ரகசிய செய்திகளுக்கான இணையதளம்
செய்திகளையும், தகவல்களையும் பகிர்ந்து கொள்ள வாட்ஸ் அப், டெலிகிராம், சிக்னல் என அநேக வழிகள் இருந்தாலும், மூன்றாம் நபர் யாரும் பார்க்க வாய்ப்பில்லாமல் ஒரு செய்தியை ரகசியமாக பகிர்ந்து கொள்ள விரும்பினால், சீக்ரட்.லிங்க் ( https://scrt.link/ ) இணையதளம் அதற்கு வழி செய்கிறது.
ஒரு முறை மட்டும் பகிரக்கூடிய மற்றும் படித்த பின் தானாக அழிந்து விடக்கூடிய வகையில் செய்திகளை பகிர்ந்து கொள்வதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ள ரகசிய இணையதளம் இது.
ரகசியம் காக்க விரும்புகிறவர்கள் இந்த தளத்தில் உள்ள மெசேஜிங் கட்டத்தில் தங்கள் செய்திகளை சமர்பித்து அதற்கான தனிப்பட்ட இணைய முகவரியை உருவாக்கி கொள்ளலாம். இந்த முகவரியை செய்திக்குறியவரிடம் பகிர்ந்து கொண்டால், அவர் இணைப்பை கிளிக் செய்து தகவலை தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு செய்தி தானாக அழிக்கப்பட்டு விடும்.
தகவல்கள் அல்லது இணைய இணைப்புகளை இந்த முறையில் பகிர்ந்து கொள்ளலாம். தகவல்கள் படிக்கப்படும் போதே பற்றி எரியும் வகையிலான டிஜிட்டல் எழுத்து வடிவத்தையும் ( நியோகிராம்) தேர்வு செய்யலாம். செய்தி படிக்கப்பட்டதை இமெயில் அல்லது குறுஞ்செய்தி வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
இந்த தளத்தின் அனுப்பி வைக்கப்படும் தகவல்கள் என்கிரிப்ட் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், செய்தியை பெறுபவர்கள் அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்துக்கொள்ள வழி இருக்கிறது.
பிரைவசி கவலை அதிகரித்திருக்கும் உலகில் நிச்சயம் தேவையான சேவை தான். ஆனால், ரகசிய தகவல்களை இந்த சேவையை நம்பி எப்படி பகிர்ந்து கொள்வது எனும் கேள்வியும் எழுகிறது.
http://cybersimman.com/2011/08/28/email-13/