செல்பீக்கு எதிரான இணையதளமும், மெலேவிச் எனும் நவீன ஓவியரும்!
இப்போது நாம் மிக சுவாரஸ்யமானதொரு இணையதளத்தை பார்க்க இருக்கிறோம். இந்த இணையதளத்தின் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும் எனில், இணையத்தில் மகத்தானதொரு கலை பயணத்திற்கு தயாராக வேண்டும். அந்த பயணத்தில் நீங்கள் மகத்தான கலைஞர் ஒருவரை அறிமுகம் செய்து கொள்ளலாம். ஏனெனில், அந்த கலைஞரை கொண்டாடும் வகையில் தான் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டிசெல்பீகிளப் (https://antiselfie.club/ ) என்பது அந்த தளத்தின் பெயர். எதற்கெடுத்தாலும் செல்பீ எடுக்கும் நம் காலத்து பழக்கத்தை கேள்விக்குள்ளாகும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தளம். செல்பீ எடுப்பதன் மூலமே இந்த தளம் இதை செய்ய வைப்பது தான் இதன் சிறப்பு.
ஆம், இந்த தளம் மூலம் பயனாளிகள் தங்கள் வெப்கேமை திறந்து செல்பீ எடுக்க அனுமதிக்கலாம். ஆனால் வழக்கமான செல்பீக்கு பதிலாக, இந்த தளம் மூலம் எடுக்கும் செல்பீயில், பயனாளியின் முகத்தை மறைக்கும் வகையில் அவரது தோற்றத்தின் மீது கருப்பு சதுரம் அல்லது கருப்பு வட்டம் தோன்றும்.
முகத்தின் தோற்றத்தை மறைக்கும் இந்த கருப்பு சதுரத்தில் தான் விஷயம் இருக்கிறது. இந்த கருப்பு சதுரம், முகத்தை மறைத்து, சுய கர்வத்துடன் செல்பீ படத்தை பகிர்ந்து கொள்ள முடியாமல் செய்யும் என்பது மட்டும் அல்லாமல், இந்த சதுரங்களும், வட்டங்களும் விசேசமானவை.
இவை அனைத்தும் ஒரு மகத்தான ஓவிய கலைஞரின் கலை வெளிப்பாட்டின் அடையாளமாக விளங்குபவை. கஸிமீர் மெலேவிச் (Kasimir Malewitsch) எனும் ரஷ்ய ஓவிய கலைஞர்!
யார் இந்த மெலேவிச்? இவரது கருப்பு சதுரங்களுக்கும் செல்பீ பழக்கத்திற்கும் என்ன தொடர்பு என தெரிந்து கொள்வதற்காக இணையத்தில் தேடிப்பார்த்தால், மெலேவிச் வியக்க வைக்கிறார்.
நவீன ஓவியம் என்றதும் நினைவுக்கு வரும் பிக்காசோ, வான்கா போன்ற ஓவியர்களின் வரிசையில் மெலேவிச்சும் வருகிறார். இவருக்கு என்று தனி ஓவிய பாணி இருப்பதோடு, கலை வெளிப்பாட்டிற்கான தனித்துவமான கோட்பாட்டையும் முன்வைத்திருக்கிறார். கியூபிசம், மாடர்னிசம் என்றெல்லாம் சொல்லப்படும் ஓவிய முறையில், சூப்ரிமேட்டிஸம் ( Suprematism) எனும் ஓவிய மரபை ஏற்படுத்தியவராக மெலேவிச் கருதப்படுகிறார்.
பொதுவாக, இருபதாம் நூற்றாண்டில் புதிய குரலாக உருவெடுத்த கலைஞர்களை அவண்டே கிரேட் என குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் ரஷ்யாவின் அவண்டே கிரேட் ஓவியராக திகழ்ந்த மெலேவிச், ஓவியம் என்றால் யதார்த்ததின் கூறுகளை கொண்டிருக்க வேண்டும் எனும் கருத்தை முற்றிலும் நிராகரித்து, அருவமான கலை வடிவத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதே மெலேவிச்சின் ஓவிய பாணியாக அமைந்திருந்தது.
உள்ளதை உள்ளபடி வரைவதை கைவிட்டதோடு, வண்ணங்களுக்கும், வடிவங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஓவியங்களை வரைந்தார். வடிவியலில் இவருக்கு இருந்த ஆர்வம் ஓவியத்தில் முழுவதும் பிரதிபலித்தது.
கலை என்பது, அது எடுத்துக்கொள்ளும் கருப்பொருளை கடந்ததாக இருக்க வேண்டும் என இவர் கருதினார். இதற்கு வடிவம் கொடுக்கும் பாணியையே சுப்ரிமேட்டிஸ்ம் என குறிப்பிட்டார். உருவம் அல்லது வரையப்படும் கருத்தைவிட, வடிவங்களும், வண்ணங்களும் மேம்பட்டதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.
முதல் உலகப்போர் மற்றும் ரஷ்ய புரட்சி காலத்தில் வாழ்ந்த மெலேவிச், தனது ஓவிய கோட்பாட்டை விளக்கி எழுதவும் செய்திருக்கிறார். ரஷ்யாவின் விவசாய வாழ்க்கை, நிலப்பரப்பு மற்றும் மத சூழலை வரையத்துவங்கியவர் பின்னர் தனது தனித்துவமான ஓவியங்களால் ஐரோப்பாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.
