சமூக வாசிப்புக்கான செயலி ’பிங்கே’
இத்தனை மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் ஒரு புதிய செயலியை அறிமுகம் செய்து நாளாயிற்று எனும் பீடிகையோடு ’பிங்கே.இன்’ (https://bynge.in/ ) செயலி பற்றி எழுதுகிறேன்.
பிங்கே செயலியை அறிமுகம் செய்வதில் ஏன் இந்த உணர்வெழுச்சி என்பதற்கான பதிலாக, நம்ம சாரு அதில் எழுதுகிறார், பா.ரா’வும் எழுதுகிறார் என்று சுருக்கமாக பதில் சொல்லிவிடலாம் என நினைக்கிறேன். என்ன இருந்தாலும் எழுத்தாளர்களை முதன்மைபடுத்தி ஒரு சேவையை அறிமுகம் செய்வது சரியானது தானே.
இந்த வரிகளில் காணப்படும் ரசிக மனநிலையில் இருந்து மீண்டு வந்து, தொழில்முறை அக்கறையோடு எழுதும் போது, பிங்கேவை நமக்கான செயலி என கொண்டாட்ட்டத்துடன் அறிமுகம் செய்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
முதலில் இது நம்மூர் செயலி. இணையம் சார்ந்த டிஜிட்டல் பதிப்பு வசதியை அளித்து வரும் சென்னையைச்சேர்ந்த நோஷன் பிரஸ் ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்த சமூக வாசிப்பு செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இரண்டாவது காரணம், முதல் காரணத்திலேயே குறிப்பிடப்பட்டிருப்பதை கவனியுங்கள். ஆம், இது சமூக வாசிப்பு செயலி என்பது தான் முக்கியமானது. அதாவது, செல்போனிலேயே படைப்புகளையும், ஆக்கங்களையும் தொடர் வடிவில் வாசித்து, களிப்புற்று அது பற்றி அளவலாவி மகிழ்வதற்கான சேவையாக இது அமைகிறது.
மேலே வரும் வரிகளில் பல சொற்களை ஹைபர்லிங் இணைப்பு வசதியுடன் தனியே விவரிக்கப்பட வேண்டியவை. அவற்றை பார்ப்பதற்கு முன், தற்போதைய தமிழ் சூழலில் இந்த செயலியின் தேவை பற்றி பார்க்கலாம்.
இணையத்தின் தாக்கத்தால் இப்போது பலரும் வாசிப்பதில்லை எனும் புகார் இருக்கிறது. ( தமிழில் பொதுவாகவே வாசிப்பவர்கள் குறைவு என்பது வரலாற்று உண்மை. அதிலும், திவிர இலக்கிய வாசிப்பு என்றால் அந்த எண்ணிக்கை அற்ப சொற்பம் என்பது முக்காலமும் பொருந்தும் உண்மை. இந்த அளவுக்கு கூட, அறிவியல், தொழில்நுட்பம், இணையம் சார்ந்து படிப்பவர்கள் இல்லை என்பது என்னைப்போன்றவர்களின் புலம்ப,ல்).
அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையினர் புத்தகங்கள் பக்கமே வருவதில்லை எனும் கவலையும் இருக்கிறது. அவர்கள் வாட்ஸ் அப்பிலும், இன்ஸ்டாவிலும் மூழ்கி கிடப்பதோடு, டைப் செய்வதற்கு பதில் இமோஜிகளிலும், மீம்களிலும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
இந்த சூழலில், அச்சு பதிப்புகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பது அண்மையில் உணரப்பட்ட நிலையில், வாசிப்பிற்கு வழி செய்யும் ஒரு செயலியை வரவேற்பது தானே முறை. இந்த காரணத்திற்காகவே பிங்கே செயலியை வரவேற்க வேண்டும்.
இனி அடுத்ததாக, பிங்கே வாசிப்பை சாத்தியமாக்கும் வழிகளை பார்க்கலாம். ஏற்கனவே, பிரதிலிபி உள்ளிட்ட படைப்பு சார்ந்த செயலிகள் இருந்தாலும், பிங்கே சில பிரத்யேக அம்சங்களை கொண்டிருக்கிறது.
