இந்தியாவில் இருந்து ஒரு தேடியந்திரம்
தேடியந்திர பரப்பு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. அதில் கூகுள் பின் தங்கி கொண்டிருக்கிறது. இதன் அடையாளமாக புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் ’கியூமாமு’ (https://qmamu.com/ ) தேடியந்திரத்தை சொல்லலாம்.
இந்திய தேடியந்திரமாக அறிமுகம் ஆகியிருக்கும், கியூமாமு தன்னை இந்தியாவின் முதல் தனியுரிமை தேடியந்திரம் என வர்ணித்துக்கொள்கிறது. அந்த வகையில், இதை இந்தியாவின் டக்டக்கோ என வர்ணிக்கலாம்.
டக்டக்கோவை நீங்கள் அறிந்திருக்கலாம். இது கூகுளுக்கான மாற்று தேடியந்திரம் மட்டும் அல்ல, கூகுள் போல பயனாளிகள் தொடர்பான தரவுகளை சேகரித்து, அவற்றை விளம்பர நோக்கில் பயன்படுத்தாமல் அவர்களின் தனியுரிமையை மதிக்கும் தேடியந்திரம் என பெருமிதம் கொள்ளும் தேடியந்திரமாக இருக்கிறது.
டக்டக்கோ போலவே, இன்று இணைய உலகில் பல தனியுரிமை தேடியந்திரங்கள் இருக்கின்றன. ஆக, கூகுளில் இருந்து மாறுபட்டு பயனாளிகளின் தேடல் சுவடுகளை கண்காணிக்காமல், தரவுகளை சேகரிக்காமல் இருக்கும் தன்மையை இந்த தேடியந்திரங்கள் முதன்மையாக கருதுகின்றன.
ஸ்டார்ட்பேஜ், குவாண்ட் என பல தனியுரிமை தேடியந்திரங்கள் இருக்கின்றன.
இந்த வரிசையில் இந்தியாவின் முதல் தனியுரிமை தேடியந்திரமாக கியூமாமு அறிமுகம் ஆகியிருப்பதை முக்கியமாகவே கருத வேண்டும்.
இந்திய இணைய பரப்பில் இப்போது தற்சார்பு அலை வீசிக்கொண்டிருக்கும் நிலையில், இந்திய தன்மையை ஆதாரமாக கொண்டு தேடியந்திர பரப்பில் கியூமாமு அறிமுகம் ஆகியிருக்கிறது.
இந்திய தேடியந்திரம் என்று மட்டும் மார்தட்டிக்கொள்ளாமல், தனியுரிமையை காப்பதை முதன்மையான அம்சமாக கொண்டிருப்பதை வரவேற்கலாம்.
எனினும், இந்த தேடியந்திரம் தொடர்பாக சில சந்தேகங்கள் இல்லாமல் இல்லை. அவற்றை பார்ப்பதற்கு முன், தேடியந்திரமாக இதன் செயல்பாட்டை பார்த்துவிடலாம்.
முதல் பார்வைக்கு இந்த தேடியந்திரம் சிறப்பாகவே தோன்றுகிறது. இதன் தேடல் முடிவுகள் வேகமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கின்றன. வலைப்பக்கங்கள், செய்திகள்,புகைப்படம் மற்றும் வீடியோ என தனித்தனியே தேட முடிகிறது. ஷாப்பிங் வசதியும் உள்ளது. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் தேட முடிகிறது.
ஆனால், இந்த தேடியந்திரம் எப்படி தகவல்களை தேடுகிறது என்பது தொடர்பான தகவல்கள் இல்லை. அதாவது, இந்த தேடியந்திரம் சொந்த தேடல் நுட்பத்தை கொண்டிருக்கிறதா? அல்லது வேறு மூல தேடியந்திரத்தின் தேடல் முடிவுகளை பயன்படுத்திக்கொள்கிறதா? என்பது குறிப்பிடப்படவில்லை.
ஒரு சில தேடியந்திரங்கள் கூகுள் தேடல் முடிவுகளையே பயன்படுத்திக்கொள்வதும் உண்டு. எனவே, புதிய தேடியந்திரம் எனில் அது மூல தேடியந்திரமா என அறிவது மிக முக்கியம். மூல தேடியந்திரம் எனில், இணையத்தில் துழாவ தனக்கான தேடியந்திர சிலந்திகளை கொண்டு சொந்தமாக இணைய முடிவுகளை பட்டியலிட்டு செயல்படும் தேடியந்திரம் என பொருள்.
அந்த வகையில் கியூமாமு தனக்கான தேடல் முறையை கொண்டுள்ளதா என்பதும் ஆம் எனில் அதற்கான நுணுக்கங்கள் என்ன என்பதும் குறிப்பிடவில்லை.
அப்படி, சொந்த தேடல் முறையை கொண்டிருந்தால் கியூமாமுவை இந்திய தேடியந்திரம் என கொண்டாடலாம். இல்லை எனில், இந்திய தேடியந்திரம் என அழைப்பதில் பொருத்தம் இல்லை.
கியூமாமுவுன் அறிமுக பக்கத்தில் இந்திய தன்மையும், தனியுரிமை பாதுகாப்பும் பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளனவேத்தவிர, அதன் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான தெளிவான விளக்கம் இல்லை.
கியூமாமு தொடர்பாக வெளியான செய்திகளிலும் அதிக தகவல்கள் இல்லை. இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று இந்த தேடியந்திரம் அறிமுகம் ஆகியுள்ளது. இது தொடர்பான செய்தி அறிக்கை தகவல்களே , இந்த தேடியந்திரம் தொடர்பான எல்லா செய்திகளிலும் இடம்பெற்றுள்ளன. இந்த தகவல் பற்றாக்குறை சந்தேகம் கொள்ள வைக்கிறது.
ஆக இது உண்மையில் இந்திய தேடியந்திரமா அல்லது, தற்சார்பு இந்தியா கோஷத்தை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட தேடியந்திரமா என உறுதியாக தெரியவில்லை.