ஆஸ்க்.காம் என ஒரு தேடியந்திரம் இருந்தது- இன்னமும் இருக்கிறது. ஆஸ்க் ஜீவ்ஸ் எனும் பெயரில் முதலில் அறிமுகமான இந்த தேடியந்திரம், கேள்வி பதில் வடிவில் தேடல் வசதியை அளிப்பதை தனக்கான தனித்தன்மையாக கொண்டிருந்தது. அதன் பிறகு, ஆஸ்க் பைனாகூலர் எனும் பெயரிலும் ஒரு வசதியை அறிமுகம் செய்தது. தேடலுக்கான முன்னோட்ட வசதியாக இது அமைந்தது. தேடல் முடிவுகளை கிளிக் செய்யாமலே பார்ப்பதற்கான ஷார்ட் கட்டாகவும் அமைந்தது.
அதாவது, ஆஸ்க்.காம் தேடல் பட்டியலில் உள்ள முடிவுகளை பார்க்கும் போது, ஏதாவது ஒரு முடிவின் அடுகே மவுஸ் கர்சரை கொண்டு சென்றால், அதில் சின்னதாக பைனாகூலர் ஐகான் ஒன்று இருக்கும். அதன் மீது கர்சரை வைத்ததுமே, தொடர்புடைய இணைய பக்கம் சின்ன பெட்டியாக அருகே தோன்றும். இந்த முன்னோட்டத்தை பார்த்தே அந்த இணைய பக்கம் எப்படி இருக்கும் என்பதை அனுமானிக்கலாம்.
அந்த காலகட்டத்தில் இந்த முன்னோட்ட வசதி அத்தனை கொஞ்சம் புதுமையாகவே இருந்தது. இப்போதும் கூட, விக்கிபீடியா தளத்தில், கட்டுரைகளில் உள்ள நீல நிற இணைப்புகள் மீது கிளிக் செய்தாலே, அந்த பக்கத்தை விட்டு வெளியே செல்லாமலேயே, அதன் முன்னோட்ட வடிவத்தை பார்க்கலாம்.
இந்த முன்னோட்ட வசதியை கூகுள் உள்ளிட்ட தேடியந்திரங்களிலும் சாத்தியமாக்குகிறது உரல்.ரெண்டர் (https://url-render.com/ ). குரோம் மற்றும் பயர்பாக்ஸ் உலாவிகளில், இந்த சேவையை நீட்டிப்பாக தரவிறக்கம் செய்து நிறுவிக்கொண்டால், அதன் பிறகு கூகுள் அல்லது பிங், டக்டக்கோ என எந்த தேடியந்திரத்தில் தேடினாலும், அதில் பட்டியலிடப்படும் முடிவுகளின் முன்னோட்ட காட்சியை இந்த நீட்டிப்பு மூலம் பார்க்கலாம். ஒவ்வொரு பக்கமாக கிளிக் செய்யும் தேவை இல்லாமல், ஒரு பறவை பாரவையாக தேடல் முடிவுகளை அலசிப்பார்க்க இந்த வசதி உதவும்.
-
இதே போலவே, குரோம் நீட்டிப்பு சேவையான ரிசல்ட்ஸ் பிரிவீயுவர் (https://resultspreviewer.com/ ) கூகுள் தேடல் முடிவுகளை வெள்ளோட்டம் பார்க்க உதவுகிறது.
எல்லாம் சரி, இந்த முன்னோட்ட வசதியை கூகுளே வழங்காதது ஏன்? இந்த கேள்வி ஒரு பக்கம் இருக்கட்டும், ஆஸ்க்.காம் தேடியந்திரத்தையும் பயன்படுத்திப்பாருங்கள்!
-
என்ன பாட்டு கேட்கலாம்?
நீங்கள் மேற்கத்திய இசை ரசிகர் என்றால், ’ஆல்பம் டெய்லி’ (https://albumdaily.com/ ) தளத்தை குறித்து வைத்துக்கொள்ளலாம். இந்த தளம் என்ன செய்கிறது என்றால், நீங்கள் கேட்டு ரசிக்க கூடிய புதிய பாடல் ஆல்பங்களை தேடி கண்டறிந்து பரிந்துரைக்கிறது. இப்படி கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட, ஐந்து ஆல்பங்களை வாரதோறும் பரிந்துரைக்கிறது. இந்த பரிந்துரையும், செய்தி மடல் வடிவில் ரசிகர்கள் இமெயில் பெட்டிக்கே அனுப்பி வைக்கப்படுகிறது.
ஒவ்வொரு மடலில், ஐந்து புதிய ஆல்பங்களை அறிமுகம் செய்து கொள்வதோடு, ஸ்பாட்டிபை அல்லது யூடியூப்பில் அந்த பாடலை கேட்பதற்கான இணைப்பும் வழங்கப்படுகிறது. இந்த சேவையில் இணைவதற்கு முன், ஏற்கனவே செய்யப்பட்டுள்ள பரிந்துரைகளை வெள்ளோட்டம் பார்த்துக்கொள்ளலாம்.
-
ஆறு அடி இடைவெளியை அளப்பது எப்படி?
கொரோனா பரவலை தடுக்க வலியுறுத்தப்படும் சமூக தொலைவை கடைப்பிடிக்க, அடுத்தவரிடம் இருந்து ஆறு அடியாவது விலகியிருக்க வேண்டும் என்கின்றனர். சரி, ஆறு அடி இடைவெளியை அளப்பது எப்படி? இணைய வெள்ளை பலகை சேவையை வழங்கும், ஏர்.இன்க் எனும் இணையதளம், இதற்கான துணை சேவையை உருவாக்கியுள்ளது. ஆறு அடி கால்குலேட்டர் (https://air.inc/blog/6feetcalculator) எனும் பெயரிலான இந்த சேவை மூலம், நாம் நன்றாக அறிந்த வீட்டு உபயோக பொருட்களை கொண்டு அளந்தால், ஆறு அடி என்பது எத்தனை முறையாக வரும் என கணக்கிட்டு சொல்கிறது. இதன்படி பார்த்தால், ஆறு அடி என்பது, 11 சானிடைசர் பாட்டில்கள் கொண்டது, 4.3 ஹாங்கர்கள் கொண்டது, 2.8 டென்னிஸ் ராக்கெட் கொண்டது. 9 வாழைப்பழங்கள் கொண்டது.
நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய சேவை என்றெல்லாம் சொல்ல முடியாது. கொஞ்சம் சுவாரஸ்யமமும், நகைச்சுவையும் கலந்து சேவை என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நகைச்சுவை நமக்கும் தேவை தானே!
-