கேள்வி பதில் தளங்களின் முன்னோடி
இணையத்தில் கேள்வி பதில் தளங்கள் என ஒரு பிரிவு இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். குவோரா ( https://www.quora.com/) தளம் தான், இப்போது இந்த பிரிவில் முன்னணியில் இருக்கிறது. தொழில்நுட்ப கேள்விகளுக்கான ஸ்டாக் ஓவர்புளோ (https://stackoverflow.com/ ) உள்ளிட்ட வேறு பல கேள்வி பதில் தளங்களும் இருக்கின்றன. ஆஸ்க்.எப்.எம் ( https://ask.fm/) தளம் கேள்வி பதில்களுக்கான சமூக வலைப்பின்னல் தளமாக செயல்படுகிறது.
கூகுள் உள்ளிட்ட தேடியந்திரங்கள் இணையத்தில் தகவல்களை தேட வழி செய்கின்றன என்றால், கேள்வி பதில் தளங்கள், உங்களுக்கு உள்ள கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்க முற்படுகின்றன. இதில் போதமைகள் உண்டென்றாலும், பல நேரங்களில் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கலாம்.
இந்த வகை சேவையை முதலில் பிரபலமாக்கியது ஆஸ்க்ஜீவ்ஸ் எனும் தேடியந்திரம். கூகுள் அறிமுகமாவதற்கு முன்னர் இணையத்தில் செல்வாக்குடன் திகழ்ந்த தேடியந்திரங்களில், தனித்தன்மையுடன் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்தது ஆஸ்க்ஜீவ்ஸ்.- Ask Jeeves
ஆனால், கேள்வி பதில் வடிவில் தகவல் அளிப்பதில் ஆஸ்க் ஜீவ்ஸுக்கும் ஒரு முன்னோடி இருக்கிறது. எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இன்னமும் தொடர்ந்து இயங்கி வரும் அந்த முன்னோடி கேள்வி பதில் சேவையான ஸ்டார்ட் ( http://start.csail.mit.edu/index.php) பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம்.
ஸ்டார்ட் தன்னை, வலைக்கான கேள்வி பதில் அமைப்பு என வர்ணித்துக்கொள்கிறது. அதிலும், குறிப்பாக இயற்கையான மொழியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு கச்சிதமாக பதில் அளிக்கும் சேவை என இதை புரிந்து கொள்ளலாம். தேடியந்திரங்கள் உள்ளிட்ட தகவல் மீட்பு சேவைகள் போல, பொதுவான முடிவுகளை பட்டியலிடுவதற்கு பதிலாக, கேட்கப்படும் கேள்விக்கான பதிலை மட்டும் அளிப்பதை நோக்கமாக கொண்டு இந்த சேவை உருவாக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நகரங்கள், நாடுகள், பிரபலங்கள், திரைப்படங்கள் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக ஆங்கிலத்தில் கேட்கப்படக்கூடிய லட்சக்கணக்கான கேள்விகளுக்கு இந்த சேவை நேரடியாக பதில் அளிக்கிறது.
கேட்கும் கேள்விக்கு உரிய பதிலை அளிப்பதோடு, அந்த பதில் பெறப்பட்ட மூல ஆதாரத்தையும் அடிக்குறிப்பாக இந்த சேவை முன்வைக்கிறது.
வானம் ஏன் நீலமாக இருக்கிறது?, இஸ்ரேலில் எத்தனை பேர் வசிக்கின்றனர்? என்பது போன்ற கேள்விகளுக்கு இந்த தளம் சுற்றி வளைக்காமல் நேரடியாக பதில் அளிக்கிறது. மாஸ்கோவின் மெட்ரோ வரைபடம் தேவை அல்லது டென்மார்க்கின் வரைபடம் என்ன போன்ற கேள்விகளுக்கும் நேரடியாக பதில் அளிக்கிறது. இவை எல்லாம் உதாரணங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.
இதே போன்ற கேள்விகளை நீங்களும் இந்த தளத்தில் கேட்டுப்பார்க்கலாம். பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் கிடைக்கலாம். பதில் இல்லாத கேள்விகளுக்கு, மன்னிக்கவும் இது பற்றி எங்களிடன் விவரம் இல்லை என்பது போன்ற வெளிப்படையான பதில் வருகிறது.
போரிஸ் காட்ஸ் ( Boris Katz ) எனும் கம்ப்யூட்டர் விஞ்ஞானி , இன்போலேப் மற்றும் எம்.ஐ.டி பல்கலை ஆகியவற்றுடன் இணைந்து இந்த தளத்தை 1993 ல் தோற்றுவித்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆய்விலும் இந்த தளம் அங்கம் வகிக்கிறது. அந்த வகையில் கேள்வி பதில் பாணி சேவைகளுக்கு மட்டும் அல்ல, சாட்பாட் என சொல்லப்படும் உரையாடும் தன்மை கொண்ட அரட்டை மென்பொருள்களுக்கும் இந்த தளம் முன்னோடியாக திகழ்வதாக கருதலாம்.