பழைய ஹாலிவுட் படங்களை பார்த்து ரசிக்க ஒரு தளம்
புதிய படங்களையும், வெப்சிரீஸ்களையும் ஆன்லைனில் பார்த்து ரசிப்பது இயல்பாகி இருக்கும் ஸ்டிரீமிங் யுகம் இது. எனவே, ஆன்லைனில் படம் பார்க்க உதவும் இணையதளங்களை அறிமுகம் செய்வதில் எந்த சுவாரஸ்யமும் இல்லை என நீங்கள் நினைக்கலாம். இந்த எண்ணத்தை மீறி, வாட்ச்.ஆன்லைன் ( https://whatch.online/) தளம் உங்களை ஈர்க்கும்.
அதற்கு காரணம், இந்த தளம் ஆன்லைனில் படம் பார்க்கும் அனுபவத்தை அத்தனை எளிதாக்குகிறது. இந்த தளத்தின் உள்ளடக்கமும் சரி, அது வழங்கும் அனுபவமும் சரி அத்தனை இலுகுவாக இருக்கிறது.
இதன் இடைமுக சிறப்பை பார்ப்பதற்கு முன், இந்த தளத்தின் தன்மை பற்றி பார்த்துவிடலாம். இணையத்தில் படம் பார்க்க விரும்புகிறவர்கள், பழைய ஹாலிவுட் படங்களை எந்தவித தேடலும், சிக்கலும் இல்லாமல் பார்க்க வழி செய்கிறது இந்த தளம்.
இப்போது இதன் இடைமுகத்திற்கு வரலாம். தளத்தின் முகப்பு பக்கத்தில், ஹாலிவுட் திரைப்படங்களின் முகப்புத்தோற்றம் சுவரொட்டிகளாக வரிசையாக இடம்பெற்றுள்ளன. எந்த படம் தேவையோ அந்த படத்தை கிளிக் செய்தால் அதற்கான பக்கம் தோன்றுகிறது. அதைவிட, அந்த படத்திற்கான இணைய திரை தோன்றுகிறது என சொல்லலாம். ஏனெனில், இந்த பக்கத்தில் யூடியூப் போன்ற இடைமுகத்தில் உடனடியாக படம் பார்க்கத்துவங்கிவிடலாம். முழு படத்தையும் இப்படியே பார்க்கலாம்.
இதே பக்கத்தில், குறிப்பிட்ட அந்த திரைப்படம் தொடர்பான கதை உள்ளிட்ட தகவல்களை படித்து தெரிந்து கொள்ளலாம். ( ஐஎம்.டிபி தகவல்கள்).
முகப்பு பக்கத்தில் ஹாலிவுட் திரைப்பட சுவரொட்டிகளை நீளமாக பார்ப்பதன் மூலம் விரும்பிய படங்களை தேர்வு செய்யலாம் அல்லது, முகப்பு பக்கத்தில் மேலே, படங்கள் அவற்றின் வகைகளுக்கு ஏற்ப தனியே தொகுத்தளிக்கப்படுகின்றன. அவற்றில் விரும்பிய தலைப்பை கிளிக் செய்யலாம்.
திரைக்களஞ்சியமான ஐஎம்டிபி தளத்தின் தகவகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட தளம் என்பதால், ஐஎம்டிபி தள தகவல் வரிசை அடிப்படையிலும் படங்களை தேர்வு செய்யும் வசதி இருக்கிறது.
மிக எளிமையான தளம், ஆனால் பழைய திரைப்பட ரசிகர்களை சொக்கிப்போக வைக்கும்.
இந்த தளம் பற்றி மேலும் சில முக்கியமான தகவல்கள். இந்த தளத்தில் பார்க்க கூடிய படங்கள் அனைத்துமே பொதுவெளியில் கிடைக்கும் படங்கள் மற்றும் காப்புரிமை விடுபட்டவை. இணையத்தில் இப்படி எங்கு வேண்டுமானாலும் பார்க்க கூடிய படங்களை, அழகாக ஒரே இடத்தில் தொகுத்தளித்து அவற்றை எளியாக பார்க்க வழி செய்வது தான் இந்த தளத்தின் சிறப்பு.
மேலும் இந்த தளம் எந்த படத்தையும் பதிவேற்றுவதில்லை. அவற்றின் மூல இடங்களில் இருந்து இந்த தளம் வழியே பார்க்க வழி செய்கிறது.
இந்த தளத்தை அமைத்தவர் பற்றிய தகவல்களை தேடினால், இந்த தளம் பின்னே இருக்கும் சில முக்கியமான தகவல்களை அறிய முடிகிறது. அவை பற்றி தனியே பார்க்கலாம்.
*
இதே போலவே கிளாசிக்மூவிலிஸ்ட் ( http://classicmovieslist.org/) தளமும் ஹாலிவுட் காவிய படங்களை பார்த்து ரசிக்க வழி செய்கிறது. இதன் இடைமுக அமைப்பு கொஞ்சம் பழைய வடிவமைப்பை கொண்டிருந்தாலும் எளிதாகவே இருக்கிறது. திரைப்படங்கள் தனித்தனி தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டிருப்பதோடு, அதன் கீழ், பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்களையும் காணலாம். புதிதாக சேர்க்கப்படும் படங்கள் மற்றும் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள் பட்டியலில் வழிகாட்டுகிறது. தேடல் வசதியும் இருக்கிறது.