முககவசம் அணிய நினைவூட்டும் செயலி
காலத்தால் செய்த உதவி என்பது போல, காலத்திற்கு ஏற்ற செயலிகளில் ஒன்றாக, வியர்யுவர்மாஸ்க் ஆப் ( https://xalting.com/wearyourmaskapp) அறிமுகம் ஆகியிருக்கிறது. வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முககவசம் அணிந்து கொள்ள நினைவூட்டும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு நீடிக்கும் சூழலில், முககவசம் அணிவது போன்ற தனிப்பட்ட சுகாதார செயல்பாடுகள் முக்கியமாகிறது. முககவசம் அணிவதன் அவசியத்தை பெரும்பாலானோர் உணர்ந்திருந்தாலும், சில நேரங்களில் வெளியே செல்லும் போது முககவசம் அணிய மறக்கலாம்.
இது போன்ற சூழல்களில், முககவசம் அணிவதை நினைவூட்டுவதற்காக என்றே இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை தரவிறக்கம் செய்து போனில் நிறுவிக்கொண்டால், வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முக்கவசம் அணிந்து கொண்டீர்களா? என நமக்கெல்லாம் பழகிய நோட்டிபிகேஷன் பாணியில் கேட்கிறது.
அதே போல, வீட்டிற்கு திரும்பும் போது, கைகளை கழுவுவதற்கும் நினைவூட்டுகிறது.
எளிமையான ஆனால், அருமையான சேவை என சொல்லக்கூடிய இந்த செயலி முதல் கட்டமாக ஐபோனுக்கு என அறிமுகம் ஆகியுள்ளது. ஆண்ட்ராய்டு வடிவத்தை எதிர்பார்க்கலாம்.
*
இந்த சேவையை அறிமுகம் செய்யும் போது, இன்று குடையை எடுத்துச்செல்ல வேண்டுமா என நினைவூட்டும் வகையில் உருவாக்கப்பட்ட செயலி நினைவுக்கு வருகிறது.