உங்கள் மனநிலையை மாற்றும் இணையதளம்
உற்சாகமான மனநிலை பெற வழிகாட்டும் ஊக்கம் மிகு இணையதளங்கள் பல இருக்கின்றன. அந்த பட்டியலை தனியே பார்க்கலாம். இப்போதைக்கு மோசமான மனநிலையை மாற்றிக்கொள்ள உதவும் எளிமையான இணையதளத்தை மாற்றிக்கொள்ளலாம்.
சில நேரங்களில், வாழ்க்கையின் கசங்கல்களில் சிக்கி, பிரச்சனைகளால் பிழியப்பட்டு, அழுக்குத்துணி போல உணரும் மனநிலையை பெறுவது உண்டு அல்லவா?
இப்படி வாழ்க்கையே வெற்றுத்துப்போனதாக நினைக்கும் தருணங்களில் இருந்து மீட்டெடுப்பதற்கு என்றே, ஐ பீல் லைக் ஏ கிரேப்.டுடே ( https://ifeellikecrap.today/) இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.
நான் குப்பை போல உணர்கிறேன் என பொருள்படும் நோக்கிலான தலைப்பை கொண்டுள்ள இந்த தளத்தின் முகப்பு பக்கம், நீங்கள் ஏன் குப்பை போல உணர்கிறீர்கள் என்பதை கண்டறிய உதவுவதாக கூறுகிறது.
இதற்கான காரணத்தை கண்டறிய, ’நான் குப்பை போல உணர்கிறேன் ’ எனும் வாசகத்தை கிளிக் செய்யச்சொல்கிறது.
இதை கிளிக் செய்தவுடன், இது மோசம் தான், சாப்பிட்டீர்களா? என கேட்கிறது. இதற்கு பதில் அளித்தால், தாகமாக இருக்கிறதா என கேட்கிறது. இதற்கும் பதில் அளித்தால், வியர்க்கிறதா? வெளியே செல்ல விருப்பமா? போன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன.
இந்த கேள்விகளுக்கான ஆம் / இல்லை பதிலுக்கு ஏற்ப அடுத்த கேள்வி தோன்றுகிறது. நான்கைந்து கேள்விகளுக்கு பிறகு, இப்போது மனநிலை சரியாகி இருக்குமே என சொல்லி ஊக்கம் அளிக்கிறது. இதை ஏற்காமல், இன்னும் சில கேள்விகளை எதிர்கொண்டு மனநிலையை மாற்றிக்கொள்ள வழி தேடலாம்.
இந்த தளம், முன் தீர்மானிக்கப்பட்ட கேள்விகள்- பதில்கள் என டெம்பிளட் வடிவில் இருந்தாலும், புத்திசாலித்தனமாகவே இருக்கிறது. உளவியல், தத்துவம், உலக விசாரம் என்றெல்லாம் பெரிதாக எதையும் செய்ய முயற்சிக்காமல், கொஞ்சம் சுவாரஸ்யமாக உங்கள் மனநிலையை மாற்ற முயற்சிக்கிறது.
நீங்களும் முயன்று பாருங்கள் அல்லது நண்பர்களுக்கு பரிந்துரையுங்கள்.
-