பொய் பூனைகளுக்கான இணையதளம்
’இந்த பூனை உலகத்தில் இல்லை’ - இப்படி சொல்வதற்காக இதே பெயரில் (thiscatdoesnotexist.com ) ஒரு இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் நுழைந்தீர்கள் என்றால், அதன் முகப்பு பக்கத்தில், கருப்பு நிற பின்னணியில் அழகான பூனை ஒன்றை பார்க்கலாம்.
இந்த பக்கத்தை புதுப்பித்தால் வேறு ஒரு பூனையை பார்க்கலாம். மீண்டும் புதுப்பித்தால் வேறு ஒரு பூனையை பார்க்கலாம். இப்படி புதுப்பித்துக்கொண்டிருந்தால், புதுப்புது பூனைகளாக பார்த்துக்கொண்டிருக்கலாம்.
இணையத்திற்கும், பூனைகளுக்கும் தான் பூர்வ ஜென்ம பந்தம் இருக்கிறதே, பூனை படங்களை தோன்றச்செய்யும் இந்த இணையதளத்தில் என்ன பெரிய விஷயம் என கேட்பதாக இருந்தால், இந்த பூனைகள் எதுவுமே உலகில் இல்லாதவை என்பது தான் விஷயம்.
ஆம், இந்த பூனைகள் இல்லவே இல்லை!
அப்படி என்றால், இவை பூனைகளின் புகைப்படங்கள் அல்ல, மாறாக இல்லாத பூனையை கம்ப்யூட்டர் உருவாக்கித்தரும் புகைப்படம். அச்சு அசல் பூனை போலவே இருந்தாலும், இந்த படத்தில் உள்ள எதுவுமே உண்மையான பூனை அல்ல. எல்லாமே, கம்ப்யூட்டர் உருவாக்கிய போலி பூனைகள்.
இதென்ன வில்லங்கமாக இருக்கிறதே என நினைக்கலாம். வில்லங்கம் தான் என்றாலும், ஏ.ஐ வில்லங்கம் என வைத்துக்கொள்ளுங்களேன்.
இப்போது வேகமாக கிளை பரப்பி வரும் ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவில் பல பிரிவுகளும், பல துணை பிரிவுகளும் இருக்கின்றன. அவற்றில் ஒன்றான, கேன் எனப்படும், ஜெனரேட்டிவ் அட்வர்சரியல் நெட்வொர்க் ("generative adversarial network", ) எனும் நுட்பம் இந்த டிஜிட்டல் பூனைகளை உருவாக்கி இருக்கிறது.
கேன் நுட்பம் எப்படி செயல்படுகிறது என்றால், இல்லாத ஒன்றை அது புதிதாக உருவாக்கும். அதற்கான தரவுகள் அமைப்பை மட்டும் கொடுத்துவிட்டால் போதும். இல்லாத ஒன்றை கம்ப்யூட்டரே உருவாக்கும் போது, அதில் பல பிழைகள் இருக்கலாம் அல்லவா? அத்தகைய பிழைகளை கண்டறிந்து சொல்வதற்கான இன்னொரு பாதியையும் இந்த நுட்பமே கொண்டிருக்கிறது.
ஆக, ஒன்றை உருவாக்கிய உடனே, அதில் என்ன குறை என்பதை இன்னொரு பகுதி தெரிவிக்க, இந்த நுட்பம் அந்த குறையை சரி செய்து தனது உருவாக்கத்தை மேம்படுத்திக்காட்டும். இதிலும் குறைகள் கண்டுபிடிக்கப்பட, அதுவும் சரி செய்யப்படும். இப்படியாக உருவாக்குதல், கற்றறிதல் முறையில் தானே மாற்றி மாற்றி செயல்படும் இந்த நுட்பம் இறுதியாக அச்சு அசலான தோற்றத்தை உருவாக்கி காட்டும்.
இப்படி தான், பூனை படங்களின் தரவுகள் அமைப்பை கொண்டு இல்லாத பூனைகளை இந்த தளம் உருவாக்கி காட்டுகிறது.
இதே முறையில்,பொய் மனிதர்களை உருவாக்கும் தளமும் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது. இதே பாணியில் வேறு சில தளங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் போக்கை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் இந்த தளங்களை புக்மார்க் செய்து கொள்வது நலம்.