கூகுள் பழைய லோகோவை மீட்க ஒரு இணையதளம்
ஜிமெயில், கூகுள் மீட் உள்ளிட்ட கூகுள் சேவைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை நீங்கள் கவனித்திருக்கலாம். இந்த சேவைகளுக்கான லோகோவை கூகுள் மாற்றி அமைத்திருக்கிறது. இந்த லோகோ வடிவமைப்பு உங்களுக்கு பிடித்திருக்கலாம் அல்லது பிடிக்காமலும் போகலாம். விஷயம் அதுவல்ல, புதிய லோகோவை விட பழைய லோகோவே இருக்கலாம் எனும் எண்ணம் உங்களுக்கு இருந்தால், அதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான புதிய இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ரெஸ்டோர் ஓல்டு ஐகான்ஸ் ( https://restoreoldicons.xyz/) எனும் அந்த இணையதளம் மூலம், உங்கள் கூகுள் சேவைகளில் புதிய வடிவமைப்புக்கு பதிலால பழைய லோகோ வடிவங்களையே நீங்கள் பயன்படுத்தலாம்.
கூகுளின் பிரபலமான குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பு சேவையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சேவையை நிறுவிக்கொண்டால், ஜிமெயில், ஜிடிரைவ், கூகுள் மீட் உள்ளிட்ட சேவைகளில் பழைய லோகோவையே பயன்படுத்தலாம். பயர்பாக்ஸ் பிரவுசருக்கான சேவையும் அறிமுகம் ஆக உள்ளது.
இணைய யுகத்தில் , வர்த்தக நிறுவனங்கள் இஷ்டம் போல செயல்பட முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணம். கூகுள் போன்ற வர்த்தக நிறுவனங்கள் நினைத்தால் தங்கள் தள வடிவமைப்பு அல்லது லோகோ வடிவமைப்பை மாற்றலாம். ஆனால் இவ்வாறு செய்யும் போது பயனர்களின் கருத்தறிய வேண்டாமா?
பயனர்களுக்கு தாங்கள் பயன்படுத்தும் சேவைகளின் தன்மை மீது ஒரு அபிமானம் இருக்கும் அல்லவா? அதை கருத்தில் கொள்ளாமல் மாற்றங்களை செய்தால், இப்படி சின்னதாக பயனர் சார்பாக பதிலடி கொடுக்கலாம்.
கூகுள் இந்த சேவையை எப்படி எடுத்துக்கொள்ளும் எனத்தெரியவில்லை.
கிளாடியோ போஸ்டிங்கல் ( @skavalai ) என்பவர் இந்த சேவையை உருவாக்கியுள்ளார்.