உங்களுக்காக ஒரு சொந்த தேடியந்திரம்
உங்களுக்காக என்று ஒரு கூகுள் இருந்தால் எப்படி இருக்கும்? இந்த ஏக்கத்தை நிறைவேற்றும் வகையில் தான் புதிய தேடியந்திரமான ’ஆப்சே’ அறிமுகம் ஆகியிருக்கிறது.
இந்த தேடியந்திரத்தை உங்ககளுக்கான சொந்த தேடியந்திரம் என்றும் குறிப்பிடலாம். ஏனெனில் இந்த தேடியந்திரம் உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து செயல்படுகிறது. உங்களுக்காக தேடித்தருகிறது.
இமெயில் பார்ப்பது முதல், இணையத்தில் உலாவுவது வரை, அரட்டை அடிப்பது முதல் கோப்புகளை பார்ப்பது வரை உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து நீங்கள் பயன்படுத்தும் எல்லாவற்றையும் இந்த தேடியந்திரம் கொண்டு தேடலாம்.
இந்த தேடியந்திரம் உங்கள் டிஜிட்டல் செயல்பாடுகளை அனைத்தையும் நினைவில் வைத்திருக்கிறது. எனவே எப்போது எந்த தகவல் தேவை என்றாலும் இதில் தேடிக்கொள்ளலாம். பத்து நாட்களுக்கு முன் நீங்கள் கூகுள் மூலம் தேடிய இணைய பக்கம் எதுவென நினைவில் இல்லையா? அதையும் மிக எளிதாக அப்சே மூலம் தேடலாம்.
ஆப்சே இதை சாத்தியமாக்கும் விதத்தை பார்க்கலாம். ஆப்சே, கூகுள் போன்ற பொது தேடியந்திரம் இல்லை என்பதால், இதை முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு, ஆப்சே உங்கள் கம்ப்யூட்டரில் பின்னணில் செயல்பட்டுக்கொண்டிருக்கும். அப்படியே ஒவ்வொரு செயல்பாட்டையும் ஸ்னேப்ஷாட்டாக சேமித்து வைத்துக்கொள்ளும்.
அதன் பிறகு, ஏற்கனவே பயன்படுத்திய ஏதேனும் ஒன்று தேவைப்பட்டால் கூகுளில் தேடுவது போல, ஆப்சேவில் அதற்கான குறிச்சொல்லை டைப் செய்து தேடலாம். கூகுள் போல இணைய முடிவுகளை பட்டியலிடாமல், ஆப்சே நீங்கள் பயன்படுத்தியவற்றில் இருந்து உங்களுக்குத்தேவையானதை தேடித்தரும்.
ஆக, ஆப்சேவை உங்கள் கம்ப்யூட்டருக்குள் செயல்படும் உங்களுக்கான கூகுள் என வர்ணிக்கலாம்.
உங்கள் கம்ப்யூட்டருக்குள் செயல்பட்டாலும், உங்கள் தனியுரிமையை மதிப்பதாக ஆப்சே தெரிவிக்கிறது. உங்கள் தகவல்களை நினைவில் வைத்துக்கொள்கிறதே தவிர, அவற்றில் எதையும் சேமிப்பதில்லை என்கிறது. இந்த தகவல்கள் கிளவுட் சேவைக்கும் அனுப்பி வைக்கப்படுவதில்லை என்கிறது. மேலும் இந்த சேவையில் விளம்பர ஊடுருவல்களும் இல்லை.
அதோடு, எப்போது, எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்க முடியும். ஏற்கனவே சேமித்தவற்றை நீக்கவும் செய்யலாம்.
தேடல் உங்கள் கம்ப்யூட்டருக்குள் நிகழ்வதால் இதை தயக்கம் இல்லாமல் பயன்படுத்தலாம். அதோடு, இதை பயன்படுத்த இணைய இணைப்பு இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
ஆப்சேவை உருவாக்கிய ரயான் பாக்ஸ் என்பவர், தனது மறதிக்கான தீர்வாக இந்த தேடியந்திரத்தை உருவாக்கியதாகவும், தன்னைப்போன்றவர்களுக்கு பயன்படுவதற்காக இதை ஒரு இணைய சேவையாக அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
டெவலப்பர்கள், ஆய்வாளர்கள், வர்த்தக அதிகாரிகள், ஆய்வு மாணவர்கள் என பலருக்கு இந்த தனித்தேடியந்திரம் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்.
ஆனால் ஒன்று ஆப்சே கட்டணச்சேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தேடியந்திர முகவரி:https://apse.io/
-