மொழி ஆர்வலர்களுக்கான இணையதளம்
ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள விரும்பினால் அநேக இணையதளங்கள் இருக்கின்றன. ஆனால், ஆங்கில மொழியின் நுணுக்கங்களை அனுபவித்து மகிழ வேண்டும் என்று நினைத்தால், தி லாங்குவேஜ் நெர்ட்ஸ் (https://thelanguagenerds.com/ ) தளம் பொருத்தமாக இருக்கும்.
’நெர்ட்’ என்பது பொதுவாக தொழில்நுட்ப பித்தர்களை குறிக்கும் சொல். ஞான கிறுக்கன் என்று சொல்வது போல, டெக் கிறுக்கன் என்று வைத்துக்கொள்ளலாம். தொழில்நுட்பத்தில் அதீத ஆர்வம் கொண்டவர்கள் என்றும் புரிந்து கொள்ளலாம்.
இதே போல, மொழி சார்ந்த விஷயங்களில் அதீத ஆர்வம் உள்ளவர்களுக்காக, நடத்தப்படும் வலைப்பதிவு தான் மேலே சொன்ன தளம்.
இந்த தளத்தில் மொழி சார்ந்த பல சுவாரஸ்யமான விஷயங்களை சுட்டிக்காட்டும் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. உதாரணத்திற்கு, ஒரே விஷயம் என நாம் நினைத்துக்கொண்டிருப்பவை, ஆனால் உண்மையில் வேறு வேறான விஷயங்கள் என ஒரு கட்டுரை அமைந்துள்ளது. வெதர் ( வானிலை), பருவநிலை (கிளைமேட்). இந்த இரண்டும் ஒன்று என்று தான் நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால், வானிலை என்பது ஒரு இடத்தின் தற்காலிக காற்று மண்டல சூழலை குறிப்பது. பருவநிலை என்பது ஓரிடத்தின் சராசரி வானிலை போக்கை குறிப்பதாகும். அதே போல, ஆங்கிலத்தில் டர்டல் மற்றும் டார்டாய்ஸ் இரண்டும் ஆமையை குறிப்பதாக நினைப்போம். ஆனால், டர்டல் என்றால், கடல் ஆமையை , அதாவது பெரும்பாலும் தண்ணீரில் இருக்கும் ஆமையை குறிக்கும். டார்டாய்ஸ் நிலத்தில் வாழ்வது. அதே போல ஜாம் என்பது பழங்களால் செய்யப்படுவது: ஜெல்லி என்பது பழச்சாறில் செய்யப்படுவது.
இப்படி மொழி சார்ந்த மிக நுட்பமான தகவல்களை, ஆனால் படிப்பதற்கு மிக சுவாரஸ்யமான தகவல்களை இந்த தளத்தில் உள்ள கட்டுரைகள் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
மொழியின் பயன்பாடு, மொழி வரலாறு, உச்சரிப்பு என பல்வேறு வகைகளில் கட்டுரைகள் அமைகின்றன.
மொழிகளில் இத்தனை விஷயங்களா என வியக்க வைக்கிறது இந்த தளம். குறித்து வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் மொழி ஆர்வம் மட்டும் அல்ல, மொழித்திறனும் மேம்படும்.
எல்லா மொழிகளிலும் ஒரே ஒலி கொண்ட ஒரே வார்த்தை, எதிரெதிர் பொருள் கொண்ட ஒரே வார்த்தை போன்ற பதிவுகளும் கவனத்தை ஈர்க்கின்றன. உலக மொழிகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள் கொண்டுள்ள தொடர்பை சுவாரஸ்யமான வரைபட மரம் மூலம் உணர்த்தும் பதிவுகளும் சுட்டிக்காட்டப்படுகின்றன.
மொழி பெருமையை வைத்து ஜல்லியடித்துக்கொண்டிருப்பவர்கள் இந்த தளத்தை ஒரு முறை பார்த்தால் நல்லது!
--