இணையத்தை விடுவிக்கும் வலைதளம்
இணையத்தில் கட்டணச்சுவர்கள் தகர்த்தெறியப்பட வேண்டும் என விரும்புகிறவர்களுக்கான இணைய சேவை பற்றி இப்போது பார்க்க போகிறோம். அதற்கு முன், இலவச இணையம் பற்றி சில கருத்துகள்.
இணையத்தில் இலவசம் என்பது கட்டணம் இல்லா வசதியை குறித்தாலும், அதைவிட முக்கியமாக, சுதந்திரமான அணுகலையே இது உணர்த்துகிறது. அந்த வகையில், ஆங்கிலத்தில் ஃபிரி சாப்ட்வேர் என சொல்லப்படுவதை தமிழில் சுதந்திர மென்பொருள் என்றே குறிப்பிட வேண்டும். இலவச மென்பொருள் அல்ல.
மென்பொருளின் பின்னே உள்ள நிரல் குறிப்புகளை தடையின்றி அணுகி அவற்றை தேவைக்கேற்ப மாற்றி மேம்படுத்தி பகிர்ந்து கொள்ளும் வசதியை இது குறிக்கிறது. இதுவே ஓபன் சோர்ஸ் எனப்படும் திறவுமூல மென்பொருளின் அடிப்படையாகவும் அமைகிறது.
இதே அடிப்படையில், இணையத்தில் உள்ள தகவல்களை எல்லோரும் தடையில்லாமல் அணுகும் வசதியே முக்கியமானது என்றும் கொள்ளலாம். அந்த வகையில், கட்டண சேவைகளை சுதந்திர இணையத்திற்கு விரோதமானதாக கருதலாம்.
ஆனால், இலவச சேவை என்பது எப்போதுமே சுதந்திரம் சார்ந்ததாக மட்டுமே இருப்பதில்லை. பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இலவச சேவையை தூண்டிலாக வைத்துக்கொண்டு விரிக்கும் வர்த்தக வலை உத்திகள் சுதந்திர இணையத்திற்கான வினையாக அமைவதை உணரலாம்.
இந்த பின்னணியில், கட்டண சுவர் கருத்தாக்கத்தை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ள ஃபிரி இண்டெர்நெட் பிளகின் (https://freeinternetplugin.com/) சேவையை அறிமுகம் செய்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.
ஒரு இணையத்தளத்தை ஆர்வத்துடன் அணுகும் போது, அதன் உள்ளட்டகத்தை கட்டணம் செலுத்தினால் மட்டுமே பெற முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்படுவதே கட்டண சுவர் ஆகிறது. இணைய உலாவலில் தகவல்களை தேடிச்செல்லும் போது, இத்தகைய கட்டண சுவர்களை எதிர்கொண்டால் வெறுப்பாக இருக்கும்.
ஆனால், கட்டண சுவர் அமைப்பதற்கான காரணங்களும் இருக்கலாம். எனில், கட்டண சேவை தளங்களில் எமக்குத்தேவையில்லை என சொல்லும் உரிமை நமக்கும் இருக்கிறது அல்லவா? அதை தான் இந்த சேவை சாத்தியமாக்குகிறது. அதாவது, கட்டண சேவை தளங்களை இணையத்தில் இருந்து நீக்கிவிடுகிறது.
எந்த ஒரு தளத்தையும் நீக்குவது சாத்தியம் அல்ல என்பதோடு அது தணிக்கையாக அமைந்து கண்டனத்திற்குள்ளாகும் என்பதால் இந்த சேவை அதை எல்லாம் செய்யவில்லை. மாறாக, கட்டண சேவை தளங்களை வடிக்கட்டி தருகிறது.
ஆம், குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பு சேவையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பிளகின்னை பொருத்திக்கொண்டால், கூகுள் மூலம் இணையத்தில் தேடும் போது, பட்டியலிடப்படும் தேடல் முடிவுகளில் இருந்து கட்டண சேவை தளங்களை எல்லாம் நீக்கிவிடுகிறது.
இதன் மூலம் எந்தவித கட்டுப்பாடும் இல்லாத தளங்களை மட்டுமே தேடல் முடிவுகளில் எதிர்கொள்ளலாம்.
சுதந்திரமான இணையமே சிறந்த இணையம் என குறிப்பிடும் இந்த பிளகின் சேவை, ஒரு செய்தியை வாசிக்க நீங்கள் கட்டணம் செலுத்த விரும்பவில்லை எனில், அதன் தலைப்பை மட்டும் தெரிந்து கொள்வதில் பயனில்லை என்கிறது.
பெரும்பாலான கட்டண சேவைகள் இப்படி தலைப்பை மட்டும் வாசிக்க வைத்து மேற்கொண்டு தகவல்களை அறிய கட்டணம் செலுத்த வேண்டும் எனும் வர்த்தக உத்தியை கொண்டிருப்பது எரிச்சல் அளிப்பதாக கூறும் இந்த சேவை, இதைவிட கட்டண தளங்கள் தேடல் முடிவுகளில் இடம்பெறாமல் இருப்பதே சிறந்தது என்கிறது.
இந்த சேவையை இணைய கிளர்ச்சி சேவை என்றும் வர்ணிக்கலாம்.
இப்படி கட்டண தளங்கள் வடிகட்டப்படுவதை நீங்களும் விரும்பினால் இந்த சேவையை பயன்படுத்திப்பார்க்கவும்.
( பி.கு: கட்டண சுவர் கட்டுப்பாட்டில் எனக்கு விமர்சனம் உண்டு என்றாலும், உறுப்பினர் சந்தா சேவையில் எனக்கு உடன்பாடு இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஊடகங்களுக்கு இது தேவை என கருதுகிறேன். கட்டண சேவையை செயல்படுத்தும் விதத்தில் மாற்றங்கள் தேவை என்றாலும், சுதந்திர இணையம் எனும் கோட்பாட்டை ஆதரிக்கும் அடிப்படையிலேயே இந்த சேவை பற்றிய அறிமுக குறிப்புகளை எழுதுகிறேன். அவ்விதமே இது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.)