். ஆனால், முழுக்க முழுக்க திரை விமர்சனங்களுக்கானது. உண்மையில், திரை விமர்சனங்களை தொகுத்தளிக்கும் இணையதளம்.
ஐஎம்டிபி தளத்தில் திரைப்படங்களுக்கான மதிப்பீடு இருப்பது போல, ராட்டன் டமேட்டோஸ் தளத்திலும் மதிப்பீடு உண்டு. திரை ரசிகர்கள் மத்தியில் இந்த மதிப்பீடுக்கு மதிப்பு அதிகம்.
ரசிகர்கள் பலர், ராட்டன் டமேட்டோஸ் மதிப்பீட்டை பார்த்து படம் பார்ப்பது உண்டு. பலர் படம் பார்த்து விட்டு, இந்த மதிப்பீட்டுடன் மல்லுக்கட்டுவதும் உண்டு.
இந்த அறிமுகம் போதும், இப்போது மூவி கெஸர் ( https://movie-guessr.surge.sh/) இணையதளத்திற்கு வருவோம்.
ரசிகர்களின் திரைப்பட அறிவை சோதிக்கும் வகையில் இந்த தளம், திரைப்படங்களுக்கான புதிர் போட்டியை நடத்துகிறது. இதில் வரிசையாக காண்பிக்கப்படும் திரைப்பட பெயர் மற்றும் போஸ்டரை கொண்டு, அந்த படத்திற்கான ராட்டன் டமேட்டோஸ் மதிப்பீட்டை கணிக்க வேண்டும்.
உங்கள் கணிப்பு எந்த அளவு, உண்மையான கணிப்புடன் பொருந்துகிறது என்பதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும்.
ராட்டன் டமேட்டோஸ் மதிப்பீட்டை தெரிந்திருந்தால் இந்த புதிர் சுவாரஸ்யமாக இருக்கும்.
ரசிகர்கள் பார்க்க வேண்டிய படங்களை தெரிந்து கொள்வதற்கான புதுமையான வழியாகவும் இந்த புதிர் அமைந்திருக்கிறது.
திரைப்பட போஸ்டரை பார்த்ததும், அதற்கான மதிப்பீட்டை கணித்த பிறகு ராட்டன் டமேட்டோஸ் மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளும் போது, அந்த படம் பற்றிய புதிய கண் திறப்பாகவும் அமையலாம்.
ராட்டன் டமேட்டோஸ் மதிப்பெண் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல், இந்த தளத்தில் 100 சதவீத மதிப்பெண் வாங்கிய படங்கள் என்றே ஒரு பட்டியல் இருக்கிறது. இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த, ஹாலிவுட் காவியமான சிட்டிசன் கேனே, ஒரு பழைய விமர்சனம் கண்டறியப்பட்டதால், அந்த தகுதியை இழந்ததும் கூடுதல் தகவல்.
ஆண்ட்ரு பர்ன்ஸ் எனும் இளம் மென்பொருளாலர் மேலே விவரித்த தளத்தை உருவாக்கி இருக்கிறார்.