பயனர்களே பதில் சொல்லுங்கள் - அழைக்கும் இணையதளம்!
இணைய உலகை இப்போது பயனாளிகளின் ராஜ்ஜியம் என்று தான் வர்ணிக்கின்றனர். இணைய மொழியில் இதை தான் வலை 2.0 -ன் முக்கிய அம்சம் என்கின்றனர். அதாவது, இணையத்தில் பயனாளிகள் வெறும் பயனாளியாக மட்டும் இல்லாமல் பங்கேற்பாளராகவும் இருப்பதற்கான வாய்ப்பையே இவ்வாறு குறிப்பிடுகின்றனர்.
வலை 2.0 அம்சம் பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம், இப்போதைக்கு பயனாளிகள் பேட்டி பற்றி பார்க்கலாம். அதென்ன பயனாளிகள் பேட்டி என கேட்கத் தோன்றலாம். இணைய சேவைகளை பயன்படுத்திம் பயனாளிகள் கருத்தறிவதற்காக நடத்தப்படும் நேர்காணலே இவ்வாறு பயனர் பேட்டி என குறிப்பிடப்படுகிறது.
பொதுவாக பேட்டி என்றாலே, பிரபலங்கள், நட்சத்திரங்கள் அல்லது வல்லுனர்களிடம் எடுக்கப்படும் பேட்டிகளே நினைவுக்கு வரலாம். பழைய பாரம்பரிய ஊடகங்களில், சாமானியர்களிம் பேட்டி எடுக்கப்படுவது வெகு அரிது. ஆனால், இணையம் பயனாளிகள் ராஜ்ஜியமாக அறியப்படுவதால், இங்கு பயனர்கள் கருத்தறிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதற்காக நடத்தப்படும் நேர்காணலே பயனர் பேட்டி.
பெரும்பாலும், இணைய வடிவமைப்பாளர்காள், டெவலப்பர்கள் எனப்படும் உருவாக்கினர்கள், செயலி உரிமையாளர்கள் போன்றவர்கள் பயனர் பேட்டியை நாடுகின்றனர். மிகப்பெரிய கனவுடன் புதிய இணைய சேவைகளை உருவாக்கினாலும், அவற்றின் வெற்றி என்பது பயனாளிகள் கைகளிலேயே இருப்பதால், குறிப்பிட்ட சேவையை அதன் பயனர்கள் எப்படி பார்க்கின்றனர் என அறிந்து கொள்வது அவசியமாகிறது.
இணைய சேவையை உருவாக்குபவர்கள், இந்த புரிதலை பெற தங்கள் சேவையின் ஆரம்ப பயனாளிகளில் சிலரை தேர்வு செய்து அவர்களிடம் பேசிப்பார்க்கும் வழக்கம் கொண்டுள்ளனர். பயனாளிகள் தெரிவிக்கும் கருத்துகள், சேவையின் பயன்பாட்டு அம்சத்தை புரிந்து கொள்ள வழி செய்வதோடு, அவர்களின் எதிர்பார்ப்பையும் சுட்டிக்காட்டுவதாக அமையும்.
இத்தகைய பயனர் பேட்டிகள் மூலம், புதிய சேவைகளின் குறை நிறைகளை தெரிந்து கொண்டு அவற்றை மேம்படுத்தலாம். இந்த வகை பேட்டிகள் பயனர் ஆய்வின் ஒரு அங்கமாக கருதப்படுகிறது. நிறுவனங்கள் நடத்தும் சந்தை ஆய்வு போன்றது தான் இது.
ஒரு சேவையை உருவாக்கி விட்டு, அதன் வரவேற்பு பற்றி தெரியாமல் முழித்துக்கொண்டிருப்பதோடு, ஆரம்ப நிலையிலேயே பயனர்களிடமே நேரடியாக சேவை பற்றி கேட்டறிவது, சேவைக்கான ஆமோதிப்பாக அல்லது அதில் தேவைப்படும் மாற்றத்தை உணர்த்துவதாக அமையலாம்.
இந்த விரிவான அறிமுகம் எதற்காக என்றால், பயனர் பேட்டிகளை எளிதாக நடத்த உருவாக்கப்பட்டிருக்கும் புதிய சேவையான டிரைரிப்பன் (https://www.tryribbon.com/ ) தளத்தை அறிமுகம் செய்ய தான்.
டிரைரிப்பன் தளம் மூலம் இணைய வடிவமைப்பாளர்கள் மிக எளிதாக பயனர்களிடம் பேட்டி காணலாம். இந்த தளத்தில் பதிவு செய்து கொண்டு, பயனர்பேட்டிக்கான சுட்டியை தளத்தில் இடம் பெறச்செய்தால் போதுமானது. அதன் பிறகு, தளத்திற்கு வருகை தரும் பயனர்களிடம், நேர்க் காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும். அதை பயனர்கள் ஏற்றுக்கொண்டால், உடனே வீடியோ மூலம் இணைய தள உரிமையாளருடன் இணைக்கப்படுவார்கள். உரிமையாளர் தனது சேவை பற்றிய பயனர் அனுபவத்தை அவரிடம் இருந்தே நேரில் கேட்டுக்கொள்ளலாம்.
இதற்காக என்று தனியே பயனாளிகளை தேடி, அவர்களுடன் தொடர்பு கொண்டு, பேட்டிக்கு சம்மதம் கேட்டு பின்னர் கருத்தறிய வேண்டிய அவசியம் இல்லை. டைனிரிப்பன் மூலம், தளத்திற்கு வருகை தரும் பயனாளிகளிடமே தொடர்பு கொண்டு பேட்டிக்கு அழைப்பு விடுக்கலாம்.
இணைய வடிவமைப்பாளர்களுக்கு மிகவும் பயனுள்ள சேவை. ஆனால், பயனர்களின் குரல் கேட்க உதவும் சேவை என்பதால் பொதுவில் எல்லோரும் அறிமுகம் செய்து கொள்வதும் நல்லது.
ஏனெனில் நாம் பயனர் ராஜ்ஜியத்தில் தானே வாழ்கிறோம்.