கூகுளில் தேட ஒரு துணை சேவை
கூகுளில் தேடுவது மிகவும் எளிதானது, ஆனால் கூகுளில் ஆழமாக தேடுவது கொஞ்சம் கடினமானது. அதாவது, மேம்பட்ட தேடலில் ஈடுபடுவது!
கூகுல் முன்வைக்கும் வழக்கமான தேடல் முடிவுகள் போதாது என உணரும் போது, மேலதிக அல்லது மேலும் துல்லியமான தகவல் தேவைப்படும் போது, மேம்பட்ட தேடலை நாட வேண்டும். கூகுளில் இந்த வசதி அட்வான்ஸ்டு சர்ச் எனப்படுகிறது.
கூகுள் என்றில்லை, எல்லா தேடியந்திரங்களிலும் இந்த வகை மேம்பட்ட தேடல் வசதி உண்டு. மேம்பட்ட தேடல் வசதியில் நம்முடைய தேடலை இன்னும் கூராக்கி கொள்ளலாம். அதைவிட முக்கியமாக தேடல் முடிவுகளை நம் தேவைக்கேற்ப தனிப்பட்டதாக்க்கி கொள்ளலாம்.
உதாரணமாக, கூகுள் மேம்பட்ட தேடல் பகுதியை நாடினீர்கள் என்றால், இப்படி விண்ணப்ப படிவம் போல ஒரு பக்கம் தோன்றும்: https://www.google.com/advanced_search
இந்த பக்கத்தில் உள்ள கட்டங்களில், குறிப்பிட்ட வார்த்தைகள் கொண்ட இணைய பக்கங்கள் மட்டும் தேவை, குறிப்பிட்ட சொற்றொடர்கள் கொண்ட இணைய பக்கங்கள் மட்டும் தேவை என்றெல்லாம் குறிப்பிட்டு தேடலாம். மேலும், சில வார்த்தைகளை சேர்க்கலாம், சில வார்த்தைகளை விலக்கலாம். மொழி மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையிலும் தேடல் முடிவுகளை வடிகட்டலாம். இன்னும் பல அம்சங்கள் இருக்கின்றன.
கூடுதல் அம்சங்கள் என்றாலும், இந்த தேடல் சிக்கலாக இருப்பதாக உணரலாம். அதனால் தான், மேம்பட்ட கூகுல் தேடலில் உதவுவதற்காக என்றே, கூகுள்ஸ்கோப் எனும் துணை சேவை அறிமுகம் ஆகியுள்ளது. கூகுளின் குரோம் பிரவுசரில் நீட்டிப்பாக செயல்படக்கூடிய இந்த சேவை மூலம் எளிதாக மேம்பட்ட தேடலில் ஈடுபடலாம்.
இந்த சேவை கூகுள் மேம்பட்ட தேடல் வசதியை காட்சிப்படுத்தி புரிந்து கொள்ள உதவுவதால் சிறந்த வழிகாட்டியாக அமைகிறது.
கூகுள்ஸ்கோப் சேவை:https://chrome.google.com/webstore/detail/googlescope/gnnlgfolofpjdgjhfejmlcabaedmdfcn?ref=producthunt
-
டக்டக்கோ வழங்கும் ஐபேங்!
மேம்பட்ட தேடல் பற்றி பேசும் போது, கூகுளின் பிரதான போட்டியாளாரான டக்டக்கோ (DuckDuckGo) தேடியந்திரம் பற்றி பேசாமல் இருக்க முடியாது. டக்டக்கோ பயனாளிகளின் பிரைவசியை மதிக்கும் தேடியந்திரமாக கருதப்படுகிறது. கூகுள் போல, பயனாளிகளின் தேடல் சுவடுகளை பின் தொடர்வதில்லை, அவர்களின் தனிப்பட்ட விவரங்களை திரட்டுவதில்லை என டக்டக்கோ உறுதி அளிக்கிறது.
கூகுளில் இல்லாத பல தேடல் அம்சங்களையும் டக்டக்கோ வழங்கத்துவங்கியது. இவற்றில் பலவற்றை கூகுளும் பின்னர் வழங்கத்துவங்கியது.
டக்டக்கோ அளிக்கும் கூடுதல் அம்சங்களில் மிகவும் விஷேசமானது ஐபேங் வசதி. இந்த வசதி மூலம், குறிப்பிட்ட இணையதளங்களில் மட்டும் நேரடியாக தேடலாம். உதாரணத்திற்கு நீங்கள் அமேசான் தளத்தில் தேட வேண்டும் எனில், டக்டகோ தளத்தில், ஐ எனும் எழுத்துடன் அமேசான் என டைப் செய்தால் போதும், அமேசான் தளத்தில் தேடத்துவங்கலாம்.
இப்படி ஆயிரக்கணக்கான இணையதளங்களில் நேரடியாக தேடும் வசதியை டக்டக்கோ வழங்குகிறது.
ஐபேங் வசதியை பயன்படுத்தி எதில் எல்லாம் தேடலாம் என்பதற்கே டக்டக்கோ ஒரு தேடல் வசதி அளிக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இவை தனியே வகைப்படுத்தியும் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் இடம் பெற வேண்டிய தளங்களையும் நீங்கள் பரிந்துரைக்கலாம்.
ஐபேங்கில் தேட:https://duckduckgo.com/bang
-
டக்டக்கோ தேடியந்திரம் பற்றி மேலும் அறிய விரும்பினால்: http://cybersimman.com/?s=%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B