முதல் அம்சம், கதைகளை இது தொடர் வடிவில் படிக்க வழி செய்கிறது. இணையத்தில் தேய்வழக்காகி போய்விட்ட 90 ஸ் கிட்ஸ் அல்லது அதற்கு முந்தைய தலைமுறையினருக்கு தொடர் கதையின் அருமை நன்றாகவே தெரிந்திருக்கும். அச்சு இதழிகள் கொடி கட்டிப்பறந்த காலத்தில், ஒவ்வொரு இதழிலும் வெவ்வேறு தொடர்கதைகள் வெளிவந்து விரும்பி வாசிக்கப்பட்டன.
சாண்டில்யனும், பின்னாளில் சுஜாதாவும், பாலகுமாரனும் தான் தொடர் கதை சூப்பர் ஸ்டார்கள் என்றாலும், தி.ஜா தனது புகழ்பெற்ற மோகமுள் நாவலை கணையாழியில் தொடராக எழுதினார் என்பதை மறந்துவிடக்கூடாது.
தொடராக ஒரு படைப்பை படிப்பதில் வாசக நோக்கில் பல வித அணுகூலங்கள் உண்டு. அதில் முதன்மையானது, தொடர் வாசிப்பு பழக்கம்.
வார பத்திரிகைகள் இப்போது தான் தள்ளாடத்துவங்கியிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் தொடர்கதைகள் எப்போதோ மங்கிவிட்டன. பிங்கே இந்த தொடர் கதை வடிவை டிஜிட்டல் திரைக்கு கொண்டு வந்துள்ளது. புதிய கதைகளை, இதன் திரையில் அத்தியாயம் அத்தியாயமாக வாசிக்கலாம்.
அ-காலம் எழுதும் சாருநிவேதிதா, நெட்பிளிக்ஸ் மற்றும் வெப்சீரிஸ் பழக்கத்தை தொடர்பு படுத்து அழகாக இது பற்றி தனது அறிமுக உரையில் குறிப்பிட்டிருக்கிறார். பா.ராவும் சூரியனை முன் வைத்து அட்டகாசமாக துவங்கியிருக்கிறார்.
இந்த இரண்டு எழுத்தாளர்கள் தவிர, பிற முன்னணி எழுத்தாளர்களின் கதைகளையும் படிக்க முடிகிறது. மேலும் பலர் இணைவார்கள் என எதிர்பார்க்கலாம். தவிர, அண்ணாவின் படைப்புகள், கல்கி கதைகள் உள்ளிட்ட கிளாசிக்களையும் வாசிக்கலாம்.
ஆக, தொடர் வடிவில் கதைகளையும் ஆக்கங்களையும் வாசிக்கலாம் என்பதன் மூலம் வாசிப்பு பழக்கத்தை இந்த செயலி புதுப்பிக்க வழி செய்கிறது.
இதன் இன்னொரு சிறப்பு அம்சம் சமூக வாசிப்பு. அதாவது படித்து மகிழ்ந்த கதைகள் குறித்து, அந்த பக்கத்திலேயே சகர் வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்களுடன் கருத்து தெரிவித்து உரையாடலாம். இந்த வகையில் வாசிப்பு சார்ந்த சமூக ஊடக பரப்பாக இந்த செயலி அமையும் என எதிர்பார்க்கலாம்.
புக்ஷெல்ப் மற்றும் புக்ஷிப் போன்ற சமூக வாசிப்பு செயலிகள் போல தமிழில் ஒரு செயலி வராதா? என நினைத்த நாட்கள் உண்டு.இப்போது பிங்கே வந்திருக்கிறது.
பிங்கேவில் மேலும் சிறப்பு என்னவெனில், ஆங்கிலம் மற்றும் இந்திய உள்ளிட்ட மொழிகளில் அறிமுகம் ஆக உள்ள செயலி முதலில் தமிழில் வந்துள்ளது. அதோடு, ஐபோனுக்கான வடிவத்தை காத்திருப்பில் வைத்து ஆண்ட்ராய்டில் தமிழில் முதலில் வெளிவந்துள்ளது.
இந்த செயலியில் இணைந்து வாசிப்பதும், படித்ததில் பிடித்தது பற்றி பேசுவதும் எளிதாக இருக்கிறது. நீங்களும் இணையுங்கள்: https://bynge.in/
( பிங்கேவின் தமிழ் உச்சரிப்பு சரியானது என்று நம்புகிறேன். இல்லை என திருத்தம் சொல்லவும்).