உலக சதுப்பு நில வரைபடம்
உலகில் எங்கெல்லாம் சதுப்பு நிலங்கள் இருக்கின்றன என உங்களுக்குத்தெரியுமா? இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு இணைய வரைபடம் இருக்கிறது என்பது மட்டும் அல்ல, இந்த கேள்வியை நீங்கள் ஏன் கேட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்கான பதிலாகவும் இந்த வரைபடம் அமைகிறது.
உலக சதுப்பு நிலங்கள் வரைபடம் (Global Wetlands Map ) எனும் இந்த வரைபடம் பற்றி பார்ப்பதற்கு முன், சதுப்பு நிலங்கள் ஏன் முக்கியம் என்பதை பார்த்து விடலாம்.
புவியை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கால நில மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் ஆற்றல் கொண்டவையாக சதுப்பு நிலங்கள் அமைகின்றன. கரியை ( கார்பன்) சேமித்து வைக்கும் தன்மை சதுப்பு நிலங்களுக்கு இருப்பதே இதற்கான காரணமாக அமைகிறது.
கார்பன் வெளியேற்றைத்தை குறைப்பது கால நிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் முக்கிய அம்சமாக அமைவதால், கார்பனை தேக்கி வைக்க கூடிய சதுப்பு நிலங்கள் முக்கியமாக அமைகின்றன.
சதுப்பு நில பகுதிகளில் உள்ள ஈர மண் ஹிஸ்டோசால்ஸ் (histosols) எனப்படுகின்றன. சதுப்பு நிலங்கள் பிடித்து வைத்திருக்கும் கார்பன் அளவு கார்பன் ஸ்டாக்ஸ் (carbon stocks ) என குறிப்பிடப்படுகிறது.
ஆனால் பிரச்சனை என்னவென்றால், சதுப்பு நிலங்கள் உலகில் எங்கெலாம் அமைந்துள்ளன, அவற்றின் தற்போதைய நிலை என்ன என்பது தொடர்பாக போதுமான தகவல்கள் இல்லை. எனவே தான், உலகம் முழுவதும் சதுப்பு நிலங்கள் எங்கெல்லாம் அமைந்திருக்கின்றன என்பதையும், அவை தொடர்பான தரவுகளை அளிக்கும் வகையில் சதுப்பு நில வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.
செயற்கைகோள் புகைப்படம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த வரைபடத்தில் சதுப்பு நிலங்களை அடையாளம் காணலாம். சதுப்பு நிலங்கள் மட்டும் அல்லாது தொடர்புடைய நீர் நிலை பகுதிகள் பலவற்றை அடையாளம் காணலாம்.
சதுப்பு நிலங்கள் எப்படி மாறி வருகின்றன, அவற்றின் தற்போதைய நிலை தொடர்பான தகவல்களையும் அறியலாம். தேவைப்பட்டால் இந்த வரைபட தரவுகளை பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.
சர்வதேச வன ஆய்வு மையம் (CIFOR) மற்றும் அமெரிக்க வனத்துறை இணைந்து உருவாக்கிய கால நிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான சதுப்பு நில பாதுகாப்பு முயற்சியான ஸ்வேம்ப் (SWAMP ) திட்டத்தின் கீழ் இந்த வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.