கோல்கீப்பர்களுக்கான செயலி
எப்படி தேடியந்திரங்களுக்கு கூகுள் உதாரணமாக கருதப்படுகிறதோ, அதே போல வாடகை இணைப்பு சேவைகளுக்கு ’உபெர்’ உதாரணமாக அமைகிறது. அந்த வகையில், கோல்கீப்பர்களுக்கான உபெர் என வர்ணிக்கப்படும் புதுமையான செயலி அறிமுகம் ஆகியுள்ளது.
ரெண்ட் ஏ கீப்பர் ( 'Rent A Keeper') எனும் இந்த செயலி, கோல்கீப்பர்களையும், கால்பந்து அணிகளையும் இணைத்து வைக்கிறது. அதாவது சவாரி தேவைப்படும் போது எப்படி உபெர் போன்ற இணைய கால்டாக்சி சேவைகளை பயன்படுத்திக்கொள்கிறோமோ, அது போல, கால்பந்தாட்ட அணிகளுக்கு கோல்கீப்பர் தேவை எனில் இந்த செயலியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
கால்பந்து விளையாட்டு என்று சொன்னதும் நினைவுக்கு வரக்கூடிய பிரேசில் நாட்டில் தான் இந்த செயலி அறிமுகம் ஆகியுள்ளது.
இந்த செயலி கோல்கீப்பர்கள் சேவையை பட்டியலிடுகிறது. கோல்கீப்பர்கள் தேவைப்படும் அணிகள், இந்த செயலி மூலம் அவர்களை அமர்த்திக்கொள்ளலாம். கீப்பர்கள் சேவைக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதில் ஒரு பகுதி செயலிக்கும், பெரும்பகுதி கோல்கீப்பருக்கும் அளிக்கப்படுகிறது.
கீப்பர்களை எல்லாம் கூட வாடகைக்கு அமர்த்திக்கொள்வார்களா? என கேட்த்தோன்றினாலும், பிரேசில் நாட்டில் உள்ள சூழலை மனதில் நிறுத்திப்பார்த்தால் இதன் அருமை புரியும். பிரேசிலில் உள்ள வாடகை மைதானங்களில், மாதந்தோறும் ஒரு லட்சம் போட்டிகள் நடைபெறுகின்றனவாம். அப்படி இருந்தும் 70 சதவீத கால்பந்து அணிகளுக்கு நிர்ந்தர கோல்கீப்பர் கிடையாதாம்.
இந்த பின்னணியில் தான், தேவைக்கேற்ப கோல்கீப்பர்களை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளும் செயலி அறிமுகம் ஆகியுள்ளது.
இதே போல, கனடாவிலும் கோல்கீப்பர்களை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளும் வசதியை அளிக்கும் செயலிகளும், இணைய சேவைகளும் இருப்பதை அறிய முடிகிறது.
பிரேசில் கால்பந்து தேசம் என்றால், கனடா ஐஸ் ஹாக்கி எனப்படும் ’பனி ஹாக்கி’ விளையாட்டில் மூழ்கியிருக்கும் தேசம். ஹஸ் ஹாக்கி அணிகளுக்கு, கடைசி நேரத்தில் மாற்று கீப்பர்களுக்கான தேவை அதிகம் ஏற்படும் நிலையில், கோலிஅப் (https://goalieup.com/en ) போன்ற தளங்கள், வாடகை கோல்கீப்பர் சேவையை அளிக்கின்றன.
இதே போல, புக்கா ஆப் மற்றும் ரெண்ட் ஏ கோலி (http://rentagoalie.com/) ஆகிய தளங்களும் இதே போன்ற வசதியை அளிக்கின்றன.
பாராட்டக்கூடிய புதுமையான சேவைகள் தான், ஆனால் நமக்கு பயனில்லையே என நினைப்பர்வர்கள், ரெண்ட் ஏ கோலி எனும் பெயரிலான தொலைக்காட்சித்தொடரை பார்த்து ரசிக்கலாம்: https://www.imdb.com/title/tt0772215/
-
சந்திப்புகளின் மையத்தை அறிய உதவும் செயலி
நண்பர்கள் சந்திக்க விரும்பும் போது, பொதுவான ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்வது வழக்கம். ஆனால், அந்த பொதுவான இடம் ஒருவருக்கு அல்லது ஒரு சிலருக்கு மட்டும் அருகாமையில் இருந்துவிட்டால் சிக்கல் தான். சந்திக்கும் இடத்திற்கு அதிக தொலைவு பயணம் செய்ய வேண்டி இருப்பவர்கள், நான் மட்டும் இவ்வளவு தொலைவு வர வேண்டுமா? என அலுத்துக்கொள்ளலாம்.
சில நேரங்களில், சந்திப்புக்கான இடம் அதிக தொலைவாக இருக்கிறது என அதிருப்து அடைபவர் அதன் காரணமாகவே சந்திப்பை ரத்து செய்துவிடலாம்.
இது போன்ற சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காகவே, சிட்டி ஸ்கொயர் எனும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் சந்திக்க விரும்பும் போது, ஒவ்வொருவரின் இருப்பிடத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அனைவருக்கும் சம தொலைவில் இருக்கும் பொதுவான இடத்தை பரிந்துரைக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுவான இடத்தை பரிந்துரைப்பதோடு, அருகே உள்ள ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட இடங்களையும் அடையாளம் காட்டுகிறது. இருப்பிடத்தை குரல் வாயிலாக குறிப்பிடும் வசதியும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைச்சேர்ந்த பிராசந்த் குருநாத் என்பவர் இந்த செயலியை உருவாக்கியுள்ளார். இப்போது தான் அறிமுகம் ஆகியிருக்கும் செயலி. எப்படி இருக்கிறது என பயன்படுத்தி பார்த்து சொல்லவும்: https://play.google.com/store/apps/details?id=com.prashanth.guru.citysquareapp&hl=en_US
-