பைடனை கண்காணிக்க ஒரு இணையதளம்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றிருக்கும் நிலையில், அதிபராக அவரது செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை கண்காணிப்பதற்காக என்றே டிராக்பைடன் ( https://trackbiden.com/) எனும் இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.
அதாவது, தேர்தல் பிரச்சாரத்தின் போது பைடன் அளித்த வாக்குறுதிகளை எந்த அளவு நிறைவேற்றுகிறார் என்பது தொடர்பான தகவல் அளிக்கும் நோக்கத்துடன் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.
டொனால்டு டிரம்பின் பிடியில் அமெரிக்க சிக்கியிருப்பதாக பலரும் கருதிய நிலையில், மாற்றத்திற்கான மனிதராக பார்க்கப்பட்ட பைடன், பிரச்சாரத்தின் போது பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதிலும் குறிப்பாக ஆட்சிக்கு வந்த நூறு நாட்களில் இவற்றை எல்லாம் செய்வேன் என பல முக்கிய வாக்குறுதிகளை மக்கள் மன்றத்தில் வைத்திருக்கிறார்.
இப்போது பைடன் ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், 100 நாட்களில் செய்வதாக உறுதி அளித்த விஷயங்களை அவர் நிறைவேற்றுகிறாரா? என்பது தொடர்பான தகவல்களை இந்த தளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
அதற்கேற்ப, குடியுரிமை பிரச்சனை, பொருளாதாரம், சுற்றுசூழல் என ஐந்து முக்கிய பிரிவுகளின் கீழ் , அதிபர் அளித்த வாக்குறுதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. வாக்குறுதி நிறைவேற்றப்படும் போது, அது தொடர்பான தகவல் புதுப்பிக்கப்படுகிறது.
அதிபரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்க அறிவிப்பு, வீடியோ வெளியீடு என வாக்குறுதி நிறைவேற்றத்திற்கான ஆதாரங்களும் இடம்பெறுகின்றன.
பொதுவாக ஊடகங்கள் கூட, தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரின் செயல்பாடுகளை 100 நாள் காத்திருந்து அலசி ஆராய்வது தான் வழக்கம். ஆனால், உடனுக்குடன் இந்த ஆய்வை மேற்கொள்ளும் வகையில் பைடன் செயல்பாடுகளை பின் தொடரும் வகையில் சூட்டோடு சூட்டாக இந்த தளத்தை அமைத்திருக்கின்றனர்.