ஒரு நல்ல படம் பார்க்கலாமா...
நெட்பிளிக்சில் என்ன படம் பார்க்கலாம் எனும் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது ’ஏ குட் மூவி டு வாட்ச்’ (https://agoodmovietowatch.com/ ) இணையதளம். நெட்பிளிக்ஸ் என்பது ஒரு அடையாளம் தான், மற்றபடி, ஸ்டிரீமிங் தளங்களில் என்ன ( நல்ல) படம் பார்க்கலாம் என அடையாளம் காட்டுகிறது இந்த தளம்.
நல்ல படங்களாக தேடி கண்டுபிடித்து பரிந்துரைப்பது தான் இந்த தளத்தின் தனிச்சிறப்பாக இருக்கிறது. இந்த தளம் இதை நிறைவேற்றும் விதமும் விஷேசமானதாக இருக்கிறது.
ஆம், அல்கோரிதம்கள் காலத்தில், கைகுத்தல் அரிசி போல, கவனமாக மனிதர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக நல்ல திரைப்படங்களை இந்த தளம் பரிந்துரைக்கிறது. இந்த மனித தேர்வு நெட்பிளிக்ஸ் பயன்படுத்தும் அக்லோரிதம் சார்ந்த தேர்வுகளுக்கு நேர் எதிரானது.
ஒருவர் பார்க்கும் திரைப்படங்கள் அடிப்படையில் அவரது திரை ரசனை தொடர்பாக ஆயிரக்கணக்கான புள்ளிகள் சார்ந்த தரவுகளை திரட்டி அதனடிப்படையில் நெட்பிளிக்ஸ் படங்களை பரிந்துரைக்கிறது. ஸ்டிரீமிங் துறையில் நெட்பிளிக்ஸ் வெற்றிக்கு காரணமான அம்சங்களில் இது முக்கியமானது.
ஆனால், என்ன இருந்தாலும் நெட்பிளிக்சின் அல்கோரிதம் கார்பரேட் தன்மை கொண்டது, மக்கள் ரசனையை விட, நெட்பிளிக்சின் தயாரிப்புகளை தள்ளுவதே அதன் நோக்கம் என விமர்சிக்கும், ஏ குட் மூவி டு வாட்ச் தளம், அதற்கு மாறாக 100 சதவீதம் மனிதர்கள் தேர்வு செய்யும் படங்களை முன்வைப்பதாக கூறுகிறது. அது மட்டும் அல்லாமல், நெட்பிளிக்ஸ் தேர்வுகள் எல்லாமே கடந்த காலத்தில் பார்த்த படங்களின் அடிப்படையில் இருப்பதால், புதிய படங்களை அறிமுகம் செய்து கொள்ள அது எப்படி கைகொடுக்கும் என்றும் கேட்கிறது.
இதற்கு தீர்வாக, இதுவரை பார்த்திராத, ஆனால் பார்க்க வேண்டிய படங்களை தேர்வு செய்து அளிக்கிறது இந்த தளம். அதிகம் ரேட்டிங் பெற்ற ஆனால், அதிகம் அறியப்படாத படங்களையே பட்டியலிடுவதாகவும் தெரிவிக்கிறது.
பரவலாக அறியப்பட்ட நெட்பிளிக்ஸ் படங்களுக்கு மாறாக திரை முத்துகளை இந்த தளம் பட்டியலிடுகிறது.
முகப்பு பக்கத்தில் பார்த்தால், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் இதர ஸ்டிரீமிங் தளங்களில் சமீபத்திய படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதைத்தாண்டி, படங்கள் மற்றும் ஷோக்கள் பகுதிக்கு சென்றால், பிரத்யேக பரிந்துரைகளை பார்க்கலாம். ரசிகர்கள் தங்கள் மனநிலைக்கு ஏற்ற படங்களின் பட்டியலையும் பார்க்கலாம்.
குறிப்பிட்ட படங்களை கிளிக் செய்தவுடன், திரைப்படங்களை மதிப்பிடும் ஐ.எம்.டி.பி., மற்றும் ராட்டன் டமேடோஸ் போன்ற தளங்களில் அந்த படங்களுக்கான மதிப்பீடு சுட்டிக்காட்டப்பட்டு, படம் தொடர்பான சுருக்கமான அறிமுகம் அளிக்கப்படுகிறது. அந்த படத்தில் ஸ்டிரீமிங்கில் எங்கு பார்க்கலாம் எனும் தகவல் மற்றும் இணைப்பும் இடம்பெற்றுள்ளன.
தவிர, படம் தொடர்பான ரசிகர்களின் கருத்துகளும் இடம்பெறுகின்றன. உறுப்பினரானால் நிங்களும் படங்கள் பற்றிய விமர்சனங்களை, கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம். மேலும், படங்களை பார்க்க விரும்புகிறேன், பார்த்து விட்டேன் என்றோ குறித்து வைத்துக்கொள்ளலாம். ஆர்வம் இல்லை என்றும் குறிப்பிடலாம்.
வர்த்தக நெடி இல்லாமல், ரசிகர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆதரவுடன் செயல்படுவதே இந்த தளத்தின் பலமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மொரோக்கோவை ச்சேர்ந்த பிலால் எனும் ரசிகர் இந்த தளத்தை முன்னின்று நடத்தி வருகிறார்.