இந்த தளம் இலக்கியத்திற்கான கிளப்ஹவுஸ்
லவுடிட்.ஆர்க் ( http://www.loudlit.org/) இணையதளத்தை கிளப்ஹவுசுடன் ஒப்பிடுவது, ஒரு கவன ஈர்ப்பிற்காக தானே தவிர, ஒலி அம்சத்தை தவிர இரண்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை.
கிளப்ஹவுஸ் ஒலி வடிவிலான உரையாடலுக்கான இணைய மடம் என்றால், ’லவுடிட்’ இலக்கிய வாசிப்புக்கான இணையதளம். இந்த தளத்தில் காப்புரிமை விடுபட்ட நாவல்களையும், கதைகளையும், கவிதைகளையும் வாசிக்கலாம்.
இவ்வாறு வாசிக்க கிடைக்கும் கதைகளின் பட்டியல் மிக குறைவு என்றாலும், இந்த தளத்தில் என்ன சிறப்பு என்றால், கதைகளை வாசிக்கவும் செய்யலாம், கேட்கவும் செய்யலாம் என்பது தான். ஆம், மின்னூல் வடிவில் புத்தகமாக வாசிக்கலாம். உண்மையில் எச்டிஎம்எல்- ஆக எளிதாகவும் வாசிக்கலாம். அதே நேரத்தில், இந்த புத்தகத்தை ஒலி புத்தகமாக கேட்கவும் செய்யலாம்.
ஒரே புத்தகத்தை மின்னூல் வடிவில் வாசிக்கவும், ஒலி வடிவில் கேட்கவும் வழி செய்கிறது இந்த தளம். அதிலும் மிக அழகாக ஒரே பக்கத்தில் அருகாமையில் இந்த இரண்டு வசதிகளையும் வழங்குகிறது. இதன் மூலம் வெளிப்படும் இடைமுக ஒத்திசைவை ஒரு கவிதை எனலாம்.
புத்தகங்களை மின்னூலாக தரவிறக்கலாம். ஒலிப்புத்தகங்களை எம்பி-3 கோப்பாக தரவிறக்கலாம்.
ஆனால், இந்த தளம் சொந்தமாக எதையும் செய்துவிடவில்லை. இதில் உள்ள மின்னூல்கள் ’பிராஜெக்ட் குடென்பர்க்’ தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. ஒலிப்புத்தகங்கள், ’லைபிரிவாக்ஸ்’ தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.
இந்த தளத்தில் உள்ள குறை, அதன் சுய தகவல் பக்கம், நேரடியாக அதிக விவரங்கள் இல்லாமல் பொதுவான விவரங்களை மட்டுமே கொண்டிருக்கிறது.
கண்ணுக்கும், காதுக்குமான இலக்கியம் என முகப்பு பக்கத்தில் குறிப்பிடும் இந்த தளம், அதன் அறிமுக பக்கத்தில், பொதுவெளியில் உள்ள மகத்தான இலக்கியங்களை ஒலியுடன் இணைப்பதாக தெரிவிக்கிறது. இதன் மூலம், இலக்கணம், உச்சரிப்பு போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.