பங்குச்சந்தை உணர்வுகளை சொல்லும் இணையதளம்
இந்த மின்மடலை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு, ஒரு விஷயம் புரிந்திருக்கும். இணையதளங்களை அறிமுகம் செய்வது மட்டும் அல்ல: இந்த அறிமுகங்கள் மூலம் முக்கிய இணைய போக்குகளையும் அடையாளம் காட்டுவது இந்த மின்மடலில் நோக்கங்களில் ஒன்று என்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம்.
இதன் காரணமாகவே, நம்மவர்களுக்கு நேரடியாக பயன்படக்கூடியது இல்லை என்றாலும் கூட, நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் இணையதளங்கள் பற்றி எழுதுகிறேன். இன்று பார்க்க இருக்கும் இணையதளமும் அந்த வகை தான்.
ஸ்வேகிஸ்டாக்ஸ் எனும் இணையதளத்தின் புதிய சேவை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஸ்வேகிஸ்டாக்ஸ் பங்குச்சந்தை போக்குகள் தொடர்பான தகவல்களை அளிக்கும் இணையதளம் என அறிய முடிகிறது.
நம்மூரில் பங்குச்சந்தை மீது ஆர்வம் கொண்டவர்கள் அற்ப, சொற்பம் என்பதால் பங்கு வர்த்தகம் தொடர்பான தகவல்களை அளிக்கும் இணையதளம் என்றதுமே, பெரிய சுவாரஸ்யம் இருக்காது. அதிலும், இந்த தளம் பிரதானமாக அமெரிக்க பங்குச்சந்தையை மையமாக கொண்டது என்பதை அறிந்து கொண்டால், இந்த தளத்தை அறிந்து கொள்வதைவிட வேறு வேலை பார்க்கலாம் என்றே நினைக்கத்தோன்றும்.
இருப்பினும், வால்ஸ்டிரீட்பெட்ஸ் ரெட்டிட் பக்கத்தின் விவாதங்களை திரட்டித்தரும் இந்த இணையதளத்தை நிச்சயம் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், பங்குச்சந்தையில் காலம் மாறிவிட்டது என்பதை உணர்த்தும் இணையதளங்களில் ஒன்றாக இது அமைகிறது.
பெரிய சித்திரத்தின் ஒரு பகுதி என்பார்களே அது போல, இணையத்தில் நிகழ்ந்து வரும் பெரிய போக்கின் அடையாளமாக இந்த தளம் அமைகிறது.
இந்த தளம் என்ன செய்கிறது என்றால், முன்னணி சமூக ஊடக தளங்களில் ஒன்றான ரெட்டிட் தளத்தில் பங்குச்சந்தை தொடர்பான விவாத குழுவான வால்ஸ்டிரீட்பெட் –ல் பேசப்படும் விஷயங்கள் அடிப்படையிலான போக்குகளை தொகுத்தளிக்கிறது. -https://swaggystocks.com/dashboard/wallstreetbets/ticker-sentiment
அண்மையில் இணையத்தை அதிரச்செய்த கேம்ஸ்டாப் பங்கு விவகாரத்தின் பின்னே இருந்த விவாதக்குழு இது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.
கேம்ஸ்டாப் விவகாரம் பங்குச்சந்தையில் வெடித்த சிறுமுதலீட்டாளர்கள் புரட்சி என வர்ணிக்கப்படுகிறது. வழக்கமாக பெரிய பங்கு நிறுவனங்கள் செய்து வருவதை முதல் முறையாக இணையத்தின் மூலம் ஒன்று திரண்ட சிறு முதலீட்டாளர்கள் செய்து காட்டி பங்கு நிறுவனங்களை திகைக்க வைத்துள்ளனர்.
அதாவது கேம்ஸ்டாப் பங்குகளின் விலை சரியும் என எதிர்பார்த்து, அந்நிறுவன பங்குகள் பின்னர் விற்று லாபம் பார்க்க வாங்கிய பங்கு நிறுவனத்தை அசர வைப்பதற்காக, சிறுமுதலீட்டாளர்கள் கூட்டாக சேர்ந்து, அந்த நிறுவன பங்குகளை வாங்கி குவித்து அதன் விலையை உச்சம் தொட வைத்து, பங்குச்சந்தை விளையாட்டை தலைகீழாக்கி இருக்கின்றனர்.
இது சுருக்கமான விளக்கம். இதன் பின்னே மேலும் பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது, ரெட்டிட் விவாதக்குழுவான வால்ஸ்டிரீட்பெட்ஸ். இந்த குழுவில் தான் கேம்ஸ்டாப் விவகாரம் விவாதிக்கப்பட்டு, அநியாயமாக அந்நிறுவன பங்குகளால் பெரிய நிறுவங்கள் கொள்ளை லாபம் பார்ப்பதை தவிர்ப்பதற்காக சிறு முதலீட்டாளர்கள் இந்த பங்குகளை வாங்கி குவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவர்களும் அதை ஏற்று செயல்படவே அமெரிக்க பங்குச்சந்தைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட்டது.
சிறு முதலீட்டாளர்களால் என்ன பெரிதாக செய்துவிட முடியும் என்பதற்கு மாறாக, அவர்கள் முண்டா தட்டி தங்கள் சக்தியை காண்பித்துள்ளனர். இதற்கு அடிப்படையாக அமைந்தது வால்ஸ்டிரீட்பெட்ஸ் குழு தான்.
இப்போது புரிந்திருக்குமே இந்த குழுவின் முக்கியத்துவம். இதை உணர்ந்து ஸ்வேகிஸ்டாக்ஸ் தளம், இந்த குழுவில் விவாதிக்கப்படும் பங்குகள் போக்கை அறிவதற்கான தகவல்களை திரட்டித்தரும் புதிய பகுதியை துவக்கியுள்ளது.
வரைபடங்கள், புள்ளி விவரங்கள், மணிக்கணக்கிலான கணிப்புகள் என அமைந்திருக்கும் இந்த பக்கம் வியப்பாகவே இருக்கிறது.
வால்ஸ்டிரீட்பெட்ஸ் குழுவின் பிரபலத்தை பயன்படுத்திக்கொள்ளும் முயற்சியாக இருந்தாலும், பொதுவாக இத்தகைய பங்கு சார்ந்த ஆய்வுகள் பெரிய நிறுவனங்கள் சேவையை அடிப்படையாக கொண்டே அமையும். ஆனால், இணைய விவாதக்குழு ஒன்றின் தகவல்களை, திரட்டித்தரும் சேவை என்பது புதிய போக்கு தானே.