பின்னணி இசைக்கான இணையதளம்
யூஸ் மை சவுண்ட் (https://usemysound.com/ ) தளத்தை பயன்படுத்தவும் செய்யலாம். நீங்கள் விரும்பினால், இதே போல ஒரு இணையதளத்தை உருவாக்கவும் செய்யலாம்.
முதலில் இந்த தளத்தின் பயன்பாட்டு அம்சத்தை பார்க்கலாம். கடைகள், காபி கடைகள், பார்கள் போன்ற இடங்களில் ஒலிபரப்பக்கூடிய பின்னணி இசை கோர்வைகளை இந்த தளம் உருவாக்கி அளிக்கிறது. கடை அல்லது காபி கடை உரிமையாளர்கள் தங்கள் வளாகத்தில் ஒலிக்கச்செய்ய இந்த தளத்தின் பின்னணி இசை கோர்வைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
பின்னணி இசையை வர்த்தக இடங்களில் மட்டும் தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமா என்ன? தனிநபர்களும் வேலையில் ஈடுபட்டிருக்கும் போது அல்லது ஓய்வெடுக்கும் போது கேட்டு ரசிக்க இந்த இசை கோப்புகளை பயன்படுத்தலாம்.
இசை கோப்புகளை பயன்படுத்த தளத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பின்னணி இசை கோப்புகள் ஸ்பாட்டிபை, ஆப்பிள் மியுசிக், யூடியூப் மியூசிக் போன்ற தளங்களில் பதிவேற்றப்பட்டு அதற்கான இணைப்பு மட்டும் தளத்தின் முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பாண்டோரா போன்ற மற்ற மேடைகளிலும் இணைப்புகள் இடம்பெற்றுள்ளன.
இசை சார்ந்த தளங்கள் எண்ணற்றவை இருக்கின்றன என்றாலும், ராக ஆலாபனை போல விரிவாக இல்லாமல், பாடல் பல்லவி போல எளிமையாக இருக்கிறது இந்த தளம்.
பின்னணி இசைக்கான கோப்புகள் மட்டும் இதில் உருவாக்கி பகிரப்பட்டுள்ளன. விரும்பினால் பயன்படுத்திக்கொள்ளலாம். வர்த்தக நோக்கிலான பயன்பாட்டிற்கு தனிப்பிரிவு இருக்கிறது. சாதாரணர்களுக்கு எந்த கட்டணமும் கிடையாது.
இசை ஆர்வம் கொண்ட நபர் ஒருவர், அந்த ஆர்வத்தை பொழுதுபோக்காக மட்டும் வைத்திருக்காமல், பயன்பாட்டு நோக்கில் இந்த தளத்தின் மூலம் உலகின் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறார். இதன் பின்னே பெரிய வர்த்தக நோக்கமோ, திட்டமோ இல்லை.
அவருக்கு இசை அமைப்பதில் ஆர்வம் இருக்கிறது. அதை வெளிப்படுத்தும் வகையில் பல சூழல்களுக்கான பின்னணி இசையை உருவாக்கி இந்த தளத்தில் பகிர்ந்து கொண்டு வருகிறார். அவ்வளவு தான். உங்களிடமும், ஆர்வமும் திறமையும் இருந்தால் இதே போன்ற இணையதளத்தை அமைக்கலாம். அது இன்னொரு பின்னணி இசை தளமாக தான் இருக்க வேண்டும் என்றில்லை.!