இது தொழில்நுட்ப தொலைக்காட்சி
இணையத்தில் புதிதாக ஒரு தொலைக்காட்சி உதயமாகி இருக்கிறது. – ’கிளவுட்பிளேர்.டிவி.’ தொழில்நுட்ப நிகழ்ச்சிகளுக்கான இந்த தொலைக்காட்சியின் நோக்கமும், இது துவக்கப்பட்டுள்ள விதமும் உற்சாகம் அளிக்க கூடியது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நிலவும் சூழலில், தொழில்நுட்ப கருத்தரங்குகள், சந்திப்புகள், உரையாடல்களுக்கான மாற்று தளமாக விளங்க வேண்டும் என்பது தான் இந்த கிளவுட்பிளேர்.டிவியின் நோக்கம்.
கிளவுட்பிளேர், சராசரி இணையவாசிகளுக்கு அறிமுகம் இல்லாத பெயராக இருந்தாலும், இது இணையத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய நிறுவனங்களில் ஒன்று.
இணையதள உரிமையாளர்களும், வர்த்தக நிறுவனங்களும் தான் கிளவுட்பிளேர் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் என்றாலும், இதன் சேவை இணையத்தின் கடைக்கோடி நுகர்வோர் மீதும் தாக்கம் செலுத்துகிறது என்பது தான் விஷயம்.
நிறுவன செயல்பாடுகள் மிகவும் தொழில்நுட்பமயமானது என்பதால், இதன் பணிகளை விளக்குவது கடினம். ஆனால், இதன் முக்கியத்துவத்தை உணர்த்த, இணையத்தை தாங்கி பிடிக்கும் சேவையை வழங்கும் நிறுவனம் என்றும் இதை கூறலாம்.
இணையத்துக்குள் ஒரு இணையத்தை (வலைப்பின்னல்) வழங்கும் நிறுவனம் என்றும் புரிதலுக்காக கூறலாம். கிளவுட்பிளேர் என்ன செய்கிறது என்றால், உலகின் முக்கிய இடங்களில் ஏகப்பட்ட சர்வர்களை அமைத்து, அதன் வாடிக்கையாளர் இணையதளங்களின் போக்குவரத்து சரியாக கையாளப்பட வழி செய்கிறது. இதன் மூலம் இணையதள பக்கங்கள் உடனடியாக வந்து நிற்பதை உறுதி செய்கிறது. எனவே, நீங்கள் பயன்படுத்தும் இணையதளங்கள் வேமாக செயல்படுகிறது என்றால், அதற்கு கிளவுட்பிளேர் உள்கட்டமை காரணமாக இருக்கலாம்.
இது தவிர, இணையதளங்களை சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் சேவையையும் வழங்கி வருகிறது.
இந்த கிளவுட்பிளேர் புராணம், அதன் தொலைக்காட்சி சேவையின் முக்கியத்துவத்தை புரிய வைப்பதற்காக தான்.
கிளவுட்பிளேர் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது. இந்த வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்வதற்காக தான், கிளவுட்பிளேர்.டிவியை துவக்கியிருக்கிறது. அடிப்படையில் இது விளம்பர நோக்கிலானது என்றாலும், இதில் பொது நோக்கமும் கலந்திருக்கிறது. கொரோனா பாதிப்புக்கு மத்தியில், வாடிக்கையாளர்கள் சந்தித்துக்கொள்வதற்கான இணைய மேடையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தொலைக்காட்சி துவக்கப்பட்டுள்ளது.
கொரோணாவுக்கு முந்தைய உலகில், அடிக்கடி தொழில்நுட்ப மாநாடுகளும், நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டிருந்தன. கடை விரிக்கவும், கருத்தறியவும், நட்பு வளர்க்கவும் இந்த நிகழ்ச்சிகள் சிறந்த வழியாக இருந்தன. ஆனால், கொரோனா ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது தொழில்நுட்ப நிகழ்ச்சிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
நிலைமை சகஜமாகும் போது தான் மீண்டும் நிகழ்ச்சிகளையும், மாநாடுகளையும் நடத்த முடியும். இந்நிலையில், தொழில்நுட்ப நிகழ்ச்சிகள் சாத்தியமாக்கும் விஷயங்களை எல்லாம் இணையம் மூலம் வழங்கும் வழியாக கிளவுட்பிளேர்.டிவி அமைகிறது.
தொழில்நுட்ப வல்லுனர்களுடனான உரையாடல், இணைய செய்திகள், வர்த்தக நிறுவன அதிபர்களுடனான சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை இந்த டிவி வழங்கி வருகிறது. நேரலை நிகழ்வுகளும் இருக்கின்றன. நிகழ்ச்சிகள் சிலவற்றை கிளவுட்பிளேர் முக்கிய நிர்வாகிகளே வழங்குகின்றனர்.
நிகழ்ச்சிகள் சுவாரஸ்யமாக இருப்பதோடு, தகவல் நோக்கிலும் பயனுள்ளதாக அமையும் உணர்வை அளிக்கின்றன. பரஸ்பரம் விலகி இருக்கும் சூழலில், இந்த டிவி நிகழ்ச்சிகள், தொழில்நுட்ப துறையில் இருப்பவர்களுக்கு நெருக்கமான உணர்வைத்தரும். அதோடு, வர்த்தக வாய்ப்புகளுக்கான திறவுகோளையும் கொண்டிருக்கும்.
இந்த டிவியின் பின்னே இருக்கும் வர்த்தக நோக்கத்தை மீறி, இதன் உள்ளடக்கத்தில் விளம்பர வாடை குறைவாகவே இருக்கிறது. அதாவது உள்ளடக்கம் ஈர்ப்புடையதாகவே இருக்கிறது. இந்த இடத்தில் கிளவுட்பிளேர் நிறுவனத்தின் வலைப்பதிவு சேவையையும் சுட்டிக்காட்ட வேண்டும். வர்த்தக வலைப்பதிவின் சாயலே இல்லாமல், இணைய கட்டமைப்பின் தொழில்நுட்பம் சார்ந்த சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவத்தை இதன் வலைப்பதிவு வழங்குகிறது. இதன் தொழில்நுட்ப தொலைக்காட்சியும் இதே போல அமைந்துள்ளது.
ஆக, வர்த்தக நோக்கிலானது என்றாலும், உள்ளடக்கத்திற்கு உண்மையாக இருக்கும் சேவைகள் எத்தனை சுவாரஸ்யமாக இருக்கும் என்பதற்கான உதாரணமாக இது அமைகிறது. அதைவிட முக்கியமாக, கொரோனா காலத்தில் பல வர்த்தக நிறுவனங்கள் தங்கள் பட்ஜெட்டை இழுத்து பிடித்துக்கொண்டும், தொழிலாளர்களை வஞ்சித்துக்கொண்டிருக்கும் நிலையில், கிளவுட்பிளேர் முழு வீச்சிலான ஒரு இணைய தொலைக்காட்சியை துவக்கியிருப்பது வரவேற்கதக்கது தானே. கொரோனா சூழலால் முடங்கிவிடாமல், வர்த்தக வாய்ப்பை வளர்த்தெடுப்பதற்கான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுவது தானே உலகிற்கு இப்போதைய தேவை. எனவே தான் கிளவுட்பிளேர்.டிவி உற்சாகம் அளிக்கிறது என்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்!