இது அரட்டைக்கான ஜூம் சேவை
ஜூம் வீடியோ உரையாடலை எளிதாக்கி இருப்பதோடு, இந்த பிரிவை பிரபலமாக்கியும் இருக்கிறது. அதே நேரத்தில், அளவுக்கு அதிகமான வீடியோ உரையாடலால் வரும் ஜூம் களைப்பையும் உண்டாக்கி இருக்கிறது. ( கூகுள் மீட் உள்ளிட்ட சேவைகளுக்கும் இது பொருந்தும்.)
இதன் காரணமாக, பலரும் வீடியோ உரையாடல்களை குறைத்துக்கொண்டு நேரடி சந்திப்புகளுக்கு ஏங்கும் நிலையில், இன்னொரு வீடியோ உரையாடல் சேவையை அறிமுகம் செய்யலாம் என இருக்கிறேன்.
ஏனெனில், இப்போது நாம் பார்க்க இருக்கும் கேம்கோ (https://www.camgo.com/ ) சேவை ஜூம் வகை சேவைகளுக்கு போட்டி அல்ல, அவற்றில் இருந்து மாறுபட்டது. கேம்கோவும் வீடியோவை அடிப்படையாக கொண்டது தான் என்றாலும், இது வீடியோ சந்திப்பு அல்லது கூட்டங்களுக்கான அல்ல. இது வீடியோ உரையாடலுக்கானது.
வீடியோ சந்திப்புக்கும், வீடியோ உரையாடலுக்கும் என்ன வேறுபாடு என நீங்கள் கேட்கலாம். வீடியோ சந்திப்பு என்பது, குறிப்பிட்ட நோக்கத்துடன் உங்கள் குழுவினரை சந்திப்பதற்காக திட்டமிடப்படுவது. ஜூம், கூகுள் மீட் சேவைகள் இதற்கு ஏற்றவை. இந்த சேவைகள் மூலம், அன்றாட அலுவல் குறித்து ஆலோசனை நடத்தலாம், பாடம் நடத்தலாம், பணிகளை திட்டமிடலாம்.
ஆனால், கேம்கோ சேவையில் அறிமுகம் இல்லாத மனிதர்களுடன் வீடியோ உரையாடலில் ஈடுபடலாம். இப்போது கொரோனா தாக்கத்தால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியிருப்பதால் நண்பர்களை கூட அடிக்கடி பார்த்து பேச முடிவதில்லை அல்லவா! இந்த பின்னணியில், சமூக இடைவெளியை கடைப்பிடித்தபடி, இணையத்தில் புதியவர்களுடன் உரையாட கேம்கோ சேவை வழி செய்கிறது.
அந்த வகையில் கேம்கோவை எப்போதும் திறந்திருக்கும் வீடியோ அரட்டையறை என கொள்ளலாம். இதில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நுழைந்து, யாரோ ஒருவருடன் உரையாடலாம்.
இப்படி, புதியவர்கள் அல்லது அறிமுகம் இல்லாதவர்களுடன் உரையாட இணையத்தில் அநேக சேவைகள் இருக்கின்றன. இந்த பிரிவில் சாட்ரவுடளட் தளத்தை முன்னோடி என சொல்லலாம். ஆனால் கேம்கோ சமூக இடைவெளி எனும் கருத்தாக்கத்தை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சித்து, கொரோனா சூழலில் புதியவர்களுடன் உரையாடலாம் என்கிறது.
கொரோனா சூழலில் இணைய நட்புக்கு உதவும் சேவைகளும் கூட பல இருக்கவே செய்கின்றன. ஆனால், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பாதுகாப்பான வீடியோ உரையாடல் வசதியை அளிப்பதாக கேம்கோ சொல்கிறது.
அறிமுகம் இல்லாதவர்களுடனான உரையாடல் எனும் போது புதியவர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு சாதகமானது என்றாலும், அந்த உரையாடல் எத்தகைய அனுபவமாக இருக்கும் என உறுதி அளிக்க முடியாதது கொஞ்சம் ஆபத்தான சங்கதி தான். இந்த இடரை எதிர்கொண்டு இணையவழி வீடியோ உரையாடல் சேவைகளை அணுக வேண்டும்.
இத்தகைய இடரை குறைக்கும் வகையில் கேம்கோ, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் பாதுகாப்பான உரையாடலை அளிப்பதாக உறுதி அளிக்கிறது. அதாவது,செயற்கை நுண்ணறிவு வாயிலாக வடிக்கட்டலை அளித்து பாதுகாப்பை உறுதி செய்வதாக கொள்ளலாம்.
அதோடு கேம்கோ, இரண்டு கட்டமாக உரையாடல் வசதியை அளிக்கிறது. புதியவர்களுடன் உரையாட தயக்கம் உள்ளவர்கள் முதல் கட்டமாக வெறும் வார்த்தைகள் சார்ந்த வரி வடிவ உரையாடலில் ஈடுபடலாம். அதன் பிறகு வீடியோ உரையாடலுக்கு மாறலாம். இல்லை இரண்டும் கலந்த வடிவிலும் உரையாடலாம்.
வீடியோ உரையாடல் அனுபவம் ஏற்புடையதாக இருந்தால், உங்கள் ரசனைக்கு ஏற்ற ரசனை கொண்டவர்களை தேர்வு செய்தும் உரையாடலாம்.
வீடியோ உரையாடல் என்பது எத்தனை பரவலானதாக ஆகி வருகிறது என்பதற்கு கேம்ப்கோ சமீபத்திய உதாரணம்.