உங்களுக்கு பிடித்த திரைப்படங்களை கண்டறிய உதவும் இணையதளம்
கமல் ஹாசனின் ‘அன்பே சிவம்’ என்ன மாதிரியான திரைப்படம். இது நுட்பமான படமா? சிக்கலான படமா? அல்லது அருமையான படமா?
அதே போல, கமலின் ஆளவந்தான் சிக்கலான படமா? நாயகனும், குணாவும் என்ன மாதிரியான படம்? இந்த கேள்விகள் எல்லாம் சுவாரஸ்யமாக தோன்றினால், பிளிக்ஸீகர்.காம் (https://flickseeker.com/ ) இணையதளம் உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கும். ஏனெனில், இந்த தளம் திரைப்படங்களை எல்லாம் இப்படி தான் வகைப்படுத்துகிறது.
ஆனால், ஒன்று கமலின் குணாவையும், அன்பே சிவம் படத்தையும் உதாரணத்திற்கு தான் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த தளத்தில் ஹாலிவுட் திரைப்படங்கள் பற்றி தான் அறிந்து கொள்ள முடியும்.
பிலிக்ஸீகர் தளத்தை, திரைப்பட கண்டறிதல் இணையதளம் என வகைப்படுத்தலாம். அதாவது, நீங்கள் பார்த்து ரசிக்க கூடிய படங்களை அறிமுகம் செய்து கொள்ள வழி செய்யும் தளமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தகைய திரைப்பட கண்டறிதல் தளங்கள் ஏற்கனவே பல இருந்தாலும், தோற்றத்திலும், உள்ளடக்கத்திலும் பிளிக்ஸீகர் தளமும் இவற்றில் இருந்து பெரிதாக வேறுபடவில்லை என்றாலும், இந்த தளம் கவனத்தை ஈர்க்கவே செய்கிறது. அதற்கு காரணம், திரைப்பட கண்டறிதல் சேவையில் இந்த தளம் சின்னதாக ஒரு புதுமையை புகுத்தியிருப்பது தான்.
உங்கள் மனநிலைக்கு ஏற்ற திரைப்படங்களை கண்டறிய உதவுவது தான் இந்த தளம் செய்துள்ள புதுமை. அதாவது, ஒரு திரைப்படம் தரக்கூடிய உணர்வு நிலையை அந்த படம் தொடர்பான உணர்வாக வைத்துக்கொண்டு அதனடிப்படையில் படங்களை அறிமுகம் செய்து கொள்ள வழி செய்கிறது.
அந்த வகையில், திரைப்படங்களை நகைச்சுவையானவை, மனதை லேசாக்க கூடியவை, அருமையானவை என்றெல்லாம் வகைப்படுத்துகிறது. ஆக, அருமையான (Brilliant) படங்களை கிளிக் செய்தால், அவ்விதமாக பட்டிய்லப்பட்டுள்ள படங்களை எல்லாம் பார்க்கலாம்.
எல்லா திரைப்பட தளங்களில் உள்ளது போலவே, அந்த படத்தின் இயக்குனர், நடிகர்கள், கதைச்சுருக்கம் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இவற்றுடன் அந்த படம் தொடர்பான உணர்வு நிலையை தெரிந்து கொள்வதோடு, அதே போன்ற படங்களின் பட்டியலையும் பார்க்கலாம்.
திரைப்படங்களை அறிமுகம் செய்து கொள்ள பல வழிகள் இருக்கின்றன. காவிய படங்கள் என தேடலாம். முன்னணி பத்து படங்கள் என பார்க்கலாம். குறிப்பிட்ட வகை படங்கள் என பட்டியலிடப்படலாம். இவற்றில் இருந்து சற்றே வேறுபட்டு, ஒவ்வொரு படமும் ரசிகர்களிடம் ஏற்படுத்தக்கூடிய உணர்வு நிலையின் அடிப்படையில் படங்களை இந்த தளம் பட்டியலிட்டு பரிந்துரைக்கிறது.
ஆக, இந்த தளத்தில் உங்கள் மனநிலைக்கு ஏற்ற படங்களை தேர்வு செய்து கொள்ளலாம். உதாரணமாக, நீங்கள் மனதை லேசாக்க கூடிய படங்களை பார்க்க விரும்பினால், அந்த உணர்வு நிலையை தரக்கூடிய படங்களை நாடலாம். இதை எளிதாக சாத்தியமாக்கும் வகையில், அந்த வகை படங்கள் எல்லாம், மனதை லேசாக்க கூடியவை எனும் வார்த்தையுடன் டேக் செய்யப்பட்டுள்ளன.
இப்படியாக, ஒருவர் விரும்பும் உணர்வு நிலைக்கு பொருத்தமான வார்த்தையை ( டேக்) தேர்வு செய்து தொடர்புடைய படங்களை கண்டறியலாம்.
எல்லாம் சரி, ஒரு திரைப்படத்தை நகைச்சுவை படம் அல்லது அதிரடி திரைப்படம் என எளிதாக வகைப்படுத்திவிடலாம். ஆனால், ஒரு படத்தின் உணர்வு நிலையை எப்படி வகைப்படுத்துவது? பிளிக்ஸீகர் இதை ரசிகர்களின் உதவுயோடு செய்கிறது.
ஆம், இந்த தளத்தை பயன்படுத்தும் ரசிகர்கள், தாங்களும் திரைப்படங்களை டேக் செய்யலாம். குறிப்பிட்ட ஒரு படம் தங்களுக்கு உண்டாக்கிய உணர்வு நிலையை, ரசிகர்கள் தங்கள் சார்பாக அந்த படத்தில் இணைக்கலாம். இப்படி ரசிகர்கள் இணைக்கும் டேக் சொற்கள் அடிப்படையில் படங்கள் பட்டியலிடப்படுகின்றன.
ஆக, ஒரு படம் எண்ணற்ற டேக் சொற்களை கொண்டிருக்கலாம். இதன் பொருள், அந்த படம் தொடர்புடைய அனைத்து உணர்வு நிலையையும் அளிக்கும் என்பதாகும்.
இப்படி, உணர்வு நிலை சார்ந்த சொற்கள் அடிப்படையில் படங்களை தேடுவது சுவாரஸ்யமாக தான் இருக்கிறது. நீங்களும் பயன்படுத்திப்பார்த்து சொல்லுங்கள்!