எளிமையான வடிவங்கள் மற்றும் வண்ணங்களை கொண்டு பிரதானமாக ஓவியங்களை வரைந்தவர், வட்டங்கள், சதுரங்கள் மற்றும் செவ்வக வடிவங்களை உணர்வுகளை பிரதிபலிக்க தனது ஓவியங்களில் பயன்படுத்தியிருக்கிறார்.
வழக்கமான சித்திர பாணியை நிராகரித்தவர் என்பதாலும், உணர்வுகளை பிரதிபலிக்க வடிவங்களை கையாண்டவர் என்பதாலும் இவரது ஓவியங்களின் அடையாளமாக வட்டங்களும், சதுரங்களும் கருதப்படுகின்றன.
அதிலும் குறிப்பாக இவர் வரைந்த கருப்பு சதுரம் மற்றும் சிவப்பு வட்டம் ஆகிய ஓவியங்கள் புகழ் பெற்றவையாக கருதப்படுகின்றன. கருப்பு சதுரம் ஓவியம் முதல் முறையாக கண்காட்சியில் வைக்கப்பட்ட போது, ஓவிய உலகில் புதிய பெரும் கிளர்ச்சியை உண்டாக்கியது. இதில் கையாளப்பட்டிருக்கும் விவரங்கள் எண்ணற்ற விஷயங்களை சொல்லாமல் சொல்வதாக கொண்டாடப்படுகிறது.
இதே போல, சிவப்பு வட்டம் ஓவியமும், ரஷ்ய விவசாய பெண்களின் வாழ்க்கையை தட்டையான இரு பரிமாணத்தில் வலுவாக சொல்வதாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஓவியங்கள் ஒவ்வொன்றுக்கும் விக்கிபீடியாவில் தனித்தனி பக்கங்கள் இருக்கின்றன. அது மட்டும் அல்ல, அவரது பெரும்பாலான ஓவியங்களுக்கு தனி பக்கங்கள் இருப்பதோடு, கூகுளிலும் பல்வேறு இணைய பக்கங்கள் அடையாளம் காட்டப்படுகின்றன.
மெலேவிச் நினைவாக அமைக்கப்பட்டுள்ள இணையதளத்திலும், இவரது ஓவியங்களையும் அவற்றுக்கான விளக்க குறிப்புகளையும் பார்க்க முடிகிறது. மெலேவிச் ஓவியங்கள் சிந்திக்க வைப்பதோடு, நவீன ஓவிய மரபில் இவரது தாக்கத்தையும் தெளிவாக உணர முடிகிறது.
மெலேவிச் வரைந்த கருப்பு சதுரம் ஓவியத்தின் நூற்றாண்டை குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியையின் அங்கமாக, செல்பீக்கு எதிரான இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. உருவங்களை விட வடிவங்களுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அவர் ஓவியங்களில் கையாண்ட கருப்பு சதுரமும், கருப்பு வட்டமும், முகத்தின் தோற்றத்தில் இடம்பெறும் வகையில், செல்பீ படங்களை எடுத்து தரும் வகையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது பொருத்தமானது என்பதி மெலேச்விச் பற்றி அறியும் போது உணரலாம். அப்படியே, செல்பீ மோகத்தையும் ஆழமாக பரிசீலனைக்கு உள்ளாக்கலாம்.
மேலேவிச் வரைந்துள்ள ஓவியங்களில் ஆகச்சிறந்ததாக கருதப்படும் படைப்புகளில் அவரது தன் சித்திரமும் ஒன்று என்பதை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும். வண்ணங்களும், வடிவங்களும் விளையாடும் அந்த சுய ஓவியத்துடனும் நமது செல்பீ பழக்கத்தை ஒப்பிட்டுக்கொள்ளலாம்.
· மெலேவிச் பற்றி அறிவதில் எந்த சிக்கலும் இல்லை. இணையத்தில் அவரைப்பற்றிய தகவல்களை அளிக்கும் இணையதளங்கள் அநேகம் உள்ளன. அவற்றில் முக்கியமானவை சில:
கலை படைப்புகளையும், கலைஞர்களையும் அறிமுகம் செய்யும் தி ஆர்ட் ஸ்டோரி இணையதளம், மெலேவிச், சரிதை, ஓவிய படைப்புகள், அதன் தாக்கம் பற்றி சுருக்கமாக அழகாக விளக்குகிறது: https://www.theartstory.org/artist/malevich-kasimir/
கலைகளுக்கான விக்கிபீடியா என வர்ணிக்ககூடிய விக்கிஆர்ட் இணையதளம், மெலேவிச் படைப்புகளை விரிவாக அறிமுகம் செய்கிறது: https://www.wikiart.org/en/kazimir-malevich
ஓவிய பயிற்சி தளமான டாட்டேகிட்ஸ், மேல்விச் மற்றும் அவரது ஓவிய உலகை சுருக்கமாக நம் கண்முன் நிறுத்துகிறது: https://www.tate.org.uk/kids/explore/who-is/who-kazimir-malevich
கூகுளின் கலை, கலாச்சார திட்டம் மெலேவிச் பற்றிய துடிப்பான இணைய பக்கத்தை கொண்டுள்ளது: https://artsandculture.google.com/entity/kazimir-malevich/m04dvd?hl=en
மெலேவிச்சின் புகழ்பெற்ற கருப்பு சதுரம் பற்றி : https://www.ideelart.com/magazine/malevich-black-square